அப்பாடா அதிமுகவுக்கும் டிவி வந்தாச்சு.. பிறந்தது நியூஸ் ஜெ!


சென்னை: "நியூஸ் ஜெ" சேனலின் லோகோவை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இன்று அறிமுகம் செய்து வைத்தனர்.

ஜெயலலிதா இருந்தவரை அதிமுக தரப்பில் ஜெயா டிவியைத்தான் தங்கள் கட்சிக்கு பலமாகவும் உரமாகவும் பயன்படுத்தினார்கள். ஆனால் அவர் மறைந்தபிறகு நடைபெற்ற பல்வேறு சூழல் காரணமாக டிடிவி தினகரனின் வசம் முழுவதுமாக ஜெயா டிவி போய்விட்டது.

தனி சேனல் இல்லை

இதனால் அதிமுக என்ற பலம் வாய்ந்த கட்சிக்கு என்று தனியாக சேனல் இல்லை. அதுமட்டுமல்லாமல் தற்போது அனைத்து கட்சியை சேர்ந்தவர்களுமே தங்களுக்கென்றும், தங்கள் கட்சியின் செய்தி, கொள்கைகளை பரப்புவதற்கும் தனியாகவே டிவி ஆரம்பித்து செயல்பட்டு வந்து கொண்டிருக்கிறார்கள்.

நமது அம்மா நாளிதழ்

அப்படி இருக்கும்போது, தமிழகத்தின் பிரதான கட்சியான, அதிலும் ஆளும் கட்சியான அதிமுகவுக்கு ஒரு டிவி இல்லாதது ஒரு பெரிய குறையாகவே இருந்தது. இந்நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு ‘‘நமது அம்மா'' என்ற நாளிதழ் தொடங்கப்பட்டது.

இன்று அறிமுகம்

இதனை தொடர்ந்து தற்போது புதிய சேனலும் துவங்கப்பட்டுள்ளது. "நியூஸ் ஜெ" என்ற பெயரில் இந்த புதிய சேனல் உதயமாகி உள்ளது. சேனலை துவக்குவதற்கான அனைத்து பணிகளும் சமீபத்தில் நடைபெற்று முடிந்த நிலையில், இன்று. நியூஸ் ஜெ சேனலின் லோகோவை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் ஆகியோர் சென்னை, கலைவாணர் அரங்கில் நடைபெற்ற விழாவில் அறிமுகம் செய்து வைத்தனர்.

பெரிய தூண்

விழாவில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், அதிமுக நிர்வாகிகள் என பல்வேறு தரப்பினர் கலந்து கொண்டனர். அநேகமாக இம்மாத இறுதியில் இந்த புதிய சேனல் ஒளிபரப்பப்படலாம் என்றும் கூறப்படுகிறது. அப்படி இந்த மாத இறுதியில் இந்த சேனல் வந்துவிட்டால், கண்டிப்பாக நடைபெற உள்ள 2 முக்கிய இடைத்தேர்தல்களுக்கு பெரிய தூணாக இருக்கும் என்பது உறுதி.

Have a great day!
Read more...

English Summary

News J news Channel launched Today