விஜய் வெற்றிக்கு இன்ஸ்டாகிராமை குறை சொல்லி ஆபத்தில் சிக்கும் திமுக.. 1967 பாடம் மறந்துவிட்டதா?

  • சென்னை: தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி, நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (TVK) மாபெரும் வெற்றியைப் பெற்று, அவர் முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள சூழலில், ஆளுங்கட்சியான திமுகவிற்குள் தோல்வி குறித்த சுயபரிசோதனைகளும் விவாதங்களும் இன்னும் ஓயவில்லை.

    Advertisement

    அண்மையில் நடைபெற்ற திமுகவின் உயர்மட்டக் குழுக் கூட்டத்தில், அக்கட்சியின் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் மற்றும் துணைத் தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர், "இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளப் பிரச்சாரங்களையும், குழந்தைகளைக் குறிவைத்துத் தவெக நடத்திய உணர்வுப்பூர்வமான பரப்புரைகளையும் திமுக குறைத்து மதிப்பிட்டதே நமது தோல்விக்குக் காரணம்" என்று குறிப்பிட்டிருந்தனர்.

    Advertisement

    இருப்பினும், திமுக தலைமையின் இந்த வாதம் தங்களது உண்மையான தோல்விக்கான காரணங்களை மூடிமறைக்கும் ஒரு முயற்சியே தவிர வேறில்லை என்று அரசியல் விமர்சகர்களும் மூத்த பத்திரிகையாளர்களும் சாடியுள்ளனர். "வெறும் இன்ஸ்டாகிராம் மற்றும் சமூக வலைத்தள இன்ஃப்ளூயன்சர்கள் மட்டுமே ஒரு தேர்தலின் வெற்றியைத் தீர்மானித்துவிட முடியாது. மக்கள் ஏன் திமுகவை நிராகரித்தார்கள் என்ற தரைமட்ட யதார்த்தத்தை ஆராயாமல், தொழில்நுட்பத்தின் மீது பழியைப் போடுவது திமுகவின் எதிர்கால அரசியலுக்குப் பலன் தராது" என்ற வலுவான குரல் தற்போது எழுந்துள்ளது.


    வரலாற்றை மறந்ததா திமுக? 1967-ல் என்ன நடந்தது?

    புதிய தொழில்நுட்பங்களையும் மக்கள் ஊடகங்களையும் அரசியல் பிரச்சாரத்திற்குப் பயன்படுத்துவது தமிழகத்திற்குப் புதிய ஒன்றல்ல; சொல்லப்போனால், இந்த வித்தையைத் தமிழக அரசியலுக்குக் கற்றுக்கொடுத்ததே திமுகதான் என்பதை தற்போதைய திமுக தலைமை மறந்துவிட்டதாக விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

    Advertisement

    1967-ஆம் ஆண்டு, அதுவரை அசைக்க முடியாத சக்தியாக இருந்த காங்கிரஸ் பேரியக்கத்தைத் தங்களது அசாத்திய பிரச்சார உத்திகளால் வீழ்த்தி அண்ணா தலைமையில் திமுக முதன்முறையாக அரியணை ஏறியது. அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றிக்கு திமுக பயன்படுத்திய ஆயுதங்கள் நாடகமும் சினிமாவும் தான்.

    அன்றைய காலகட்டத்தில் சி.என். அண்ணாதுரை, மு.கருணாநிதி போன்ற தலைவர்கள் தங்களது அசாத்திய எழுத்தாற்றல் மற்றும் வசனங்கள் மூலம் திராவிடக் கொள்கைகளையும், காங்கிரஸ் எதிர்ப்பு மனநிலையையும், இந்தி எதிர்ப்பு உணர்வையும் எளிய மக்களிடம் கொண்டு சேர்த்தனர். வெறும் மேடைப் பேச்சுகளாக இருந்த அரசியல் கருத்துக்களை, திரைப்படங்களின் மூலம் மக்களின் அன்றாட உணர்வாகவும், அடையாளமாகவும் மாற்றினர்.

