நீட் தேர்வுக்கு எதிராக அனுமதி பெற்று போராடினாலும் கைதா.. கொந்தளித்த சிபிஎம் சண்முகம்!

  • விழுப்புரம்: நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி போராட்டம் நடத்தியவர்களை காவல்துறையினர் கைது செய்ததை கண்டித்து சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் போராட்டத்தில் இறங்கினார். காவல்துறை அனுமதியுடன் அமைதி வழியில் போராடியவர்களை போலீசார் கைது செய்தது ஏன் என்றும் பெ.சண்முகம் கேள்வி எழுப்பினார்.

    Advertisement

    டெல்லியில் காக்ரோச் ஜனதா கட்சியினர் நடத்தி வரும் போராட்டத்திற்கு மாணவர்கள் மத்தியில் மிகப்பெரிய ஆதரவு எழுந்துள்ளது. நீட் தேர்வு வினாத்தாள் கசிவுக்கு பொறுப்பேற்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானை பதவி நீக்கம் செய்யக் கோரி தீவிர போராட்டத்தில் மாணவர்கள் இணைந்துள்ளனர். டெல்லியில் தொடங்கிய போராட்டம் தமிழ்நாட்டின் ஒவ்வொரு நகரங்களிலும் பரவியுள்ளது.

    Advertisement

    சென்னை, கோவை, மதுரை, செங்கல்பட்டு என்று பல்வேறு பகுதிகளிலும் மாணவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். அந்த வகையில் விழுப்புரம் மாவட்டத்திலும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களை விழுப்புரம் போலீசார் திடீரென கைது செய்த நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து சிபிஎம் மாநில செயலாளர் பெ.சண்முகம் போராட்ட களத்தில் இறங்கி இருக்கிறார்.

    இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனிடையே செய்தியாளர்களை சந்தித்து பெ.சண்முகம் பேசுகையில், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், நீட் தேர்வு வினாத்தாள் கசிவிற்கு பொறுப்பேற்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும் என்று கூறி மாணவர்கள் போராடி வருகின்றனர். போராடிய மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதால், 100க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

    Advertisement

    இதனையடுத்து இந்திய மாணவர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பாக இரவு முழுக்க போராட்டத்தை அமைதியாக நடத்துவது என்ற அறைகூவல் விடுக்கப்பட்டது. தமிழ்நாட்டில் இரவு 10 மணி வரை போராட்டத்தை நடத்துவது என்று தீர்மானித்தோம். அதற்கு காவல்துறையும் அனுமதி கொடுத்துள்ளது.

    தமிழ்நாடு முழுவதும் 25க்கும் அதிக போராட்டங்கள் அமைதியாக நடந்து வருகிறது. ஆனால் விழுப்புரம் மாவட்டத்தில் மட்டும் அமைதியாக போராட ஒன்று கூடிய தலைவர்களை கடுமையாக தாக்கி அராஜகமாக கைது செய்து மண்டபத்தில் அடைத்துள்ளனர். விழுப்புரம் காவல்துறை மட்டும் தமிழக காவல்துறைக்கு அப்பாற்பட்டு தனித்து அதிகாரம் பெற்றுள்ளதா?

    Advertisement

    இந்த அராஜக நடவடிக்கைக்கு காரணமாக இருக்கும் அதிகாரி மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். கைது செய்யப்பட்ட அனைவரும் இந்த மைதானத்தில் மீண்டும் போராட வேண்டும். மண்டபத்திற்கு இழுத்து செல்லப்பட்ட அனைவரும் மீண்டும் இங்கு வர வேண்டும். இரவு 10 மணி வரை போராட்டம் நடைபெறும். காவல்துறை உயர் அதிகாரிகளின் பேச்சிற்கு உட்பட்டு மாவட்ட காவல்துறை நடந்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.

    English Summary

    NEET: CPM Leader P. Shanmugam Hits the Streets Against Police Arrests for arresting the protesters with Anti Neet Slogans