பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு புதிய வசதிகள் வருமா? அமைச்சர் அருண்ராஜிடம் நவாஸ்கனி எம்.பி கோரிக்கை

  • பரமக்குடி: பரமக்குடி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையை முழுமையான மாவட்ட மருத்துவமனை தரத்திற்கு உயர்த்த வேண்டும் என வலியுறுத்தி, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜிடம் இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் கே. நவாஸ்கனி நேரில் கோரிக்கை மனு அளித்துள்ளார்.

    Advertisement

    நேரடி ஆய்வும் கோரிக்கையும்:

    இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில துணைத் தலைவரும், வஃக்ப் வாரியத் தலைவருமான நவாஸ்கனி எம்.பி, கடந்த செப்டம்பர் 26 அன்று பரமக்குடி அரசு மருத்துவமனையில் கள ஆய்வு மேற்கொண்டார். அங்கு சிகிச்சை பெற்று வரும் பொதுமக்கள், மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களைச் சந்தித்துக் குறைகளைக் கேட்டறிந்தார். அதன் தொடர்ச்சியாக, சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர் அருண்ராஜைச் சந்தித்து விரிவான கோரிக்கை மனுவை வழங்கியுள்ளார்.

    Advertisement

    வட்டார மருத்துவமனை நிலையிலேயே இயக்கம்:

    மாவட்ட தலைமை மருத்துவமனையாக அறிவிக்கப்பட்டாலும், பரமக்குடி அரசு மருத்துவமனை இன்னும் தாலுகா மருத்துவமனை அளவிலான வசதிகளுடனேயே இயங்கி வருகிறது. தற்போது அனுமதிக்கப்பட்டுள்ள 400 படுக்கைகளுடன், நோயாளிகளின் தேவையை உணர்ந்து கூடுதலாக 100 படுக்கைகளை உடனடியாக ஒதுக்க வேண்டும் என்று மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பற்றாக்குறை:

    மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 21 மருத்துவர்களில் 19 பேர் மட்டுமே பணியில் உள்ளனர்; இருவர் மாற்றுப் பணியில் சென்றுள்ளனர். அறுவை சிகிச்சை, எலும்பியல், பொது மருத்துவம், மயக்கவியல், தோல், நரம்பியல் மற்றும் மகப்பேறு பிரிவு உள்ளிட்ட முக்கிய துறைகளுக்கு கூடுதலாக 15 சிறப்பு மருத்துவர்களை உடனே நியமிக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.

    Advertisement

    அதேபோல், தற்போதுள்ள 46 செவிலியர்களில் 23 பேர் மட்டுமே நிரந்தரப் பணியாளர்கள். நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப கூடுதலாக 40 செவிலியர்களை விரைந்து நியமிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

    நவீன கருவிகள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள்:

    நோயாளிகளின் அவசர பரிசோதனைகளுக்காக புதிய சிடி ஸ்கேன் (CT Scan) கருவி மற்றும் 300 எம்.ஏ (300 mA) திறன் கொண்ட புதிய எக்ஸ்ரே மெஷின் வழங்கப்பட வேண்டும். மூன்று ஆய்வக நுட்புநர்கள் (Lab Technicians) நியமிக்கப்பட வேண்டும். மருத்துவமனைக்கு வரும் பொதுமக்களின் வசதிக்காக 100 நாற்காலிகள் வழங்க வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது.

    Advertisement

    அத்துடன், சிடி ஸ்கேன், கண் மருத்துவப் பிரிவு, அவசர சிகிச்சைப் பிரிவு, மகப்பேறு பிரிவு மற்றும் பிணவறை ஆகியவற்றை இணைக்கும் இணைப்புச் சாலை (Approach Road) அமைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். மருத்துவமனையில் உள்ள ஆக்சிஜன் பிளாண்ட்டுகளின் பயன்பாட்டை உறுதிப்படுத்த கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் எனவும், புதிய பிணவறைக்கு அருகில் குடியிருப்பு பகுதிகள் இருப்பதால் அங்கு சுற்றுச்சுவரின் உயரத்தை அதிகரிக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

    பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, இந்தக் கோரிக்கைகளைத் தமிழ்நாடு அரசு விரைந்து நிறைவேற்ற வேண்டும் என நவாஸ்கனி எம்.பி கேட்டுக்கொண்டார்.

    English Summary

    MP Navas Kani Urges TN Health Minister Arunraj to Upgrade Paramakudi Govt Hospital