மோடி வழியில் விஜய் ஆட்சி நடத்துகிறார்.. விமர்சனத்தை ஏற்கும் பக்குவம் இல்லை.. கனிமொழி கடும் தாக்கு

  • சென்னை: விளாத்திக்குளம் திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனை பாளையங்கோட்டை சிறையில் திமுக எம்பி கனிமொழி சந்தித்தார். தவெக அரசுக்கு ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையில்லை என்றும், விமர்சனங்களை ஏற்கும் மனப்பக்குவம் முதல்வர் விஜய்க்கு இல்லை என்றும் விமர்சித்ததோடு மோடி வழியிலேயே விஜய் ஆட்சி நடத்தி வருவதாகவும் குற்றம்சாட்டினார்.

    Advertisement

    தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டம் ஜூலை 18 ஆம் தேதியன்று இரவில் நடைபெற்றது. அப்போது, கூட்டத்தில் கலந்துகொண்ட விளாத்திகுளம் சட்டப்பேரவை உறுப்பினர் மார்க்கண்டேயன், பேரவையை பூட்டினாலும் முதல்வர் விஜயின் எலும்பை உடைப்போம் என்று பேசியது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

    Advertisement

    இந்த மிரட்டல் சம்பவம் தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பி கண்ணனிடம் தவெகவினர் புகார் அளித்தனர். இதையடுத்து, மூன்று பிரிவுகளின் கீழ் தூத்துக்குடி மாவட்ட குற்றப் பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்டிருப்பதற்கு திமுகவினர் கண்டனம் தெரிவித்தனர்.

    இந்நிலையில், பாளையங்கோட்டை சிறையில் விளாத்திக்குளம் திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனை திமுக துணைப் பொதுச் செயலாளரும், எம்பியுமான கனிமொழி இன்று சந்தித்தார். எம்எல்ஏக்கள் அனிதா ராதாகிருஷ்ணன், கருணாநிதி, அப்துல் வகாப் மற்றும் கீதா ஜீவன் ஆகியோரும் உடன் சென்றிருந்தனர்.

    அதைத்தொடர்ந்து, திமுக எம்பி கனிமொழி செய்தியாளர்களிடம் கூறியதாவது: சிறையில் அடைக்கப்பட்டுள்ள விளாத்திக்குளம் திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் நலமாக இருக்கிறார். தவெகவை விமர்சிப்போர் மீது கைது நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கனவே எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணனை அச்சுறுத்தலும், வழக்கும் போடப்பட்டது. அவரையும் கைது செய்து, சிறையில் அடைக்க முயற்சித்தனர்.

    Advertisement

    தவெக அரசின் மீது கருத்து சொல்லக்கூடிய யூடியூபர் உள்ளிட்ட அனைவரையும் சிறைக்கு அனுப்ப தவெக அரசு முயற்சி செய்து கொண்டே இருக்கிறது. தவெகவுக்கு ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையில்லை, அக்கறை இல்லை, மக்கள் மீது எந்த கவலையும் இல்லை என்கிற வகையில், தனது காவல் துறையை எதிர்க்கட்சியினரை அடக்குவதற்கு மட்டுமே பயன்படுத்திக் கொண்டிருக்கிறது. தவெகவை சார்ந்தவர்கள் திமுக ஆட்சியில் ஸ்டாலின் ஆட்சி பொறுப்பில் இருந்தபோது விஜய் எவ்வளவு விமர்சித்து பேசியிருக்கிறார் என்பதை எல்லோரும் பார்த்திருப்போம்.

    அந்த சமயத்தில் திமுக இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை. தவெகவுக்கு ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையில்லை. யார் விமர்சித்தாலும் அவர்களுக்கு விமர்சனத்தை ஏற்கும் மனப் பக்குவம், மனப்பான்மை விஜய்க்கு இல்லை. யாருக்கு பயந்து கொண்டு அரசியல் செய்கிறார்களோ அவர்கள் வழியிலேயே விஜயும் அரசியல் செய்கிறார்.

    Advertisement

    மோடி வழியில் விஜய் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறார். பாஜக என்ற பெயரை கூட சொல்ல அச்சப்படுகிறார்கள். பாஜகவுக்கு எதிராக தெருக்குரல் அறிவு கருத்தைப் பதிவு செய்யும்போது, போராட்டத்தில் ஈடுபடும்போது எப்படி கையாளுகின்றனரோ, அதே வகையில் இங்கு போராடக் கூடியவர்களையும் தவெக அரசு கையாண்டு வருகிறது.

    திமுக தன்னுடைய கொள்கை, கருத்துகளில் இருந்து தமிழ்நாடு என்று வரும்போது எப்போதும் விட்டுக் கொடுத்ததில்லை, விட்டுக் கொடுக்கவும் மாட்டோம். எந்த காலத்திலும் திமுகவும், அதிமுகவும் நெருங்கி வந்தது கிடையாது என்று கூறினார்.

    English Summary

    DMK MP Kanimozhi criticized the Vijay led government after meeting jailed DMK MLA Markandeyan, alleging misuse of police against political opponents.