தமிழ்நாட்டில் புதிய மாவட்டம்..? கும்பகோணத்தை தலைமை இடமாகக் கொண்டு அமைக்க நடவடிக்கை - அமைச்சர் வினோத்

  • தஞ்சாவூர்: கும்பகோணத்தை தலைமை இடமாகக் கொண்டு புதிய மாவட்டம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று வேளாண்துறை அமைச்சர் வினோத் தெரிவித்துள்ளார்.

    Advertisement

    கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை திறந்துவைத்த பின் செய்தியாளர்களை சந்தித்த வேளாண் துறை அமைச்சர் வினோத் விவசாயிகளின் பயிர்க்கடன் தள்ளுபடியில் அவர்கள் விரும்பும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

    Advertisement

    தஞ்சை மாவட்டத்தில் தஞ்சை, கும்பகோணம் என 2 மாநகராட்சிகள் உள்ளன. இவற்றில் கும்பகோணம் மாநகரமானது காவிரி, அரசலாறு என்ற 2 ஆறுகளுக்கு இடையே அமைந்துள்ளது. கும்பகோணத்தில் பிரசித்தி பெற்ற கோயில்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளன. ஆன்மிக தலமாக விளங்கும் கும்பகோணத்திற்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்து தினமும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.

    கடந்த பல ஆண்டுகளாக கும்பகோணத்தை தலைமையிடமாக கொண்டு கும்பகோணம், பாபநாசம், திருவிடைமருதூர் ஆகிய வட்டங்களை உள்ளடக்கிய புதிய மாவட்டம் அறிவிக்க வேண்டும் என்று பொதுமக்கள், சமூக அமைப்புகள் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்து வருகின்றனர். இருந்தாலும் அவை அனைத்தும் கோரிக்கையாக மட்டுமே இருந்து வருகின்றன.

    Advertisement

    தஞ்சை மாவட்டத்தில் உள்ள அணைக்கரை போன்ற பகுதிகள் சுமார் 75 கிலோ மீட்டர் பயணம் செய்து தஞ்சை மாவட்ட ஆட்சியரை சந்திக்க வேண்டிய நிலை உள்ளது. முக்கியமாக மாவட்டமாக பிரிந்தால் கும்பகோணத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அமையும். இதனால் அங்குள்ள மக்கள் எளிதில் அதிகாரிகளை பார்க்க முடியும்.

    தஞ்சை மாவட்டத்திற்கும் கும்பகோணத்திற்கும் தனித்தனியான சலுகைகள் கிடைக்கும். முக்கியமாக வேளாண்மை சார்ந்த தொழில் செய்பவர்களுக்கு இதுவரையில் கிடைத்த நிதியை விட தற்போது சற்று அதிகமாகவே கிடைக்கும் என்பது கும்பகோணம் பகுதி மக்களின் எண்ணமாக உள்ளது.

    மக்களும் தங்களது கோரிக்கை நிறைவேறும் என்ற எண்ணத்தில் கும்பகோணம் பகுதிக்கு வரக்கூடிய அனைத்து அரசியல் முக்கிய பிரமுகர்களிடமும் தங்கள் கோரிக்கை மனுக்களை அளித்து வருகின்றனர்.

    Advertisement

    கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை திறந்துவைத்த பின் செய்தியாளர்களை சந்தித்த வேளாண்துறை அமைச்சர் வினோத், கும்பகோணத்தை தலைமை இடமாகக் கொண்டு புதிய மாவட்டம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

    விவசாயிகளின் பயிர்க்கடன் தள்ளுபடியில் அவர்கள் விரும்பும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். பருவ கால மாற்றங்கள் நிகழும் எல்நினோ கால கட்டத்தில் காவிரி டெல்டா பாசன பகுதி மக்களுக்கு உகந்த பயிர்களை சாகுபடி செய்ய ஆய்வு நடைபெற்று வருகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

    English Summary

    Agriculture Minister Vinoth has stated that steps will be taken to form a new district with Kumbakonam as its headquarters.