செங்கல்பட்டில் மரகத முருகர் சிலை திருட்டு.. நடுபழனி கோயிலில் நடந்த சம்பவம்.. சிலை மதிப்பு என்ன?

  • செங்கல்பட்டு: செங்கல்பட்டு அருகே உள்ள பெருங்கருணை கிராமத்தில் இருக்கும் மரகதத்தினால் ஆன முருகர் கோயிலின் சிலை திருடி செல்லப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பக்தர்களிடையே நடுபழனி என்று அழைக்கப்படும் இந்த கோயிலின் பூட்டை உடைத்து மூலவர் சிலையை திருடி சென்றிருக்கின்றனர். இதுதொடர்பாக போலீசார் தீவிர விசாரணையை தொடங்கி இருக்கின்றனர்.

    Advertisement

    செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் தாலுக்காவில் அச்சரப்பாக்கத்தின் உள்ளது பெருங்கருணை கிராமம். இந்த கிராமத்தில் ஆலமரங்களுக்கு இடையில் கனகமலை என்று அழைக்கப்படும் நடுபழனி மலை அமைந்துள்ளது. இந்த மலையின் மேற்கு அடிவாரத்தில் முருகர் கோயில் உள்ளது. இந்த கோயிலில் உள்ள முருகன் சிலை மரகதத்தால் ஆனது.

    Advertisement

    45 அடி உயரத்தில் கோயில் மீது அமைந்திருக்கும் முருகன் சிலை தமிழ்நாடு முழுவதும் பிரபலம். இந்த கோயிலில் நேற்று இரவு திருட்டு சம்பவம் நடந்திருக்கிறது. அடையாளம் தெரியாத நபர்கள் மரகதத்தினால் ஆன முருகர் சிலையை திருடி சென்றுள்ளனர். கோயிலின் பூட்டை உடைத்து இந்த சிலையை கொள்ளையர்கள் திருடி சென்றிருக்கின்றனர்.

    சுமார் 2 அடிக்கு இருந்த மரகத சிலையை நள்ளிரவில் கோயிலின் பின்பக்கமாக கதவின் பூட்டை உடைத்து உள்ளே வந்த மர்ம நபர்கள், மூலவர் சிலையை உடைத்து எடுத்து சென்றுள்ளனர். இதன்பின் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டு, உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்தனர். முதற்கட்ட விசாரணை நடந்து வரும் சூழலில், திருடப்பட்ட சிலையை மதிப்பிடும் பணிகள் நடந்து வருகின்றன.

    Advertisement

    பல லட்சம் அல்லது கோடிகளில் சிலையின் மதிப்பு இருக்கும் என்று போலீசார் மத்தியில் சொல்லப்படுகிறது. இது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திமுக ஆட்சியின் போது கோயில் சிலை திருட்டு சம்பவங்கள் குறைந்திருந்த சூழலில், தற்போது மிக முக்கிய கோயிலின் மரகத முருகர் சிலை திருடப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    English Summary

    Nadupalani temple: Emerald Murugan Idol Stolen from Nadupalani Temple Near Chengalpattu, Police Launch Probe