திருச்செந்தூர்: திருச்செந்தூர் கோயிலில் ரூ 1000 பெற்ற அர்ச்சகர் ஐயப்பன் உள்பட 3 பேரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார் இந்து அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ்.
திருச்செந்தூர் முருகன் கோயிலில் இன்று காலை அமைச்சர் ரமேஷ் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அவர் முக கவசம் அணிந்து கொண்டு சென்றிருந்தார்.
அப்போது அங்கு சண்முக விலாச மண்டபம் அருகே இருந்த அர்ச்சகர் ஒருவரிடம் சுவாமி தரிசனம் செய்ய கட்டணம் எவ்வளவு என ரமேஷ் கேட்டுள்ளார். அதற்கு அந்த அர்ச்சகர் , ஒருவருக்கு ரூ 1000 என்றும் எத்தனை பேர் என கேட்டதற்கு ரமேஷ் 4 பேர் என்றும் தெரிவித்தாராம். அப்போது அந்த அர்ச்சகர் ஒரு ஜிபே நம்பரை கொடுத்து இதில் 4000 ரூபாய் பணத்தை அனுப்பிவிடவும் என கூறினாராம். இதையடுத்து ரமேஷும் அர்ச்சகர் சொன்ன நம்பருக்கு ரூ 4000 பணத்தை அனுப்பினாராம். இதையடுத்து கோயில் நிர்வாகத்திற்கு அவர் சென்று ஆய்வு நடத்திய போதுதான் அவர் அமைச்சர் என்பதே அனைவருக்கும் தெரிந்ததாம். அப்போது தன்னிடம் காசு வாங்கிய அர்ச்சகரை ரமேஷ் கடிந்து கொண்டாராம். கோயிலில் மேலும் நிறைய முறைகேடுகள் நடந்தது குறித்தும் ரமேஷ் கண்டறிந்தார். இந்த ஆய்வு கூட்டத்திற்கு பிறகு ரமேஷ் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறுகையில், திருச்செந்தூர் கோயிலில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாக பக்தர்களும் சமூக ஆர்வலர்களும் புகார்கள் எழுப்பினர். இதனால் இன்று காலை அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்காமல் ஆய்வுக்கு வருகை தந்தேன். கோயிலில் சிறப்பு தரிசனம் செய்ய பக்தர்களிடம் பணம் வசூலிப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அர்ச்சகர்கள் மட்டுமின்றி அதிகாரிகள், ஊழியர்கள் அனைவரும் சேர்ந்துதான் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளனர். பக்தர்களிடம் பணம் வாங்கியது தொடர்பாக அர்ச்சகர்கள், அதிகாரிகளிடம் மன்னிப்புக் கடிதம் பெறவில்லை. விளக்கக் கடிதம் மட்டுமே பெற்றேன். கோயில் சொத்துகள், வருமானம் தொடர்பாகவும் ஆய்வு செய்தேன். மேலும் அன்னதானக் கூடம், அடிப்படை வசதிகள், விரைவாக தரிசனம் மேற்கொள்வதற்கான வழிமுறைகள் குறித்தும் ஆய்வு செய்யப்படுகிறது. இன்று முழுவதும் கோயிலில் ஆய்வு செய்யவுள்ளேன். ஆய்வின் முடிவில் முழு அறிக்கை தருகிறேன். முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் பாரபட்சமின்றி, தயக்கமின்றி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பதை உறுதியாக தெரிவிக்கிறேன் என்றார். இந்த நிலையில் அமைச்சரிடம் ரூ .1000 லஞ்சம் வாங்கிய அர்ச்சகர் ஐயப்பன், அவருக்கு உடந்தையாக இருந்த இரு வாயில் காவலர்கள் என மூன்று பேர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மறு உத்தரவு வரும் வரை ஐயப்பன் பூஜை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. அது போல் முடிகாணிக்கை பெற லஞ்சம் கேட்டதாக இரு ஊழியர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.