குனிச்சி ஊராட்சியில் கிராம சபை கூட்டத்தை புறக்கணித்த மக்கள்! ரேஷன் கார்டை ஒப்படைத்தும் போராட்டம்

  • திருப்பத்தூர்: குனிச்சி ஊராட்சியில் வெளியூரை சேர்ந்த கிறிஸ்துவ மற்றும் முஸ்லீம் சமூக மக்களுக்கென சுடுகாடு அமைப்பதை கண்டித்து அப்பகுதி உள்ளூர் மக்கள் கிராம சபைக் கூட்டத்தைப் புறக்கணித்தனர். மேலும் ரேஷன் அட்டைகளை ஒப்படைத்து நூதனப் போராட்டத்தையும் நடத்தினர்.

    Advertisement

    திருப்பத்தூர் மாவட்டம், குனிச்சி ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் பொதுமக்கள் திடீரென வெளிநடப்பு செய்து நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    Advertisement

    குனிச்சி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் சுமார் 500 குடும்பங்களைச் சேர்ந்த பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் ஏற்கெனவே பல்வேறு அரசு தேவைகளுக்காக புறம்போக்கு நிலங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

    இந்நிலையில், தற்போது வெளியூரைச் சேர்ந்த கிறிஸ்தவ மற்றும் முஸ்லிம் மக்களுக்காக சுடுகாடு அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாகக் கூறி அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

    தங்கள் பகுதியில் வசிக்கும் மக்களுக்கே அடிப்படை வாழ்வாதார வசதிகள் மற்றும் சுடுகாடு போன்ற அத்தியாவசிய வசதிகள் போதிய அளவில் இல்லை. முதலில் உள்ளூர் மக்களின் தேவைகளை நிறைவேற்ற வேண்டும் என்றும் பொதுமக்கள் வலியுறுத்தினர்.

    Advertisement

    மேலும், தங்கள் பகுதி மக்களுக்கான சுடுகாடு வசதியை உடனடியாக ஏற்படுத்தித் தர வேண்டும் என்றும், தற்போது நடைபெற்று வரும் கட்டுமானப் பணிகள் குறித்து மாவட்ட நிர்வாகம் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.

    ஆலம்பூண்டியில் தெருவிளக்குகள் எரியாததால்தான் சிறுமி மாயம்! கிராம சபை கூட்டத்தில் பரபரப்பு புகார்

    இதனைத் தொடர்ந்து, இன்று நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தைப் புறக்கணித்து பொதுமக்கள் வெளிநடப்பு செய்ததுடன், தங்களது ரேஷன் அட்டைகளையும் கிராம நிர்வாக அலுவலகத்தில் ஒப்படைத்து நூதன முறையில் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

    மேலும், தங்களது கோரிக்கைக்கு உரிய தீர்வு கிடைக்காவிட்டால் தொடர்ந்து பல்வேறு கட்டப் போராட்டங்களில் ஈடுபடுவோம் என்றும் எச்சரிக்கை விடுத்தனர். எனவே, திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு, குனிச்சி பகுதி மக்களின் கோரிக்கையை நேரில் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அப்பகுதி பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

    English Summary

    Kunichi residents boycott gram sabha over burial ground constructing for those who are coming to the village from other places.