கும்பகோணம் பள்ளி தீ விபத்தின் 22ம் ஆண்டு நினைவு தினம்.. கண்ணீர் மல்க அஞ்சலி! பெற்றோர் வைத்த கோரிக்கை

  • கும்பகோணம்: கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் இறந்த 94 குழந்தைகளின் 22 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. குழந்தைகளை இழந்த பெற்றோர்கள் தங்களது வீடுகளில் இறந்த குழந்தைகளின் படங்களுக்கு மாலை அணிவித்து, புத்தாடைகள், திண்பண்டங்களை செய்து வைத்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். மேலும் தீ விபத்து நிகழ்ந்த பள்ளி முன்பாக மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

    Advertisement

    தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் காசிராமன் தெருவில் செயல்பட்டு வந்த ஸ்ரீ கிருஷ்ணா பள்ளியில் கடந்த 2004 ஆம் ஆண்டு ஜூலை 16ஆம் தேதி ஏற்பட்ட தீ விபத்தில் அங்கு படித்த 94 சின்னஞ்சிறு குழந்தைகள் தீக்கிரையாகி பரிதாபமாக உயிரிழந்தனர். தமிழகத்தையே உலுக்கிய இந்தச் சம்பவத்தின் 22 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது.

    Advertisement

    இதனையொட்டி சம்பவம் நடந்த பள்ளி முன்பு குழந்தைகளை இழந்த பெற்றோர்கள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் என பல தரப்பினர் மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து, குழந்தைகளுக்கு பிரியமான பிஸ்கட், இனிப்பு வகைகள், பழங்கள் மற்றும் குளிர்பானங்கள் வைத்து அவர்களது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

    இந்தக் கோரச் சம்பவம் நடந்து 22 ஆண்டுகள் உருண்டோடினாலும், இந்நிகழ்வால் தங்கள் பிள்ளைகளைப் பறிகொடுத்த சோகமும், வடுவும் இன்னும் மாறவில்லை என்பது பெற்றோர்களின் கண்களில் தெரிகிறது. சில பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் புகைப்படத்தைத் தொட்டுப் பார்த்துக் கதறினர்.

    Advertisement

    பாலக்கரையில் உள்ள நினைவு மண்டபத்தில், பெற்றோர்கள், அரசியல் கட்சியினர், பொதுமக்கள், பள்ளி முன்னாள் மாணவர்கள் உள்ளிட்டோர் மலர் வளையம் வைத்து, மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர். பல்வேறு அரசியல் கட்சிகள் சார்பிலும் ஏராளமானோர் ஊர்வலமாக வந்து நெருப்புக்கு இரையான குழந்தைகளின் நினைவாக, மலர் வளையம் வைத்தும், மலர் மாலைகள் அணிவித்தும், மலர்கள் தூவியும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

    உயிரிழந்த 2 குழந்தைகளின் தந்தை இன்பராஜ் பேசுகையில், "தவெக தலைவர் விஜய் கரூர் சென்றபோது 41 பேர் உயிரிழந்தனர். அந்த குடும்பங்களுக்கு தகுதியின் அடிப்படையில் அரசுப் பணி வழங்கியுள்ளார். இதேபோல் கல்வி கற்கச் சென்ற எங்களது குழந்தைகள் உயிரிழந்தனர். உயிரிழந்த குழந்தைகளின் குடும்பத்திற்கு தகுதியின் அடிப்படையில் அரசுப் பணி வழங்க வேண்டும். இது தொடர்பாக கும்பகோணம் எம்எல்ஏவும், வேளாண்மை துறை அமைச்சருமான வினோத்தை சந்தித்து, அவர் மூலமாக தமிழக முதல்வர் விஜய்யை சந்தித்து எங்களது கோரிக்கை வலியுறுத்த உள்ளோம்," எனத் தெரிவித்துள்ளார்.

    English Summary

    Today marks the 22nd anniversary of the Kumbakonam school fire tragedy, in which 94 children lost their lives. Bereaved parents paid tearful tributes at their homes by garlanding photographs of the deceased children and offering new clothes and snacks.