அதிகாரிகள் மேல மரியாதை இருக்கு.. ஏன் வதந்தி பரப்புறாங்கனு தெரியல! தவெக MLA அருள் விக்னேஷ் பதில்

  • கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி தொகுதி தமிழக வெற்றிக் கழக எம்.எல்.ஏ அருள் விக்னேஷ், அம்மாவட்ட பெண் ஆட்சியருக்குத் தொடர்ந்து ஆபாச மற்றும் முறையற்ற குறுஞ்செய்திகளை அனுப்பியதாகவும், நள்ளிரவில் மதுபோதையில் ஆட்சியரின் இல்லத்திற்கே சென்று ரகளையில் ஈடுபட்டதாகவும் சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தின.

    Advertisement

    இந்த விவகாரத்தை முன்வைத்து திமுக துணைப் பொதுச்செயலாளரும் எம்.பியுமான கனிமொழி தவெக அரசையும் முதலமைச்சர் விஜயையும் மிகக் கடுமையாக விமர்சித்திருந்தார்.

    Advertisement

    இந்நிலையில், தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் குறித்து செய்தியாளர்களைச் சந்தித்த அருள் விக்னேஷ் எம்.எல்.ஏ, தனது தரப்பு விளக்கத்தை ஆவேசமாகவும் தெளிவாகவும் முன்வைத்துள்ளார்.

    பத்திரிகையாளர் சந்திப்பில் எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் விளக்கம்

    செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்த அருள் விக்னேஷ், தன் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் அப்பட்டமான பொய் என்று தெரிவித்தார், அதில்,

    அரசு அதிகாரிகள் மீது எனக்கு எப்போதுமே மிகப்பெரிய மதிப்பும் மரியாதையும் உண்டு. அப்படிப்பட்ட எந்த ஒரு தவறான செயலிலும் நான் ஒருபோதும் ஈடுபட்டதில்லை. எதற்காக என் மீது இத்தகைய பொய்யான அவதூறுகளைப் பரப்புகிறார்கள் என்றே புரியவில்லை.

    Advertisement

    ஆட்சியர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் நான் கலந்துகொள்ளவில்லை எனக் கூறுவது முற்றிலும் தவறு. ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சிகளின் தேதிகளில் நான் எங்கு இருந்தேன் என்று பார்த்தாலே உண்மை தெரியும். அந்த சமயங்களில் நான் கள்ளக்குறிச்சியில் இல்லை; கட்சிப் பணிகள் மற்றும் கூட்டங்களுக்காக சென்னையில் இருந்தேன்.

    கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வெற்றி பெற்ற ஒரே தவெக சட்டமன்ற உறுப்பினர் நான் மட்டும்தான். இதன் காரணமாகவே என் மீதும், எங்கள் கட்சி மீதும் ஒரு குறிப்பிட்ட தரப்பினர் தொடர்ந்து வன்மத்தைக் கக்கி வருகிறார்கள். என் பெயரையும், கட்சியின் பெயரையும் திட்டமிட்டு களங்கப்படுத்த வேண்டும் என்பதற்காகவே சமூக வலைதளங்களில் பொய் பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளனர்.

    Advertisement

    அமைச்சர் ராஜமோகன் 'ஆட்சியர் புகார் அளித்தால் எம்.எல்.ஏ என்றுகூட பார்க்காமல் நடவடிக்கை எடுக்கப்படும்' என்று கூறியிருப்பது குறித்து கேட்கிறீர்கள். நான் மீண்டும் சொல்கிறேன், அப்படியொரு சம்பவமே நடக்கவில்லை. உண்மையிலேயே தவறு நடந்திருந்தால் புகார் கொடுக்கட்டும், அவர்கள் தாராளமாக என்ன நடவடிக்கை வேண்டுமானாலும் எடுக்கட்டும்."

