சென்னை: நேற்று தமிழ்நாட்டில் திருச்சி, திருநெல்வேலி, சேலம், கரூர், சிவகங்கை, ஈரோடு, நாகப்பட்டினம் உட்பட பல மாவட்டங்களில் அரசு பள்ளிகளில் மதிய உணவு முட்டை இல்லாமல் வழங்கப்பட்டுள்ளது. சத்துணவு திட்ட வரலாற்றில் இப்டி நடப்பது இதுவே முதல்முறை எனக் கூறப்படுகிறது.
தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு சத்துணவுடன் தினமும் முட்டை வழங்கப்படுகிறது. அரசுப் பள்ளிகளில் மதிய உணவுத் திட்டம் காமராஜர் ஆட்சியில் செயல்படுத்தப்பட்டது. திமுக ஆட்சியில் இத்திட்டம் தொடர்ந்து வந்த நிலையில் அதன்பிறகு, எம்ஜிஆர் தலைமையிலான அதிமுக ஆட்சியில், இந்தத் திட்டம் சத்துணவு திட்டமாக மாற்றப்பட்டது.
கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சியில், 1989 ஆம் ஆண்டு முதல் சத்துணவில் வாரம் ஒரு நாள் முட்டை வழங்கப்பட்டு வந்தது. பின்னர் 2006-ல் திமுக ஆட்சிக் காலத்தில் வாரத்தில் 2 நாள் முட்டைகள் வழங்கப்பட்டு வந்தன. 2007 ஆம் ஆண்டு காமராஜர் பிறந்த நாள் முதல் வாரத்தில் 3 நாள் முட்டைகள் என்றானது. அதைத்தொடர்ந்து, வாரத்தில் 5 நாட்கள், அதாவது நாள்தோறும் சத்துணவில் முட்டை என இந்தத் திட்டம் விரிவுபடுத்தப்பட்டது. ஏழை எளிய மாணவர்களின் ஊட்டச்சத்துக் குறைபாட்டைப் போக்கும் வகையில் நாள்தோறும் முட்டை வழங்கப்படுவது மிகவும் வரவேற்பை பெற்றது. ஆட்சிகள் மாறினாலும், இந்தத் திட்டத்தில் சமரசமின்றி, மாணவர்களுக்கு சத்துணவில் நாள்தோறும் முட்டை வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று தமிழ்நாட்டின் பெரும்பாலான மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில் மாணவர்களுக்கு முட்டை வழங்கப்படவில்லை. நேற்றைய நாளுக்கான முட்டைகளை அனுப்பாததால், மாணவர்களுக்கு வழங்கப்படவில்லை என சத்துணவு ஊழியர்கள் தெரிவித்தனர். ஒருசில பள்ளிகளில் பள்ளிக்கு வராத மாணவர்களுக்காக வைக்கப்பட்ட முட்டை இருப்பு இருந்தது. அதைக் கொண்டு ஒரு சில மாணவர்களுக்கு மட்டும் வழங்கப்பட்டது. திருச்சி, கரூர், நாமக்கல், ஈரோடு, சேலம், திருநெல்வேலி, சிவகங்கை மற்றும் நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் உள்ள மாணவர்களுக்கு முட்டை இல்லாமலே மதிய உணவு வழங்கப்பட்டதாகவும், அதே சமயம் திருப்பூர், மதுரை மற்றும் திண்டுக்கல் மாவட்டப் பள்ளிகளுக்கு முட்டைகள் வந்து சேர்ந்ததாகவும் கூறப்படுகிறது. மதியம் சத்துணவில் முட்டை இல்லாததை கண்டு மாணவர்கள் அதிர்ச்சி அடைந்து ஆசிரியர்களிடம் முறையிட்டனர். வியாழக்கிழமையுடன் காலாண்டுத் தேர்வுகள் முடிவடைந்த நிலையில், வெள்ளிக்கிழமையன்று பள்ளிகள் செயல்படுவது குறித்த தகவல் பரிமாற்றத்தில் ஏற்பட்ட குளறுபடியால், மாநிலத்தின் பல மாவட்டங்களில் உள்ள அரசுப் பள்ளிகளில் மதிய உணவுடன் முட்டைகள் வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. சத்துணவு திட்ட வரலாற்றில் இது போன்றதொரு குறைபாட்டைத் தாங்கள் கண்டதில்லை என்று ஆசிரியர்கள் தெரிவித்தனர். இரு துறைகளுக்கு இடையிலான தகவல் தொடர்பு இடைவெளியால் இது போன்ற நிகழ்வு முதல் முறையாக நடந்திருப்பதாகவும், இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தவும் ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். முட்டைத் தேவை குறித்த தகவல் பரிமாற்றத்தில் ஏற்பட்ட குளறுபடியால், சில மாவட்டங்களில் அதிகாரிகள் விநியோகஸ்தர்களுக்கு முட்டைக்கான தேவைக் குறிப்பை அனுப்பத் தவறியதே இதற்குக் காரணம் எனத் தகவல் வெளியாகியுள்ளது. காலாண்டுத் தேர்வுகள் முடிந்த மறுநாளான வெள்ளிக்கிழமையன்று பள்ளிகள் செயல்படுமா என்பது குறித்து மதிய உணவுத் திட்டப் பணியாளர்களுக்கு முன்கூட்டியே தெரிவிக்கப்படவில்லை. மாணவர்களுக்குத் தேவையான அறிவுறுத்தல்களை வழங்குவதற்காக செப்டம்பர் 25 அன்று பள்ளிகள் செயல்படும் என்ற தகவல் எங்களுக்குத் தாமதமாகவே கிடைத்தது. முட்டைகளை முன்கூட்டியே கொள்முதல் செய்ய வேண்டியுள்ளது. சில மாவட்டங்கள் மற்றும் பள்ளிகளில் மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டாலும், குறுகிய கால அவகாசத்தில் மற்ற இடங்களில் முட்டைகளை வழங்க முடியவில்லை என்று மதிய உணவுத் திட்டப் பணியாளர் ஒருவர் கூறியுள்ளார். இதற்கிடையில், தமிழ்நாடு உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் ஏ. மலைக்கொழுந்தன், இந்தக் குறைபாடு குறித்து விசாரணை நடத்தக் கோரிக்கை விடுத்துள்ளார். மாநிலம் முழுவதும் இத்திட்டம் சீராகச் செயல்படுத்தப்பட்ட போதிலும், சில மாவட்டங்களில் உள்ள மாணவர்களுக்கு முட்டைகள் வழங்கப்பட்ட நிலையில் மற்ற மாவட்டங்களில் வழங்கப்படவில்லை என்று முதலமைச்சர் மற்றும் தலைமைச் செயலாளரிடம் முறையிடப்பட்டுள்ளது. இந்தத் தவறுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறும், மதிய உணவுத் திட்டத்தின் கீழ் முட்டைகள் தடையின்றி வழங்கப்படுவதை உறுதி செய்யுமாறும் அந்தச் சங்கம் அரசை வலியுறுத்தி உள்ளது.