வாய் பேச முடியாத பெண்ணை கடத்தி..சாலையில் தள்ளி விட்டுச் சென்ற கும்பல்! திண்டுக்கல்லில் சிக்கிய சேகர்

  • திண்டுக்கல்: புதுக்கோட்டை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளி பெண்ணை காரில் கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் தொடர்புடைய இருவரில் ஒருவர் ஏற்கனவே கைது செய்யப்பட்டிருந்த நிலையில், தலைமறைவாக இருந்த மற்றொரு குற்றவாளியையும் திண்டுக்கல்லில் வைத்து போலீசார் தற்போது கைது செய்துள்ளனர்.

    Advertisement

    புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 35 வயது பெண் ஒருவர் வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி ஆவார். திருமணம் ஆகாத அவர், தனது கிராமத்திலிருந்து சுமார் 10 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ஒரு அரிசி ஆலையில் வேலை செய்து வந்துள்ளார்.

    Advertisement

    சம்பவத்தன்று மாலை வேலை முடிந்த பிறகு, அவர் பேருந்துக்காக அருகிலுள்ள பஸ் நிறுத்தத்தில் காத்திருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அந்த வழியாக காரில் வந்த இரண்டு பேர், "ஊருக்குள் இறக்கி விடுகிறோம்" என்று கூறி அந்த பெண்ணை அழைத்துள்ளனர். ஆனால் அவர் மறுத்ததாக தெரிகிறது. இதையடுத்து கட்டாயப்படுத்தி அவரை காரில் ஏற்றி சென்றதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

    பின்னர், சற்று தொலைவில் உள்ள குளக்கரை அருகேயுள்ள தனிமையான பகுதிக்கு அழைத்து சென்று, அந்த பெண்ணை இருவரும் பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதன் பிறகு மயக்க நிலையில் இருந்த அந்த பெண்ணை கறம்பக்குடி - ஆலங்குடி சாலையில் தள்ளிவிட்டு இருவரும் தப்பிச் சென்றுள்ளனர்.

    Advertisement

    சிறிது நேரத்திற்கு பிறகு மயக்கம் தெளிந்த அந்த பெண் சத்தமிட்டு அழுதுள்ளார். இதைக் கேட்டு அப்பகுதி மக்கள் அங்கு சென்று அவரை மீட்டுள்ளனர். பின்னர் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், பெண்ணை மருத்துவ பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணையை தொடங்கினர்.

    விசாரணையில், இந்த சம்பவத்தில் மணக்கொல்லை கிராமத்தை சேர்ந்த கார் உரிமையாளரும் ஓட்டுநருமான சேகர் (53), அவரது நண்பரான கூலித்தொழிலாளி மாரிமுத்து (52) ஆகியோர் தொடர்புடையவர்கள் என்பது தெரியவந்தது.

    இதையடுத்து முதலில் மாரிமுத்துவை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து தலைமறைவாக இருந்த சேகரை தேடி வந்த போலீசார், திண்டுக்கல்லில் பதுங்கியிருந்த அவரை கைது செய்துள்ளனர். தற்போது அவர் திண்டுக்கல் நகர் தெற்கு காவல் நிலையத்தில் வைத்து விசாரணைக்கு உட்படுத்தி வருகின்றனர். விசாரணை நிறைவடைந்தது, அவர் புதுக்கோட்டைக்கு அழைத்துச் செல்லப்படவுள்ளார்.

    English Summary

    Police arrested second accused Sekar in Pudukkottai disabled woman assault case after manhunt in Dindigul.