திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக பகுதியில் உள்ள முக்கிய சுற்றுலாத் தலங்களான களக்காடு தலையணை மற்றும் நம்பிகோயில் அருவிக்குச் செல்வதற்கான நுழைவுக் கட்டண நடைமுறை முற்றிலுமாக டிஜிட்டல் முறையில் மாற்றப்பட்டிருப்பதாக வனத்துறை தெரிவித்திருக்கிறது.
சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காகவும், வனத்துறையின் நிர்வாக வெளிப்படைத்தன்மைக்காகவும் இத்திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
களக்காடு நகரில் இருந்து சுமார் 5 கி.மீ. தொலைவில், அடர்ந்த வனப்பகுதியின் நுழைவாயிலில் களக்காடு தலையணை அமைந்துள்ளது. பச்சையாற்றின் குறுக்கே இயற்கையாக அமைந்த பாறை அமைப்புகளும், வனத்துறையினரால் கட்டப்பட்ட சிறிய தடுப்பணையும் சேர்ந்து இந்த இடத்தை ஒரு சிறந்த குளியல் தளமாக மாற்றியுள்ளன. தலையணை போன்ற பாறை அமைப்பில் தண்ணீர் சீராகக் கொட்டுவதால் இதற்கு 'தலையணை' என்று பெயர் வந்தது. குற்றாலம் அல்லது பாபநாசம் போன்ற அருவிகளுடன் ஒப்பிடும்போது, இங்கு நீர்வரத்து மிதமாக இருக்கும் காலங்களில் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் பாதுகாப்பாக நீராட முடியும். எனவே சீசன் நாட்களில் இங்கு மக்கள் அதிக அளவில் கூடுகிறார்கள். அதேபோல, களக்காடு மலையின் ஆழமான பகுதியில், கடல் மட்டத்தில் இருந்து பல நூறு அடிகள் உயரத்தில் நம்பிகோயில் அமைந்துள்ளது. அடர்ந்த காடுகளுக்கு நடுவே, செங்குத்தான மலைப்பாதையில் இந்த ஆலயம் அமைந்துள்ளது. கோயிலுக்குச் சற்று அருகிலேயே, அடர்ந்த காட்டுப் பகுதியிலிருந்து மூலிகைக் குணங்களுடன் பாய்ந்து வரும் 'நம்பியாறு' ஒரு அழகான அருவியாக உருவெடுக்கிறது. எனவே இந்த இரண்டு இடங்களுக்கும் ஆண்டு முழுவதும் பயணிகள் வரத்து இருந்துக்கொண்டே இருக்கிறது. இரண்டு பகுதிகளும் வனத்துறையினர் கட்டுப்பாட்டில் இருக்கிறது. எனவே சுற்றுலாப் பயணிகளிடம், இதுவரை நுழைவுச் சீட்டு மற்றும் வாகனக் கட்டணங்கள் நேரடியாக வனத்துறை சோதனைச் சாவடிகளில் வசூலிக்கப்பட்டு வந்தன. தற்போது இந்த நடைமுறை மாற்றப்பட்டு, இன்று முதல் ஆன்லைன் மூலம் மட்டுமே கட்டணம் செலுத்தும் புதிய டிஜிட்டல் முறை அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வந்துள்ளது. சோதனைச் சாவடிகளில் கட்டணம் செலுத்துவதற்காக நீண்ட நேரம் வாகனங்கள் வரிசையில் நிற்பதைத் தவிர்த்து, பயண நேரத்தைக் குறைக்கவும் என்பதாலும், வனத்துறையினரின் கணக்குகள் துல்லியமாகப் பராமரிக்கப்படும் என்பதாலும் தற்போது கண்டன வசூல் டிஜிட்டல் மயமாக்கப்பட்டிருக்கிறது என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.களக்காடு தலையணை
நம்பிகோயில் மற்றும் நம்பி அருவி