இடைத்தேர்தல்: விசிலுக்கு ஓட்டு போடச் சொன்ன தேர்தல் அலுவலர் மாற்றம்.. புதிய அலுவலர் நியமனம்!

  • தாராபுரம்: விசில் சின்னத்திற்கு வாக்களிக்குமாறு கூறியதாக மூதாட்டி புகார் அளித்த நிலையில் தாராபுரம் தொகுதி கொளிஞ்சிவாடி வாக்குச்சாவடியில் இருந்து தேர்தல் அலுவலர் தங்கமணி மாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக ராஜம்மாள் என்பவர் அந்தப் பணியில் அமர்த்தப்பட்டுள்ளார்.

    Advertisement

    தாராபுரம் மற்றும் மதுராந்தகம் ஆகிய இரண்டு சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப் பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இடைத்தேர்தலில் தவெக, திமுக, அதிமுக, இடதுசாரிகள், நாம் தமிழர் கட்சி என இத்தேர்தலில் 5 முனைப் போட்டி நிலவுகிறது.

    Advertisement

    இடைத்தேர்தல் நடைபெறும் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் தவெக சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ சத்யபாமா, திமுக சார்பில் சுகன்யா, அதிமுக சார்பில் பானுமதி, நாதக சார்பில் கார்த்திகா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் லட்சுமணன் ஆகியோர் களத்தில் உள்ளனர்.

    இந்நிலையில், தாராபுரத்தில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் மூதாட்டியை விசில் சின்னத்தில் வாக்களிக்க வாக்குச்சாவடி அலுவலர் நிர்பந்தம் செய்தது தொடர்பாக மூதாட்டியிடம் ஆர்.டி.ஓ விசாரணை நடத்தினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    தாராபுரம் தொகுதிக்குட்பட்ட கொளிஞ்சிவாடி வாக்குச்சாவடியில் வாக்களிக்க வந்த மூதாட்டியை விசில் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என வாக்குச்சாவடி அலுவலர் தங்கமணி என்பவர் நிர்பந்தம் செய்ததாக புகார் எழுந்தது. இது குறித்து மூதாட்டியிடம் ஆர்.டி.ஓ பெலிக்ஸ் ராஜா விசாரணை மேற்கொண்டார்.

    Advertisement

    அவரிடம் மூதாட்டி, தான் உதயசூரியனுக்கு வாக்களிக்க வந்ததாகவும், அப்போது அங்கிருந்த அலுவலர் தங்கமணி என்பவர் தான் அழைக்காமலேயே வந்து விசில் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என்று தெரிவித்தார் என்றும் கூறினார்.

    சூரியனுக்கு போடணும்னு சொன்னேன்.. விசிலுக்கு அழுத்த சொல்றாங்க.. தேர்தல் அலுவலர் மீது மூதாட்டி புகார்!

    விசாரணையைத் தொடர்ந்து, மூதாட்டியிடம் விசில் சின்னத்துக்கு ஓட்டு போடச் சொன்ன அதிகாரி மாற்றப்பட்டுள்ளார். மூதாட்டி புகாரை அடுத்து, அந்த வாக்குச்சாவடியில் பணியில் இருந்த அலுவலர் தங்கமணி மாற்றப்பட்டு, அவருக்குப் பதிலாக ராஜம்மாள் என்பவர் பணியில் அமர்த்தப்பட்டுள்ளார்.

    அங்கு மீண்டும் வாக்குப்பதிவு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனத் தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    English Summary

    Election official Thangamani was transferred from the Kolinjivadi polling station in the Dharapuram constituency following a complaint by an elderly woman alleging that he had asked her to vote for the tvk symbol. Rajammal has been appointed to the position in his place.