    Advertisement

    அரசியல் வகுப்பறையாக மாறிய சினிமா:

    அன்றைய காலகட்டத்தில், திரைப்படங்கள் மீண்டும் மீண்டும் பார்க்கப்படும் ஒரு பெரும் மக்கள் ஊடகமாக இருந்தன. திமுக ஆதரவு எழுத்தாளர்களும், பாடலாசிரியர்களும் தங்களது வரிகள் மூலமும், வசனங்கள் மூலமும் கட்சியின் கொள்கைகளை மறைமுகமாக மக்கள் மனதில் பதிய வைத்தனர். எம்.ஜி. ராமச்சந்திரன் (MGR) போன்ற மாபெரும் மக்கள் செல்வாக்கு மிக்க நடிகரைத் தங்களது கொள்கை விளக்கப் பெட்டகமாக திமுக முன்னிறுத்தியது. ஏழை எளிய மக்களின் காவலனாக எம்.ஜி.ஆர் திரையில் தோன்றிய காட்சிகள், சாதாரண வாக்காளர்களை திமுகவின் பக்கம் காந்தமாக ஈர்த்தன. "உதய சூரியனின் பார்வையிலே உலகம் விழித்துக் கொண்ட வேளையிலே.." என்று இரட்டை அர்த்தம் வரும்படி பல பாடல்களை வைத்து திமுகவுக்கு ஓட்டுக்களை ஈர்த்தனர்.

    Advertisement


    பத்திரிகைகளின் பலம் மற்றும் இந்தி எதிர்ப்பு போராட்டம்:

    சினிமா மட்டுமல்லாது, 'முரசொலி' போன்ற தங்களது சொந்தப் பத்திரிகைகள், கட்சி இலக்கியங்கள், துண்டுப் பிரசுரங்கள் மற்றும் வீதி வாரியான போராட்டங்கள் மூலம் திமுக 1960-களில் மிகப்பெரிய மக்கள் இயக்கத்தைக் கட்டமைத்தது. மத்திய அரசின் இந்தித் திணிப்பிற்கு எதிரான போராட்டத்தை ஒரு கொள்கை முரணாகப் பார்க்காமல், தமிழ் மொழியின் மீதான அச்சுறுத்தலாகவும், மானப் பிரச்சினையாகவும் மக்கள் மத்தியில் கொண்டு சேர்த்ததில் அன்றைய அச்சு ஊடகங்களுக்கு முக்கியப் பங்கு இருந்தது.

    சுருக்கமாகச் சொன்னால், 1967-ல் அன்றைய நவீன தொழில்நுட்பங்களான சினிமாவையும், நாடகங்களையும், அச்சு ஊடகங்களையும் தங்களது திராவிட அடையாளத்தை நிலைநிறுத்தவும், காங்கிரஸ் எதிர்ப்பு அலையை உருவாக்கவும் திமுக மிகச் சரியாகப் பயன்படுத்தியது. எனவே, 2026-ல் தவெக தலைவர் விஜய், இன்றைய காலகட்டத்தின் நவீன தொழில்நுட்பமான இன்ஸ்டாகிராம் மற்றும் டிஜிட்டல் தளங்களை வாக்குகளைத் திரட்டப் பயன்படுத்துவதில் என்ன தவறு இருக்க முடியும் என்ற கேள்வி எழுகிறது.

    Advertisement

    திமுகவும் தான் இன்ஸ்டாகிராமில் இறங்கியது

    மு.க.ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் தங்களது பேச்சில், தவெகவின் டிஜிட்டல் பிரச்சாரத்தை திமுக சரியாக எதிர்கொள்ளவில்லை என்று கூறியுள்ளனர். ஆனால், உண்மை அதுவல்ல. கடந்த சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின்போது, திமுக ஐடி விங் (IT Wing) கோடிக்கணக்கில் பணத்தைச் செலவழித்து, சமூக வலைத்தளங்களில் நூற்றுக்கணக்கான இன்ஃப்ளூயன்சர்களை (Influencers) பணிக்கு அமர்த்தி, பல்வேறு வீடியோக்களையும், ரீல்ஸ்களையும் (Reels) தொடர்ச்சியாக வெளியிட்டு வந்தது. ஒரே மாதிரியாக பலரும் வீடியோ வெளியிடுவதை பார்த்து திமுக சார்பில்தான் இவர்கள் வீடியோ வெளியிடுகிறார்கள் என்று அப்போதே விவாதிக்கப்பட்டது.

