கர்நாடகாவில் 3 பேர் சுட்டுக்கொலை..தமிழர்களுக்கு பாதுகாப்பில்லையா? - தவாக வேல்முருகன் ஆவேசம்

  • சென்னை: கர்நாடகா மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம் ஹனூர் வனப்பகுதியில் தமிழர்கள் 3 பேரை என்கவுன்டரில் வனத்துறை சுட்டுக் கொன்ற சம்பவம் குறித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.

    Advertisement

    சாம்ராஜ்நகர் மாவட்டம் காவிரி வனவிலங்கு சரணாலயத்திற்குட்பட்ட ஹனூர் பகுதியில் 4 பேர் சட்டவிரோதமாக மானை வேட்டையாடிவிட்டு இறைச்சியை பிரிக்கும்போது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாகவும், ஒருவர் தப்பி ஓடிய நிலையில், 3 பேர் கொல்லப்பட்டதாகவும் வனத்துறை தெரிவித்துள்ளது.

    Advertisement

    காணாமல் போன மேய்ச்சல் மாடுகளை தேடியே அந்த 4 பேரும் வனப்பகுதிக்குள் சென்றதாகவும், இரவாகி விட்டதால் அவர்கள் அங்கேயே தூங்கிக் கொண்டிருந்ததாகவும், அப்போது அங்கு வந்த வனத்துறையினர் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி 3 பேரை கொன்றுள்ளதாகவும், இறந்தவர்களின் உறவினர்கள் குற்றம்சாட்டி உள்ளனர். 3 பேரின் உடல்களை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்நிலையில் இது தொடர்பாக தவாக தலைவர் தி.வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம், அனூர் தாலுகா வனப்பகுதியில் மூன்று தமிழர்கள் வனத்துறையினரின் துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்டுள்ள சம்பவத்திற்கு தமிழக மக்களின் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    Advertisement

    வனத்துறை அவர்கள் வேட்டையாடச் சென்றதாகக் கூறுகிறது. அதேவேளையில், உயிரிழந்தவர்களின் உறவினர்களும் அப்பகுதி மக்களும் அவர்கள் திரும்பி வராத மாடுகளைத் தேடிக் காட்டுக்குள் சென்றவர்கள் என்று தெரிவிக்கின்றனர். இரு தரப்பின் கூற்றுகளிலும் உண்மை என்ன? என்பதை வெளிக்கொண்டு வர வேண்டிய பொறுப்பு கர்நாடக அரசுக்கு உள்ளது.

    ஆனால் எத்தகைய குற்றச்சாட்டு இருந்தாலும், கைது செய்ய முடிந்தவர்களை ஏன் சுட்டுக்கொல்ல வேண்டும்? மடக்கிப் பிடிக்க முடியாத அளவுக்கு என்ன நடந்தது? துப்பாக்கிச்சூடு நடத்த வேண்டிய கட்டாயம் உண்மையிலேயே இருந்ததா? இந்தக் கேள்விகளுக்கு, கர்நாடக அரசு ஆதாரங்களுடன் பதில் வேண்டும். தமிழர்களின் உயிரை துப்பாக்கிக் குண்டுகளால் தீர்மானிக்கும் நிலை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.

    Advertisement

    2015 இல் ஆந்திரக் காட்டில் 20 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தின் காயமே இன்னும் முழுமையாக ஆறாத நிலையில், கர்நாடகாவில் மேலும் மூன்று தமிழர்களின் உயிர் பறிக்கப்பட்டுள்ளது.

    20 தமிழர்களின் மரணத்திலிருந்து எந்தப் பாடமும் கற்கவில்லையா? ஒரு மனிதன் குற்றவாளி என்றால் நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும். குற்றம் நிரூபிக்கப்பட்டால் சட்டப்படி தண்டிக்க வேண்டும். கையில் துப்பாக்கியை வைத்திருக்கிறோம் என்பதற்காக, அதை எளிய மக்கள் மீது பயன்படுத்தக் கூடாது.

    தமிழ்நாடு அரசே, கர்நாடக மாநிலத்தில் மூன்று தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார்கள். தமிழ்நாடு அரசு இதை எப்படி எதிர்கொள்ளப் போகிறது? கர்நாடக அரசிடம் உடனடியாக விளக்கம் கேட்க வேண்டும். சம்பவத்தின் முழு உண்மையையும் கண்டறியச் சுயாதீனமான, வெளிப்படையான விசாரணை நடத்த வலியுறுத்த வேண்டும்.

