பாதுகாப்பு கேட்டு போலீஸுக்கு போனா..போலீஸ்கிட்ட இருந்தே பாதுகாக்கனும் போல! எக்குத்தப்பு SI-க்கு பாடம்

  • திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனியில் பெண் ஒருவருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், காவல் நிலைய சார்பு ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாதுகாப்பு கேட்டு காவல் நிலையத்திற்கு வந்த பெண்ணிடமே காவல் அதிகாரி அநாகரிகமாக நடந்துகொண்டதாக கூறப்படும் விவகாரம் காவல் துறை வட்டாரத்தில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

    Advertisement

    பழனி தாலுகா காவல் நிலையத்தில் சார்பு ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் ராஜகோபால். சில நாட்களுக்கு முன்பு தனிப்பட்ட பிரச்சனை தொடர்பாக பெண் ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க வந்ததாக கூறப்படுகிறது.

    Advertisement

    அப்போது வழக்கமான விசாரணை என்ற பெயரில் அந்த பெண்ணின் அலைபேசி எண்ணை ராஜகோபால் பெற்றுக்கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்குப் பிறகு புகார் தொடர்பாக நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக, அந்த பெண்ணுக்கு தொடர்ந்து அநாகரிகமான குறுஞ்செய்திகளை அனுப்பியதாக கூறப்படுகிறது.

    முதலில் சாதாரணமாக தொடங்கிய உரையாடல் பின்னர் ஆபாசமாக மாறியதாகவும், தொடர்ந்து தொந்தரவு ஏற்பட்டதால் அந்த பெண் அதிர்ச்சி அடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் மனஉளைச்சலுக்கு ஆளான அந்த பெண், சார்பு ஆய்வாளர் அனுப்பிய குறுஞ்செய்திகளின் ஆதாரங்களுடன் உயர் காவல் அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளார். இந்த புகாரை தொடர்ந்து திண்டுக்கல் காவல் துறை அதிகாரிகள் முதற்கட்ட விசாரணை மேற்கொண்டனர்.

    Advertisement

    விசாரணையில், ராஜகோபால் பெண்ணிடம் அநாகரிகமாக நடந்துகொண்டது உறுதியானதாக கூறப்படுகிறது. குறிப்பாக புகார் அளிக்க வந்த பெண்ணின் அலைபேசி எண்ணை தவறாக பயன்படுத்தி, தொடர்ந்து குறுஞ்செய்திகள் அனுப்பியிருப்பது காவல் துறையையே சங்கடத்திற்கு உள்ளாக்கியதாக சொல்லப்படுகிறது. பொதுமக்கள் பாதுகாப்புக்காக காவல் நிலையத்தை அணுகும் சூழலில், காவல் அதிகாரி ஒருவரே இவ்வாறு நடந்துகொண்டது குறித்து உயர் அதிகாரிகள் கடும் அதிருப்தி தெரிவித்ததாக தகவல்கள் கூறுகின்றன.

    இதையடுத்து ராஜகோபாலை உடனடியாக பணியிடை நீக்கம் செய்ய திண்டுக்கல் சரக காவல் துணை தலைவர் சசிமோகன் உத்தரவிட்டுள்ளார். இந்த சம்பவம் தற்போது திண்டுக்கல் பகுதி மக்களிடையே பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. "புகார் கொடுக்க வரும் பெண்களுக்கே பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டால், பொதுமக்கள் யாரை நம்புவது?" என்ற கேள்வியையும் பலர் எழுப்பி வருகின்றனர்.

    Advertisement

    கடந்த சில மாதங்களாக காவல் துறையினரின் ஒழுங்கு நடவடிக்கைகள் தொடர்பாக பல்வேறு குற்றச்சாட்டுகள் வெளியாகி வரும் நிலையில், இந்த சம்பவமும் அதில் ஒன்றாக இணைந்துள்ளது. குறிப்பாக பெண்கள் தொடர்பான புகார்களை கையாளும் போது காவல் துறையினர் மிகுந்த பொறுப்புடனும் மரியாதையுடனும் நடந்து கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது. இந்நிலையில், சம்பவம் தொடர்பாக துறை ரீதியான மேலதிக விசாரணையும் நடைபெற்று வருவதாக காவல் துறை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

    English Summary

    Palani SI Rajagopal suspended after woman accused him of sending obscene messages using contact details from police complaint.