தமிழரை சுட்டு கொன்ற ஆந்திர வனத்துறையினர்.. மறு பிரேத பரிசோதனை நடத்த ஹைகோர்ட் அதிரடி உத்தரவு


ஹைதராபாத்: ஆந்திராவில் செம்மரம் கடத்தியதாக சுட்டுக்கொல்லப்பட்ட திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த காமராஜ் என்பரின் உடலை மறு உடற்கூறு ஆய்வு செய்ய அம்மாநில ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

ஸ்ரீகாளஹஸ்தி மண்டலம் கொல்லப்பள்ளி வனப்பகுதியில் செம்மரம் வெட்டிய கும்பல் மீது கடப்பா மாவட்டம் ரெயில்வே கோடூர் வனத்துறையினர் கடந்த 1ம் தேதி, துப்பாக்கிச்சூடு நடத்தியதில், திருவண்ணாமலை மாவட்டம் ஜமுனாமரத்தூர் அருகே உள்ள கானமலை கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி காமராஜ் (53) என்பவர் பலியானார்.

துப்பாக்கிச்சூட்டில் பலியான காமராஜின் சடலம், ஸ்ரீகாளஹஸ்தி அரசு ஆஸ்பத்திரியில் பிரேதப் பரிசோதனைக்காக வைக்கப்பட்டபோது, சடலத்தை பார்க்க அவரது உறவினர்கள் சென்றிருந்தனர்.

ஆனால், ஸ்ரீகாளஹஸ்தி புறநகர் போலீசார், பிரேதப் பரிசோதனை முடிந்து விட்டதாகவும், உடனடியாக சடலத்தை எடுத்துச் செல்ல வேண்டும் என்றும் கட்டாயப்படுத்தி உள்ளனர். காமராஜ் இறந்ததில் சந்தேகம் இருப்பதாகவும். மீண்டும் பிரேத பரிசோதனை செய்ய வேண்டும். அதுவரை உடலை வாங்க மாட்டோம் என்றும் உறவினர்கள் தெரிவித்தனர்.

இதனால் ஆத்திரம் அடைந்த போலீசார், காமராஜின் உறவினர்களை ஷூ காலால் எட்டி உதைத்துள்ளனர்.

இதுகுறித்து மக்கள் கண்காணிப்பகம் சார்பில் ஹைதராபாத் உயா்நீதிமன்றத்தில் நேற்று மனுதாக்கல் செய்யப்பட்டது. இன்று வழக்கு விசாரணைக்கு வந்தபோது, காமராஜ் உடலுக்கு மறு பிரேத பரிசோதனைக்கு செய்ய ஹைதராபாத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மறு பிரேத பரிசோதனை அறிக்கையை 4 வாரங்களுக்குள் சமர்ப்பிக்கும்படி உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more about: செம்மரம்

Have a great day!
Read more...

English Summary

Hyderabad High court order re post mortem for Tamil man Kamaraj who killed in Andra over red sandalwood smuggling.