    Advertisement

    விசாரணை முடியும் வரை ஆதாரங்கள் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். உயிரிழந்தவர்களின் குடும்பங்களைத் தமிழக அரசு நேரடியாக சந்தித்து, உரிய நிவாரணம் மற்றும் சட்ட உதவியை வழங்க வேண்டும். உயிர் பிழைத்த நபரின் வாக்குமூலம் எந்த அழுத்தமும் இல்லாமல் பதிவு செய்யப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

    இந்த மூன்று உயிர்களின் மரணத்திற்கு பொறுப்பானவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கர்நாடக அரசை, தமிழ்நாடு அரசு வலியுறுத்த வேண்டும்.

    சுட்டுக்கொல்லப்பட்டு உயிரிழந்த அந்த மூன்று தமிழர்களும் வேறு யாருமல்ல. மேட்டூர் அணை உருவாக்கப்பட்டபோது தங்களின் பூர்வீக வாழ்விடங்களையும் நிலங்களையும் இழந்து, அங்கிருந்து இடம்பெயர்ந்து கர்நாடக எல்லைப் பகுதிகளில் குடியேறிய மக்களின் தலைமுறையைச் சேர்ந்தவர்கள். அந்த மக்களின் தலைமுறைகள் இன்று கர்நாடக மண்ணில் வாழ்கின்றன.

    Advertisement

    அவர்கள் அந்நியர்கள் அல்ல. அவர்கள் காவிரியின் வரலாற்றோடு வாழும் தமிழர்கள். காவிரி நீர் விவகாரத்தில் இரு மாநிலங்களுக்கும் அரசியல் முரண்பாடுகள் இருக்கலாம். ஆனால் அந்த முரண்பாடுகள் எல்லைப் பகுதிகளில் வாழும் அப்பாவி மக்களின் உயிரைப் பறிக்கும் சூழலாக மாறக்கூடாது. தமிழ்நாடு அரசு இதையும் தெளிவாக வலியுறுத்த வேண்டும்.

    காவிரி நீருக்கான உரிமையை போலவே, காவிரிக் கரையில் வாழும் தமிழர்களின் உயிருக்கும் பாதுகாப்பு வேண்டும். தமிழ்நாடு முதலமைச்சர், கர்நாடக முதலமைச்சரிடம் உடனடியாக பேசி, இந்தத் துப்பாக்கிச் சூடு குறித்து முழுமையான, வெளிப்படையான விசாரணையை உறுதி செய்ய வேண்டும். நீதிமன்ற விசாரணையுடன் நின்றுவிடாமல், சுயாதீன விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்த வேண்டும். உயிரிழந்த மூன்று தமிழர்களின் குடும்பங்களுக்கு உரிய இழப்பீடும் சட்ட உதவியும் தமிழக அரசு வழங்க வேண்டும்.

    உயிர் பிழைத்த நபரின் பாதுகாப்பையும் மருத்துவ சிகிச்சையையும் உறுதி செய்ய வேண்டும். சம்பவத்தில் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். கர்நாடக எல்லைப் பகுதிகளில் வாழும் தமிழர்களின் உயிர், உடைமை, வாழ்வாதாரப் பாதுகாப்பை உறுதி செய்ய கர்நாடக அரசை வலியுறுத்த வேண்டும்.

    ஆந்திராவில் 20 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தையும் கருத்தில் கொண்டு, எல்லை மாநிலங்களில் தமிழர்களுக்கு எதிரான துப்பாக்கி சூடு சம்பவங்கள் மீண்டும் நடைபெறாத வகையில் நிரந்தரமான பாதுகாப்பு நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு மேற்கொள்ள வேண்டும்.

    தமிழன் எங்கு வாழ்ந்தாலும் அவனுடைய உயிருக்கு பாதுகாப்பு வேண்டும். இதற்காக கர்நாடக அரசை வன்மையாக கண்டிப்பதோடு, தமிழ்நாடு அரசு இனியும் மௌனம் காக்காமல் உடனடியாக தலையிட்டு, நீதி கிடைக்கும் வரை இந்த வழக்கைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்." எனத் தெரிவித்துள்ளார்.

    English Summary

    Velmurugan, leader of the Tamizhaga Vazhvurimai Katchi, has raised questions regarding the incident in which the Forest Department shot dead three Tamils ​​in an encounter within the Hanur forest area of ​​Chamarajanagar district, Karnataka.