விஜய்க்கு சிபிஎம் சண்முகம் எச்சரிக்கை.. அதிமுகவினரை அமைச்சரவையில் சேர்த்தால் ஆதரவு மறுபரிசீலனை

  • திருவாரூர்: அதிமுகவின் ஆதரவை தவெக பெற்றால் எங்கள் முடிவை மறுபரிசீலனை செய்வோம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் பெ சண்முகம் தெரிவித்துள்ளார். அதிமுகவினரை அமைச்சரவையில் தவெக சேர்த்தால் அது மக்கள் தீர்ப்புக்கு எதிரானதாகவே இருக்கும் என சண்முகம் கூறியுள்ளார். விஜய்யின் தவெக ஆட்சி அமைக்க இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரவு அளித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

    Advertisement

    திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் பெ சண்முகம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    Advertisement

    மக்கள் தீர்ப்புக்கு எதிரானது

    மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசு தமிழகத்தில் அமைய வேண்டும் என்ற நோக்கத்தோடு தவெகவிற்கு வெளியில் இருந்து ஆதரவு தருவது என்ற வகையில் இடதுசாரிகள் கட்சிகள், விசிக கட்சிகள் ஆதரவு கொடுத்து இருக்கிறோம். இதன் அடிப்படையில் தான் ஆட்சியும் அமையப் பெற்று இருக்கிறது. அதிமுகவை அமைச்சரவையில் சேர்த்துக் கொள்வதோ அவர்கள் ஆதரவைப் பெறுவது என்பதோ மக்களுடைய தீர்ப்புக்கு எதிரானது.

    அவர் சொல்லியிருக்கிற நல்லாட்சி என்பதற்கே இது விரோதமானது. ஏற்கனவே அதிமுக திமுகவுக்கு எதிராக தான் மக்கள் வாக்களித்து இருக்கிறார்கள். அத்தகைய அணியுனுடைய ஒரு ஆதரவினை பெற்று, தவெக ஆட்சி தொடரும் என்பது மக்களின் தீர்ப்புக்கு விரோதமாக அமையும். நிச்சயமாக இத்தகைய நிலைக்கு அவர்கள் செல்ல மாட்டார்கள் என்று நாங்கள் நம்புகிறோம்.

    Advertisement

    எங்கள் முடிவை மறுபரிசீலனை செய்வோம்

    ஒருவேளை இதனை மீறி, அதிமுகவில் உள்ள ஒரு தரப்பினை சேர்த்துக்கொண்டாலோ, அவர்களுடன் இணைந்து ஆட்சி அமைக்க வேண்டும் என்ற முடிவுக்கு தவெக சென்றால் நிச்சயமாக எங்கள் முடிவினை நாங்கள் மறு பரிசீலனை செய்வோம். இவ்வாறு அவர் கூறினார்.

    நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் விஜய்யின் தவெக பெரும் வெற்றியை பதிவு செய்தது. போட்டியிட்ட 233 தொகுதிகளில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றது. திமுக எதிர்க்கட்சி வரிசைக்கு சென்றது. அதிமுக பெரும் தோல்வியை சந்தித்தது. எனினும் விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் கட்சிக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால், காங்கிரஸ், கம்யூனிஸ்ட்கள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் தவெக ஆட்சி அமைத்து உள்ளது.

    Advertisement

    அதிமுகவினருக்கு தவெக அமைச்சரவையில் இடம்?

    இதில் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஜனாதிபதி ஆட்சி அமைந்துவிட கூடாது என்பதற்காகவும், மறைமுகமாக பாஜக ஆட்சி அமைந்துவிட கூடாது என்பதற்காகவும் வெளியில் இருந்து விஜய் ஆட்சி அமைக்க ஆதரவு கடிதத்தினை கொடுத்தது. இந்த நிலையில், சட்டமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெக அரசுக்கு அதிமுகவில் எஸ்பி வேலுமணி தலைமையிலான 25 எம்.எல்.ஏக்கள் ஆதரவு அளித்தனர்.

    எடப்பாடி பழனிசாமி தலைமையில் 22 எம்.எல்.ஏக்கள் எதிர்த்து வாக்களித்த நிலையில், எஸ்பி வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் ஆதரவாக வாக்களித்து இருப்பது அதிமுகவிற்குள் பிளவை ஏற்படுத்தியது. மேலும் விஜய்க்கு ஆதரவு அளித்துள்ள அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு விஜய் அமைச்சரவையிலும் இடம் கொடுக்க உள்ளதாகவும் தகவல் பரவி வந்தது.

    Advertisement

    விஜய் அமைச்சரவையில் 9 பேர் மட்டுமே நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கும் நேற்று முன் தினம் தான் இலாகா ஒதுக்கீடு செய்யப்பட்டது. நாளை மறுநாள் பொறுப்பு ஆளுநர் அர்லேகர் தமிழகம் வருகை தரும் நிலையில் அன்றைய தினமே அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் 2 பேருக்கு அமைச்சரவையில் இடம் கொடுக்கப்படுகிறது என்று கூறப்படுகிறது. அதே நேரம் அதிமுக எம்.எல்.ஏக்களுக்கும் இடம் கொடுக்கப்படும் என தகவல் பரவுவதால் பெ சண்முகம் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

    English Summary

    CPM state secretary Shanmugam has said the party would reconsider its support to the TVK government if it receives backing from AIADMK. He stated that the Left parties supported Vijay’s government only to prevent BJP rule through indirect means in the name of President’s Rule. Shanmugam also warned that including AIADMK members in the cabinet would go against the people’s mandate.