    ஆனாலும், அந்த டிஜிட்டல் உத்திகளை மக்கள் ஏன் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதை ஆராய்வதில்தான் திமுகவின் மீட்சி அடங்கியுள்ளது.

    அரசியல் ஆய்வாளர்களின் கருத்துப்படி, பிரச்சார உத்திகள் என்பது ஏற்கனவே மக்கள் மனதில் இருக்கும் உணர்வுகளைத் தூண்டும் ஒரு கருவி மட்டுமே. 1967-ல் காங்கிரஸ் மீது மக்களுக்கு இருந்த அதிருப்தியைச் சினிமாவும் பத்திரிகைகளும் பிரதிபலித்தன. அதேபோல், 2026-ல் திமுக அரசின் மீதும், அதன் அரசியல் மற்றும் நிர்வாகக் குறைபாடுகள் மீதும் மக்களுக்கு இருந்த தீவிர அதிருப்தியை இன்ஸ்டாகிராம் மற்றும் சமூக வலைத்தளங்கள் வெளிப்படுத்தின.

    திமுக வெளியிட்ட இன்ஃப்ளூயன்சர் வீடியோக்கள் அனைத்தும் செயற்கையாகவும், மக்கள் சந்திக்கும் நிஜப் பிரச்சினைகளிலிருந்து விலகியும் இருந்தன. மறுபுறம், தவெகவின் டிஜிட்டல் பக்கங்கள் எளிய குடும்பங்களின் பொருளாதாரப் பின்னணி, இளைஞர்களின் போதை பிரச்சினை மற்றும் புதிய மாற்றத்திற்கான தேவை போன்ற யதார்த்தங்களை உணர்வுப்பூர்வமாகப் பேசின. இதனால்தான் மக்கள் திமுகவின் விளம்பரங்களை நிராகரித்துவிட்டு, தவெகவின் செய்திகளை ஏற்றுக்கொண்டனர்.


    தோல்விக்கான நிஜக் காரணங்களை மறைக்க கூடாது

    வரி உயர்வு, உட்கட்சி நிர்வாகிகளை ஒருங்கிணைக்காதது, சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் மற்றும் அதை மறைக்க முற்பட்டது, தேர்தல் வியூக வகுப்பாளர்களை அதிகமாக நம்பி கட்சியினருடன் தொடர்பு குறைந்தது மற்றும் கூட்டணிக் கட்சிகளைச் சரியாகக் கையாளாத போக்கு போன்ற அடிப்படைத் தோல்விகளை ஒப்புக்கொள்ளத் திமுக தலைமை இன்னும் தயாராக இல்லை என்பதையே ஸ்டாலினின் இந்த 'இன்ஸ்டாகிராம் வாதம்' காட்டுகிறது.

    ஒவ்வொரு காலகட்டத்திலும் புதிய தொழில்நுட்பங்கள் அரசியலை மாற்றியமைப்பது இயல்பான ஒன்று. அன்று அண்ணா மற்றும் கருணாநிதிக்குச் சினிமாவும், பத்திரிகையும் கைகொடுத்தது என்றால், இன்று விஜய்க்கு இன்ஸ்டாகிராமும், யூடியூபும் கைகொடுத்துள்ளது. கருவியைக் குறை கூறுவதை விடுத்து, மக்கள் மனதில் தங்களுக்கு எதிராக ஏன் இவ்வளவு பெரிய அதிருப்தி அலை வீசியது என்பதை திமுக சுயபரிசோதனை செய்ய வேண்டும். தவறான காரணங்களைத் தேடி ஓடினால், அது தற்காலிகமாக திமுகவினருக்கு உற்சாகத்தை தருமே தவிர, வரும் உள்ளாட்சி மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களிலும் திமுக மீண்டெழுவது என்பது சாத்தியமில்லாத ஒன்றாகவே மாறிவிடும்.

    English Summary

    While MK Stalin points to Instagram campaigning as the reason for TVK's win, critics remind how DMK used cinema in 1967 and urge the party to introspect on real anti-incumbency.