என்ஜின் இல்லாமல் தறிகெட்டு ஓடிய 7 சரக்கு ரயில் பெட்டிகள்.. ஜோலார்பேட்டையில் பெரும் விபத்து தவிர்ப்பு

  • திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை ரயில்வே சந்திப்பில் ரயில்வே ஊழியர்களின் அலட்சியத்தால் என்ஜின் இல்லாத 7 காலி சரக்கு ரயில் பெட்டிகள் தண்டவாளத்தில் தடம் புரண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    Advertisement

    16 ரயில் தடங்களைக் கொண்ட முக்கிய ரயில்வே சந்திப்பாகவும், ஆசியாவிலேயே இரண்டாவது பெரிய ரயில்வே யார்டைக் கொண்டதாகவும் அறியப்படுகிறது ஜோலார்பேட்டை ரயில் நிலையம். ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் உள்ள ரயில் பெட்டிகள் பழுதுபார்க்கும் யார்டில் 7 காலி ரயில் பெட்டிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

    Advertisement

    தடம் புரண்ட ரயில் பெட்டிகள்

    அவற்றை என்ஜின் மூலம் இடித்து தள்ளியதாகக் கூறப்படும் நிலையில், முறையாகக் கட்டுப்படுத்தி நிறுத்தப்படாததால் அந்த 7 பெட்டிகளும் தண்டவாளத்தில் தானாகவே வேகமாக நகரத் தொடங்கியுள்ளன. இதனைத் தொடர்ந்து யார்டின் எல்லையைத் தாண்டி சுமார் 6 கிலோ மீட்டர் தூரம் உருண்டு சென்ற அந்த ரயில் பெட்டிகள், தாமலேரிமுத்தூர் பகுதியில் பெங்களூரு ஜோலார்பேட்டை பிரதான ரயில் வழித்தடத்தில் தடம் புரண்டு நின்றன. அப்போது ஏற்பட்ட சத்தத்தைக் கேட்ட அப்பகுதி ரயில்வே கேட் கீப்பர் உடனடியாக ரயில்வே அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்துள்ளார்.

    Advertisement

    இதையடுத்து, உஷாரான ரயில்வே அதிகாரிகள் அபாய எச்சரிக்கை ஒலி எழுப்பி, பெங்களூருவில் இருந்து ஜோலார்பேட்டை நோக்கி வந்த ரயில்களை ஆங்காங்கே நிறுத்துமாறு அறிவுறுத்தினர். தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த ரயில்வே ஊழியர்கள், தடம் புரண்ட 7 காலி ரயில் பெட்டிகளையும் அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

    அப்புறப்படுத்தும் பணி தீவிரம்

    கேஸ் வெல்டிங் மூலம் பெட்டிகளின் இணைப்புகளைத் துண்டித்து, ஜேசிபி இயந்திரத்தின் உதவியுடன் அவற்றை தண்டவாளத்திலிருந்து கீழே தள்ளி அகற்றும் பணியை மேற்கொண்டனர். இந்த சம்பவத்தால் பெங்களூரு - சென்னை இடையே இயக்கப்படும் ரயில்களின் போக்குவரத்தில் தாமதம் ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக கேட் கீப்பர் உரிய நேரத்தில் தகவல் அளித்ததால் பெரும் ரயில் விபத்து தவிர்க்கப்பட்டது.

    Advertisement

    முக்கியமான ரயில்வே சந்திப்பில் நடைபெற்ற இந்த சம்பவம், ரயில்வே ஊழியர்களின் பாதுகாப்புப் பணிகளில் அலட்சியம் உள்ளதா? என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. பெரும் உயிரிழப்பை ஏற்படுத்தியிருக்கக்கூடிய இந்த சம்பவம் தொடர்பாக ரயில்வே நிர்வாகம் உரிய விசாரணை நடத்தி, அலட்சியமாகச் செயல்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. ஜோலார்பேட்டை ரயில்வே யார்டில் ஏற்பட்ட இந்த அதிர்ச்சி சம்பவம் ரயில்வே பாதுகாப்பு நடவடிக்கைகளின் அவசியத்தை மீண்டும் உணர்த்தியுள்ளது.

    English Summary

    Seven empty goods train coaches rolled nearly 6 km without an engine and derailed near Jolarpettai, disrupting train services between Bengaluru and Chennai, while a major accident was averted.