    இந்த அவதூறுக்கு உடனடியாக ஏன் விளக்கம் தரவில்லை என்று கேட்கிறீர்கள். எங்கள் முதல்வர் விஜய் பாணியில் சொல்ல வேண்டுமென்றால், 'இக்னோர் நெகட்டிவிட்டி'. சமூக வலைதளங்களில் கணினி முன் அமர்ந்து பொய் அவதூறுகளை மட்டுமே பரப்பும் நபர்களுக்குப் பதில் சொல்லிக்கொண்டே இருந்தால், மக்கள் பணியைச் செய்ய முடியாது. நான் எப்போதும் களத்தில் மக்களுடன்தான் இருக்கிறேன்., என்று கூறி உள்ளார்.

    Advertisement

    மேலும், தன் மீது வேண்டுமென்றே அவதூறு பரப்பியவர்கள் மீது சட்டப்படி புகார் அளித்துள்ளதாகவும், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் உறுதிபடத் தெரிவித்தார்.

    கனிமொழி எம்.பி எழுப்பிய கண்டனம்

    முன்னதாக, இச்சம்பவம் தொடர்பாக திமுக எம்.பி கனிமொழி தனது சமூக வலைதளப் பக்கத்தில் கடுமையான அறிக்கையை வெளியிட்டிருந்தார்,

    கள்ளக்குறிச்சி பெண் மாவட்ட ஆட்சியருக்கே ஆளும் கட்சி எம்.எல்.ஏ-வால் பாதுகாப்பு இல்லாத மிக மோசமான சூழல் ஏற்பட்டுள்ளது. நள்ளிரவில் குறுஞ்செய்தி அனுப்பியதாகவும், மதுபோதையில் வீட்டிற்குச் சென்று மிரட்டியதாகவும் புகார்கள் வருகின்றன. ஒரு பெண் ஆட்சியருக்குத் தனிப் பாதுகாப்பு அதிகாரியை நியமித்துவிட்டால் மட்டும் தலைமைச் செயலாளர் அவருக்கு என்ன பாதுகாப்பை வழங்கிவிட முடியும்? தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு எந்த அளவிற்குப் பாழாகியுள்ளது என்பதற்கு இதுவே அத்தாட்சி. இதற்கு முதலமைச்சர் விஜய் என்ன பதில் சொல்லப் போகிறார்? என்று அவர் ஆவேசமாகக் கேள்வி எழுப்பியிருந்தார்.

    Advertisement

    அரசியல் களத்தில் நிலவும் உச்சக்கட்ட பரபரப்பு

    கள்ளக்குறிச்சி புதிய பேருந்து நிலைய விரிவாக்கம் மற்றும் நில ஒதுக்கீட்டில் நடைபெற்ற பல கோடி ரூபாய் முறைகேடுகளைத் தான் வெளிக்கொண்டு வர முயற்சிப்பதாலேயே, ஆளுங்கட்சியின் நற்பெயரைக் குலைக்க இத்தகைய கதைகள் பின்னப்படுவதாக அருள் விக்னேஷ் கூறியுள்ளார்.

    அதே சமயம், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மக்கள் பிரதிநிதி, மாவட்டத்தின் தலைமைப் பெண் அதிகாரியான ஆட்சியரிடம் அத்துமீறியதாக எழுந்த புகார் மற்றும் அதற்கு எம்.பி கனிமொழி கொடுத்த பதிலடி ஆகியவை தமிழக அரசியல் வட்டாரத்தில் தவெக அரசுக்குப் பெரும் அழுத்தத்தை உருவாக்கியுள்ளது. தற்போது எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் இதற்கு நேரில் தோன்றி விரிவான மறுப்பு தெரிவித்துள்ள நிலையில், அடுத்தகட்டமாக அரசுத் தரப்பில் அதிகாரப்பூர்வ விசாரணை அல்லது அறிக்கை ஏதேனும் வருமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

    English Summary

    Kallakurichi Collector Row: TVK MLA Arul Vignesh Denies Allegations After Kanimozhi's Attack