Tasmac: மதுபானம் விற்கலாம்! ஆனால் சுயமரியாதையை விற்க முடியாது! மதுரை கிளை நீதிபதி அதிருப்தி!

  • மதுரை: மதுபானம் விற்கலாம், ஆனால் சுயமரியாதை, மனசாட்சியை விற்க முடியாது என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை தனது அதிருப்தியையும் பதிவு செய்துள்ளது.

    Advertisement

    தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே பெருமகளூரில் டாஸ்மாக் கடைக்கு அனுமதி அளித்த ஆட்சியரின் உத்தரவை ரத்து செய்யக் கோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    Advertisement

    இந்த நிலையில் இதுகுறித்து அந்த ஊரைச் சேர்ந்த ரவிசந்திரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: பெருமகளூர் நேதாஜி நகரில் டாஸ்மாக் கடைக்கு அனுமதியளிக்க ஆட்சேபம் தெரிவித்தோம்.

    அதை பரிசீலிக்காமல் ஆட்சியர் அனுமதித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என அந்த மனுவில் கேட்டிருந்தார். டாஸ்மாக் தரப்பு வழக்கறிஞர் தனது வாதத்தில் உள்நோக்குடன் மனுதாரர் மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.

    சட்டவிரோத மது விற்பனையை தடுக்கவும் 100 மீட்டருக்குள் வழிபாட்டுத் தலம், பள்ளி ஏதும் இல்லை என பரிசீலித்த பிறகே அந்த இடம் தேர்வு செய்யப்பட்டது. ஆட்சேபனைகளை பரிசீலித்தே ஆட்சியர் அனுமதி வழங்கினார் என வாதிட்டார்.

    Advertisement

    இந்த மனுவை விசாரித்த நீதிபதி டி.பரதசக்கரவர்த்தி கூறியிருப்பதாவது: கடையின் அமைவிடத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏதேனும் மனுக்கள் பெறப்பட்டிருப்பின் அவற்றை ஆட்சியர் பரிசீலித்த ஒப்புதல் வழங்கக் கூடாது என விதிகளில் உள்ளது.

    ஆட்சியர் தரப்பில் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் இருந்து அவர் தேர்தல் பணியால் ஆட்சேபனைகளை கேட்டு விசாரணை நடத்த டிஆர்ஓவை ஆட்சியர் நியமித்துள்ளார் என்பது தெரிய வருகிறது. டிஆர்ஓவிடம் இருந்து அறிக்கை பெறாமலேயே வாய்மொழியாக பேசியதன் அடிப்படையில் ஆட்சியர் முடிவெடுத்தது முற்றிலும் சட்டவிரோதம்.

    டாஸ்மாக் மாவட்ட மேலாளர் மனுவின் அடிப்படையிலேயே ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதில் மது அருந்துவோர் புதுக்கோட்டை மாவட்டம் திருவப்பாடி டாஸ்மாக் கடைக்கு சென்று திரும்பும் போது விபத்துகள் நிகழ்கின்றன. கடையை பெருமகளூரில் அமைக்க வேண்டும் என மாதர் சங்கம் சார்பில் மனு அளித்துள்ளனர்.

    Advertisement

    அருகே வழிபாட்டுத் தலம் அல்லது கல்வி நிறுவனம் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. அருகே உள்ள கடைக்கு மது அருந்த செல்லும் நபர்களால் எத்தனை வழிப்பறி சம்பவங்கள் எத்தனை விபத்துகள் நிகழ்ந்துள்ளன, விவரங்களை சமர்ப்பிக்குமாறு பேராவூரணி போலீஸாருக்கு இந்த நீதிமன்றம் உத்தரவிட்டது.

    வழிப்பறி சம்பவங்கள் பதிவாகவில்லை. சில விபத்துகள் மது அருந்து திரும்பும் நபர்களுடன் தொடர்புடையதாக இல்லை என அரசு வழக்கறிஞர் தெரிவித்தார். இந்த சூழலில் ஆட்சியரின் அலட்சிய அணுகுமுறை நீதிமன்றத்தின் மனச்சாட்சியை அதிர்ச்சியடைய செய்கிறது.

    சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தால் அது குறித்து காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த நடவடிக்கையை அவசரகதியில் விதிமுறைகளை கருத்தில் கொள்ளாமல் மது விற்பனையை மட்டுமே கருத்தில் கொண்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    Advertisement

    மதுபானம் விற்கலாம். ஆனால் சுயமரியாதை, மனசாட்சியை விற்கவே முடியாது. எனவே பெருமகளூரில் டாஸ்மாக் கடை திறக்க ஆட்சியர் வழங்கிய அனுமதி ரத்து செய்யப்படுகிறது. அந்த இடத்தில் திறந்திருக்கும் கடையை உடனே மூட வேண்டும்.

    வழிப்பறி நடப்பதாகவும் வாகனங்கள் திருட்டு குறித்தும் மாத சங்கத்தினர் முன் வைத்த கருத்துகளின் அடிப்படை என்ன என்பதை ஆட்சியர் விசாரித்து இறுதி உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டிருந்தார். தஞ்சை மாவட்டம் தொல்காப்பியர் சந்திப்பிலும் மதுக்கடையை மூட இன்று கடையடைப்பு போராட்டம் நடத்தப்படுகிறது குறிப்பிடத்தக்கது.

    English Summary

    The Madurai Bench of the Madras High Court strongly expressed its displeasure during a hearing, remarking that while liquor may be sold legally, self-respect and conscience cannot be sold. The observation has drawn attention for its sharp criticism and emphasis on ethical responsibility and public accountability.