“தனுஷ் வருகையால் பயமா? யார் வந்தாலும் 30-40 வருசத்துக்கு விஜய் தான் CM” - அமைச்சர் CTR நிர்மல்குமார்

  • ராமநாதபுரம்: நடிகர் தனுஷின் அரசியல் வருகை குறித்து அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார் பேசியுள்ளார். யார் கட்சி தொடங்கினாலும் விஜய்யின் தலைமையில்தான் அடுத்த 30 - 40 ஆண்டுகள் ஆட்சி நடக்கும் என அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.

    Advertisement

    நடிகராக இருந்த விஜய், அரசியல் கட்சி தொடங்கி 2 ஆண்டுகளிலேயே தமிழகத்தில் ஆட்சியைப் பிடித்துள்ளார். முதல்வர் விஜய்யின் அரசியல் வெற்றி, சில நடிகர்களிடம் அரசியல் ஆசையை தூண்டி உள்ளது. குறிப்பாக, நடிகர் தனுஷ், சிவகார்த்திகேயன் ஆகியோர் தங்களின் ரசிகர் மன்ற நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சிகளை அரசியல் பொதுக்கூட்டம் போல் நடத்தி உள்ளனர்.

    Advertisement

    நடிகர் தனுஷ், தனது நற்பணி இயக்கத்தை, அரசியல் கட்சியாக மாற்ற முயற்சிப்பதாகவும், அதற்காக அவர் டெல்லியில் முகாமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. இதில், டெல்லியில் முகாமிட்டுள்ள நடிகர் என மறைமுகமாகக் குறிப்பிட்டு தவெக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசியிருந்தார்.

    அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, "புதிய புதிய நடிகர்கள் டெல்லி சென்று முகாமிட்டுள்ளனர். அதெல்லாம் நடக்காது. யார் வேண்டுமானாலும், எங்கிருந்து வேண்டுமானாலும் வரட்டும்.. புதிது புதிதாக யார் வந்தால் நமக்கென்ன? திமுக சைத்தானின் பிள்ளையாக மாறிவிட்டது. புதிதாக சைத்தானின் பிள்ளைகளும் வரும். எந்த நடிகர் டெல்லியில் முகாமிட்டுள்ளார். எந்த நடிகர் பொங்கலுக்கு டெல்லி சென்றார். எல்லாவற்றையும், பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்." எனப் பேசினார்.

    Advertisement

    இதுதொடர்பான கேள்விக்கு, நடிகர் தனுஷ் அரசியலுக்கு வருகை தருவதைக் கண்டு தவெகவினர் அஞ்சுவதாக திமுக முன்னாள் அமைச்சர் சேகர்பாபு விமர்சித்திருந்தார்.

    இதுகுறித்து, ராமநாதபுரத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார் பேசுகையில், "யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம். ஒட்டுமொத்த தமிழக மக்களின் அன்பைப் பெற்ற முதல்வர் விஜய்யின் தலைமையில்தான் அடுத்த 30-40 ஆண்டுகள் ஆட்சி நடக்கும். இதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.

    மு.க.ஸ்டாலினையும் உதயநிதியையும் காட்டி வாக்கு கேட்க முடியாத நிலைமைக்கு திமுக போய்விட்டது. மு.க.ஸ்டாலினையும் உதயநிதியையும் நம்பாமல், சேகர்பாபு போன்றோர் வேறு கட்சிகளில் சேர முடிவெடுத்திருக்கின்றனர். அதிமுகவிலும் இதே நிலைமைதான்" என்று தெரிவித்துள்ளார்.

    English Summary

    Minister CTR Nirmal Kumar has commented on actor Dhanush's potential entry into politics. He stated that regardless of who else might launch a political party, the governance for the next 30 to 40 years will be under the leadership of Vijay.