மலரே குறிஞ்சி மலரே... நீலமயமான நீலகிரி... குறிஞ்சியை காண குவியும் சுற்றுலா பயணிகள்


சென்னை: நீலகிரியே... நீலமயமாகிவிட்டது இந்த குறிஞ்சி பூக்களினால்!!

குறிஞ்சி பூக்கள் நீல நிறம் உடையவை. அதுவும் இல்லாமல் இந்த பூக்கள் எப்போதுமே மலைப்பகுதிகளில்தான் காணப்படும். அதனால் இவை நீலகிரியில் அதிகமாக உள்ளது. இந்த பூக்கள் காரணமாகத்தான் நீலகிரி என்றே பெயர் வந்தது.

குறிஞ்சி பூக்கள்

கடல் மட்டத்திலிருந்து 1,300 முதல் 2,400 மீட்டர் உயரத்தில் வளரும் குணமடையதே இந்த செடிகள். இந்த குறிஞ்சி பூக்கள் டிசம்பர் மாதம் வரை மலர்ந்து இருக்கும். நாம்தான் இந்த பூக்கள் 12 வயதுக்கு ஒருமுறை என்று சொல்கிறோம். ஆனால் முன்பெல்லாம் நீலகிரியில் வசிக்கும் பழங்குடி மக்கள் குறிஞ்சி பூக்களின் ஒவ்வொரு காலகட்ட வளர்ச்சியை பொறுத்துதான் தங்களது வயதையே கணக்கிட்டு கொள்வார்களாம்.

பூத்துக்குலுங்கும் மலர்கள்

12-வருடத்திற்கு ஒருமுறைதான் இந்த பூக்கள் பூக்கும் என்பதே இதன் சிறப்பு. அதனால் உலகின் பல பகுதிகளிலிருந்து இந்த பூக்களை காண சுற்றுலா பயணிகள் வந்துவிடுவார்கள். நாடு முழுவதும் 200 க்கும் மேற்ப்பட்ட குறிஞ்சி மலர்கள் காணப்பட்டாலும் நீலகிரி குறிஞ்சி பூக்கள்தான் ஸ்பெஷல்!! கடந்த 2006-க்கு பிறகு இப்போதுதான் இந்த பூக்கள் மீண்டும் மலர்ந்து அனைவரையும் ஈர்க்க தொடங்கியுள்ளது. அப்பர் பவானி, சின்னகுன்னூர், கீழ்கோத்தகிரி, சோலூர், நடுவட்டம், கல்லட்டி, மஞ்சூர் போன்ற பகுதிகளில் நீல வண்ணமாக பூத்துக்குலுங்கி உள்ளது.

ஆட்டம் பாட்டம்

அதற்காக ஒரு அரசு சார்பாக குறிஞ்சி விழா ஒன்று ஆட்டம் பாட்டத்துடன் நேற்று நடத்தப்பட்டது. கல்லட்டி மலை பாதையில் குறிஞ்சி பூக்கள் பூத்துள்ள மலை பகுதியில் குறிஞ்சி பூ திருவிழாவை மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா துவக்கி வைத்தார். இவ் விழாவில் அதிமுக எம்.பி, அர்ஜுனன், குன்னூர் எம்எல்ஏ சாந்திராமு ஆகியோர் கலந்துகொண்டு, படுகர் இன மக்களோடு டான்ஸ் ஆடி மகிழ்ந்தனர்.

அழகிய நீலசேலை

இந்த குறிஞ்சி பூக்களை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் உதகையில் குவிந்து வருகின்றனர். இப்போது இரண்டாவது சீசன் வேறு துவங்கிவிட்டது. அதுமட்டுமல்ல, குறிஞ்சி பூத்திருக்கிறது என்றாலே அதிக அளவு தேனீக்களும் ஆர்வத்துடன் ருசித்து பருக வந்துவிடுமாம். காரணம் இந்த பூக்களில் உள்ள தேன் மட்டும் அவ்வளவு ருசிக்குமாம். பரந்து விரிந்து காணப்படும் இந்த குறிஞ்சி பூக்களை பார்க்கவே நீல நிற சேலை காற்றில் அசைவதுபோலவே கண்ணுக்கு கொள்ளை அழகாக இருக்கிறது!!

Read more about: விழா

Have a great day!
Read more...

English Summary

Kurinji flower Blooms in Nilgiri after 12 years