ஆணவக் கொலையா? மயிலாடுதுறையில் காதலன் - காதலி தூக்கில் சடலமாக மீட்பு.. 2 கிராமங்களில் பதற்றம்!

  • மயிலாடுதுறை: மயிலாடுதுறை தரங்கம்பாடி அருகே சாந்தங்குடி கிராமத்தில் காதலன் காதலி தூக்கிட்ட நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளனர். புதுப்பாளையம் கிராமத்தை சேர்ந்த பார்த்திபன் என்ற இளைஞரும், மாற்று சமூகத்தை சேர்ந்த பெண்ணும் சாந்தங்குடி கிராமத்தில் உள்ள கொட்டகை ஒன்றில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளனர். இருவரும் வெவ்வேறு சமூகத்தினர் என்பதால் ஆணவக் கொலை செய்யப்பட்டனரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

    Advertisement

    மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே உள்ள புதுப்பாளையத்தைச் சேர்ந்தவர் பார்த்திபன். இவரின் தந்தை கொத்தனார் வேலை செய்து வருகிறார். 19 வயதாகும் பார்த்திபன், சாத்தங்குடியைச் சேர்ந்த 17 வயது சிறுமியை காதலித்து வந்துள்ளார். இவர்கள் இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள்.

    Advertisement

    இந்த நிலையில் நேற்றிரவு பார்த்திபன், ஜாதியை சொல்லி திட்டி அடித்ததாக காதலியின் தந்தை மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதேபோல் இன்று காலை 6 மணிக்கு சிறுமியின் தந்தை தனது மகளை காணவில்லை என்று காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனால் போலீசார் உடனடியாக தேடுதலை தொடங்கியுள்ளனர்.

    பார்த்திபனின் செல்ஃபோன் டவர் லொகேஷனை சோதனை செய்த போது சாத்தங்குடியில் உள்ள குமரவேல் என்பவருக்கு சொந்தமான இடத்தை காட்டி இருக்கிறது. அந்த இடத்திற்கு காவல்துறையினர் சென்ற போது, காதலர்கள் இருவரும் தூக்கிட்ட நிலையில் சடலமாக இருந்தனர். இதனால் ஏடிஎஸ்பி சுரேஷ் மற்றும் டிஎஸ்பி சரவணன் ஆகியோர் சம்பவத்திற்கு வந்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.

    Advertisement

    தற்போது காதலர்கள் இருவரின் உடல் பிரேத பரிசோதனைக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளது. இளைஞரின் குடும்பத்தினர் சிறுமியின் குடும்பத்தினர் மீது ஆணவக் கொலை குற்றச்சாட்டை முன் வைத்துள்ளனர். அதேபோல் தனது மகன் உயிரிழந்த விரக்தியில் சிறுமியின் உறவினர்களின் வாகனங்கள் மற்றும் வீடுகளை பார்த்திபன் தரப்பினர் சேதப்படுத்தி இருக்கின்றனர்.

    இதனால் இரு கிராமங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நேற்றிரவு பிரச்சனையான சூழலில், அடுத்த நாள் காலையிலேயே சிறுமியின் தந்தை தனது மகளை காணவில்லை என்று புகார் அளித்திருப்பது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பிரேத பரிசோதனை ரிப்போர்ட் கிடைத்த பின், போலீசார் அடுத்தக்கட்ட நடவடிக்கையை தொடங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    English Summary

    Mayiladuthurai Shocked as Young Couple Found Dead in a Shed; Police Probe All Angles Including Honour Killing