கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்: மீண்டும் சூடுபிடிக்கும் சிபிஐ விசாரணை.. 10 போலீசாருக்கு சம்மன்

  • கரூர்: கரூர் கூட்ட நெரிசல் வழக்கை மீண்டும் சிபிஐ விசாரிக்க தொடங்கியுள்ளது. சம்பவ நாளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த 10 போலீசாருக்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ள நிலையில், முதற்கட்டமாக இன்று 5 பேர் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனர். 2026 தமிழக சட்டசபை தேர்தல் காரணமாக சில மாதங்கள் தற்காலிகமாக சிபிஐ விசாரணை நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.

    Advertisement

    கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 27 ஆம் தேதி கரூரில் நடந்த விஜய்யின் தவெக பிரசார கூட்டத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி பெண்கள், குழந்தைகள் உள்பட 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தமிழகம் மட்டுமின்றி, நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.

    Advertisement

    கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாக பல்வேறு கோணங்களில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர். இதற்காக கரூரில் உள்ள சுற்றுலா மாளிகை மற்றும் தான்தோன்றிமலை பகுதிகளில் தற்காலிக அலுவலகங்கள் அமைக்கப்பட்டு பல தரப்பினரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. விபத்து நடைபெற்ற வேலுசாமிபுரம் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர், மீட்புப் பணியில் ஈடுபட்ட தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள், உடற்கூறு பரிசோதனை செய்த மருத்துவர்கள் உள்ளிட்டோரிடம் சிபிஐ அதிகாரிகள் விளக்கம் பெற்றனர்.

    மீண்டும் விசாரணையை தொடங்கிய சிபிஐ

    அதேபோல், தமிழக வெற்றி கழகத்தின் முக்கிய நிர்வாகிகள், கட்சியின் பொதுச்செயலாளர் மற்றும் சம்பவம் நடைபெற்ற நாளில் பிரச்சாரத்திற்காக பயன்படுத்தப்பட்ட வாகனம் தொடர்பாகவும் விசாரணை நடத்தப்பட்டது. இதேபோன்று, தற்போதைய தமிழக முதல்வர் விஜய் டெல்லியில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகத்தில் இரண்டு முறை நேரில் ஆஜராகி விளக்கம் அளித்திருந்தார். மேலும் அப்போதைய மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகளிடமும் சிபிஐ விசாரணை நடத்தியது.

    Advertisement

    இதற்கிடையில், தமிழக சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து தேர்தல் பணிகள் தீவிரமடைந்ததால், விசாரணை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால் கடந்த சில மாதங்களாக இந்த வழக்கில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை. தற்போது தேர்தல் முடிவடைந்து புதிய அரசு அமைந்துள்ள நிலையில், விஜய் முதல்வராக பொறுப்பேற்ற பிறகு, இந்த வழக்கின் விசாரணை மீண்டும் முழு வீச்சில் தொடங்கப்பட்டுள்ளது.

    10 போலீசாருக்கு சம்மன்

    சில மாத இடைவெளிக்குப் பிறகு மீண்டும் விசாரணை தொடங்கியுள்ளது. தற்போது விசாரணையின் அடுத்த கட்டமாக, சம்பவம் நடைபெற்றபோது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினருக்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது. காவல் ஆய்வாளர் சையத் அலி உள்ளிட்ட 2 காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் உள்ளிட்ட மொத்தம் 10 போலீசாருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் இன்று முதல் கட்டமாக 5 போலீசார் கரூரில் செயல்பட்டு வரும் தற்காலிக சிபிஐ அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனர்.

    Advertisement

    மேலும், சம்பவம் நடைபெற்ற நாளில் மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பான முக்கிய ஆவணங்களையும் அவர்கள் விசாரணை அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளதாக கூறப்படுகிறது. சட்டசபை தேர்தலுக்குப் பிறகு கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் சிபிஐ மீண்டும் விசாரணையை தீவிரப்படுத்தி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    English Summary

    Karur Stampede Case: The CBI has intensified its investigation into the 2025 Karur stampede tragedy after a pause during the Assembly elections. Ten police personnel have been summoned, and five officers appeared before investigators as the agency resumed its next phase of inquiry.