பெற்று வளர்த்தது நான்.. அரசு வேலை அவங்களுக்கா? கணவரை பிரிந்து கரூர் நெரிசலில் மகனை இழந்த பெண் கதறல்

  • கரூர்: கரூர் கூட்ட நெரிசலில் சனுஷ் வர்ஷன் என்ற சிறுவன் இறந்தான். இவனது பெற்றோர் பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில் சிறுவனை தாயார் வளர்த்து வந்தார். ஆனால் அவருக்கு பதில் தற்போது அவனது தந்தைக்கு அரசு வேலை கொடுப்பதாக கூறி சனுஷ் வர்ஷனின் தாய் கதறி அழுதார். '' அவர் (கணவர்) வேறு திருமணம் செய்து பெண் குழந்தை 6ம் வகுப்பு படிக்கிறது. எல்லோமே சரியாக செய்கிறவர்கள். இப்போது எதற்கு அவரை உட்கார வைத்திருக்க வேண்டும்? நான் நாய் மாதிரி வெளியே நிற்கிறேன். என் மகனை பெற்று வளர்த்த நான் வெளியே நிற்கிறேன். அவனை உள்ளே உட்கார வைத்து அரசு வேலை கொடுக்கிறாங்க'' என்று கதறி அழுதார்.

    Advertisement

    கடந்த 2025ம் ஆண்டு செப்டம்பர் 26ம் தேதி தவெக தலைவர் விஜய் பரப்புரையின்போது கரூர் வேலுச்சாமி புரத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் மொத்தம் 41 பேர் பலியாகினர். இந்நிலையில் தான் பலியானவர்களின் குடும்பத்துக்கு இன்று விஜய் அரசு வேலைக்கான பணி நியமன ஆணைகளை வழங்க உள்ளார். இதற்காக முதல்வர் விஜய் இன்று கரூர் சென்றுள்ளார்.

    Advertisement

    இந்நிலையில் தான் கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் சிறுவன் சனுஜ் வர்ஷன் இறந்தான். இவரது தாய் பெயர் திருவளர்செல்வி. தந்தை பெயர் ரகுநாதன். இவர்கள் 2 பேரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். சனுஜ் வர்ஷனை தாய் வளர்த்து வந்தார்.

    இந்நிலையில் தான் தற்போது அரசு வேலை என்பது சிறுவன் சனுஜ் வர்ஷனின் தாய்க்கு வழங்குவதற்கு பதில் தந்தை ரகுநாதனுக்கு வழங்க உள்ளதாக கூறப்படுகிறது. இதுபற்றி திருவளர்செல்வி கண்ணீர் மல்க கூறியதாவது: ''

    என் பிள்ளை விஜய் சார் கூட்டத்துக்கு போய் இருந்தான். என்னுடைய தங்கச்சி தான் கூட்டிட்டு போய் இருந்தார். என்னுடைய வீட்டுக்காரர் என்னை விட்டுவிட்டு வேறு கல்யாணம் செய்து கொண்டு போய்விட்டார். இப்போது போன் போட்டு அவரிடம் சொல்லியிருக்கிறார்கள். எங்களிடம் எதுவும் சொல்லவில்லை.

    Advertisement

    நிவாரணம் கொடுத்தபோதும் இதுபோன்ற பிரச்சனை வந்தது. அதன்பிறகு அம்மாவிற்கு தான் பணம் கொடுக்க வேண்டும் என்று எனக்கு கொடுத்தார்கள். எல்லோமே எனக்கு தான் வருகிறது. விஜய் சார் மீது நான் எந்த குறையுமே சொல்லவில்லை. பெண்களுக்கு தான் என்று எல்லாமே செய்கிறார். என் மகனை கஷ்டப்பட்டு சின்ன வயதில் இருந்து நான் தான் வளர்த்தேன். பள்ளியில் சேர்த்தேன். அவர் எதுவுமே செய்தது கிடையாது. ஆனால் இப்போது அவர் உள்ளே போய் உட்கார்ந்து இருக்கிறார்.

    விஜய் சார், வந்தும் இப்படி நடக்கணுமா. அப்போதைய ஆட்சியில் தான் அப்படி நடந்தது. இப்போதும் இது நடக்கணுமா. என்ன நடக்கிறது என்பதே தெரியவில்லை. என்னை உள்ளே விடாமல் உள்ளனர். பெற்ற பிள்ளைக்கு சின்ன வயதில் இருந்தே அனைத்திற்கும் வந்து இருந்தால் பெற்றவன் என்று சொல்லி இருக்கலாம். எதுவுமே இல்லாமல் இப்போது வேலை கொடுக்கிறாங்க.

    Advertisement

    நான் வேலை கேட்டதற்கு வக்கீல் நோட்டீஸ் வேண்டும் என்றார்கள்.ஆனால் இப்போது எப்படி அவரை உட்கார வைத்திருப்பார்கள். பணம் வாங்கிட்டாங்களா சார். அவர் வேறு திருமணம் செய்து பெண் குழந்தை 6ம் வகுப்பு படிக்கிறது. எல்லோமே சரியாக செய்கிறவர்கள். இப்போது எதற்கு அவரை உட்கார வைத்திருக்க வேண்டும்? நான் நாய் மாதிரி வெளியே நிற்கிறேன். என் மகனை பெற்று வளர்த்த நான் வெளியே நிற்கிறேன். அவனை உள்ளே உட்கார வைத்து அரசு வேலை கொடுக்கிறாங்க. ஒரு நீதினு ஒன்றும் இல்லையா.. நான் வேண்டுமானால் செத்து போயிரட்டுமா.

    ஒரு பெண் தனியாக இருக்க கூடாது. தனியாக வாழ்வது எவ்வளவு கடினம் என்பது உங்களுக்கு தெரியும். இப்போது தான் பல ஆண்டுகளை தாண்டி ஒரு கல்யாணம் செய்தேன். அதன்பிறகும் என்னை வாழ விடாமல் செய்கிறார்கள். அதிகாரிகளிடம் கேட்டும் யாரும் எனக்கு பதில் அளிக்கவில்லை '' என்று கண்ணீர் மல்க கூறினார்.

    English Summary

    A young boy named Sanush Varshan died in a crowd crush in Karur. Although his parents were living apart, the boy had been raised by his mother; however, Sanush Varshan's mother wept bitterly, stating that the government job was now being offered to his father instead of her.