நெருங்கிவரும் ‘எல் நினோ’ ஆபத்து.. முதல்வர் விஜய்க்கு நயினார் நாகேந்திரன் வைத்த முக்கிய கோரிக்கை

  • சென்னை: எல் நினோ பாதிப்பிலிருந்து தமிழக மக்களையும் விவசாயிகளையும் காக்க, தவெக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இதற்கென தனி பிரிவை ஏற்படுத்த வேண்டும் என்றும் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

    Advertisement

    பசிபிக் பெருங்கடலில் 'எல் நினோ' (El Niño) காலநிலை நிகழ்வு தற்போது தொடங்கிவிட்டதாக ஐக்கிய நாடுகள் சபையின் உலக வானிலை அமைப்பு தெரிவித்துள்ளது. இது ஜூலை முதல் செப்டம்பர் மாதங்களுக்கு இடையில் மேலும் வலுப்பெற்று, அதன் தாக்கம் உலகின் பல பகுதிகளில் தீவிரமான வானிலை மாற்றங்களை ஏற்படுத்தக்கூடும் என அந்த அமைப்பு எச்சரித்துள்ளது.

    Advertisement

    எல் நினோ என்பது பசிபிக் பெருங்கடலின் மத்திய மற்றும் கிழக்குப் பகுதிகளில் கடல் மேற்பரப்பு வெப்பநிலை இயல்பை விட குறிப்பிடத்தக்க அளவில் உயர்வதால் உருவாகும் இயற்கை காலநிலை நிகழ்வாகும். பொதுவாக இது 2 முதல் 7 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஏற்படும். இந்த முறை கடல் மேற்பரப்பு வெப்பநிலை சராசரியை விட 2 டிகிரி செல்சியஸுக்கும் அதிகமாக உயரக்கூடும் என வானிலை நிபுணர்கள் கணித்துள்ளனர்.

    இந்த வெப்பநிலை உயர்வு உலகளாவிய காலநிலை அமைப்பில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தும். பல நாடுகளில் கடுமையான வெப்ப அலைகள், நீண்டகால வறட்சி, காட்டுத்தீ அபாயம், குடிநீர் பற்றாக்குறை போன்ற பிரச்சனைகள் உருவாகலாம். அதே நேரத்தில், சில பகுதிகளில் இயல்பை விட அதிகமான மழைப்பொழிவு பதிவாகி, வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு போன்ற இயற்கை பேரிடர்களின் அபாயமும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

    Advertisement

    இந்தியாவைப் பொறுத்தவரை, எல் நினோவின் தாக்கம் தென்மேற்கு பருவமழையைப் பாதிக்க வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக இந்தியாவின் சில மாநிலங்கள், ஆஸ்திரேலியா மற்றும் இந்தோனேசியா போன்ற நாடுகளில் மழைப்பொழிவு குறைந்து, விவசாய உற்பத்தி பாதிக்கப்படுவதோடு நீர்வளத்திலும் அழுத்தம் ஏற்படக்கூடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக சூழலியலாளர்கள் கவலை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இதுகுறித்து நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "எல் நினோ தாக்கத்திலிருந்து தமிழகத்தைக் காக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தவெக அரசு போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும்.

    Advertisement

    தென்மேற்குப் பருவமழைக் காலத்தில் எல் நினோ வானிலை நிகழ்வின் தாக்கம் அதிகரிக்கக்கூடும் என்றும், இதனால் கடுமையான குடிநீர்ப் பற்றாக்குறை மற்றும் உணவு உற்பத்திப் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) எச்சரித்திருப்பது கவலையளிக்கிறது.

    அந்த விளைவின் காரணமாக வேளாண்மை, நீர் இருப்பு மற்றும் மின்சாரத் தேவையில் ஏற்படக்கூடிய அடுத்தடுத்த பாதிப்புகளை முன்கூட்டியே திட்டமிட்டுத் தடுக்க வேண்டியது ஒரு பொறுப்புள்ள அரசின் கடமையாகும்.

    எனவே சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கோருவது போல, முதல்வர் விஜய் தலைமையிலான அரசு, எல் நினோ கண்காணிப்பிற்காக ஒரு பிரத்யேகப் பிரிவை அமைத்து, ஓராண்டு காலத்திற்கான விரிவான செயல்திட்டத்தை உடனடியாக உருவாக்க வேண்டும்.

    Advertisement

    மேலும், பேரிடர் மேலாண்மை, நீர்வளத்துறை மற்றும் வேளாண்மைத் துறைகளை ஒருங்கிணைத்து முன்னெச்சரிக்கைப் பணிகளை முடுக்கிவிடுவதன் மூலம், எல் நினோ பாதிப்பிலிருந்து தமிழக மக்களையும் விவசாயிகளையும் காக்க, தவெக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்." என வலியுறுத்தியுள்ளார்.

    English Summary

    BJP State President Nainar Nagendran has urged the TVK government to take immediate action to protect the people and farmers of Tamil Nadu from the impact of El Nino and to establish a dedicated cell for this purpose.