குன்னூரில் பட்டாசு சத்தத்தால் வீட்டில் புகுந்த சிறுத்தை.. கம்புடன் விரட்டிய 60 வயது நீலகிரி பூஜம்மா

  • ஊட்டி: நீலகிரியில் சிறுத்தைகள் நடமாட்டம் பெருகி வருகிறது. குடியிருப்புகளுக்குள் சிறுத்தைகள் சர்வசாதாரணமாக உலா வருவது, நீலகிரி மாவட்ட மலைப்பகுதி மக்களின் அன்றாட வாழ்வாதாரத்தையும் பாதுகாப்பையும் கேள்விக்குறியாக்கியுள்ளது. இதோ இப்போதும் குன்னூரில் ஒரு சம்பவம் நடந்து காண்போரை ப்தற வைத்துள்ளது.

    Advertisement

    நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள தேவர்சோலை பகுதியில் தேயிலை தோட்டங்களிலிருந்து வெளியேறும் சிறுத்தைகள் உணவு தேடி குடியிருப்பு பகுதிகளுக்குள் தொடர்ந்து உலா வருவதால் அந்த பகுதி மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.

    Advertisement


    நீலகிரி சிறுத்தை

    இப்படித்தான் கடந்த மாதமும் ஒரு சம்பவம் நடந்தது.. சம்பவத்தன்று சுமார் 7 மணி அளவில் குடியிருப்புப் பகுதிக்குள் நுழைந்த சிறுத்தை ஒன்றை பார்த்து அலறியடித்து ஓடியிருக்கிறார்கள் பொதுமக்கள்.. உடனடியாக வீடுகளுக்குள் சென்று பதுங்கிக்கொண்டதுடன், ஜன்னல் வழியாக அதைப் செல்போனில் வீடியோவாகப் பதிவு செய்தனர்..

    மேலும், அந்த பகுதியில் அதிகரித்து வரும் சிறுத்தை நடமாட்டத்தை கட்டுப்படுத்த வனத்துறையினர் உடனடியாகக் கண்காணிப்பை தீவிரப்படுத்தி, கூண்டு வைத்து அந்த சிறுத்தையை பிடிக்க வேண்டும் என்று அம்மக்கள் வேண்டுகோளும் விடுத்திருந்தனர்.

    குன்னூர் பட்டாசு சத்தம்

    இந்நிலையில் மீண்டும் நீலகிரியை, ஒரு சிறுத்தை மிரள விட்டுள்ளது.. குன்னூர் காமராஜபுரம், ஆரோக்கியபுரம் பகுதியில் கடந்த சில நாட்களாகவே சிறுத்தைகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இந்நிலையில், அந்த பகுதியில் உள்ள அன்னை வேளாங்கண்ணி ஆலய திருவிழாவின் நிறைவு நிகழ்ச்சி நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. அப்போது வெடிக்கப்பட்ட பட்டாசுகளின் பயங்கர சத்தத்தைக் கேட்டு மிரண்டு போன சிறுத்தை ஒன்று, அங்கிருந்த தர்மா என்பவரது வீட்டுக்குள் புகுந்தது.

    Advertisement

    வீட்டுக்குள் சிறுத்தை நுழைந்ததை கண்ட குடும்பத்தினர் அலறியடித்துக்கொண்டு வெளியே ஓடினார்கள்.. மிரண்டு போன சிறுத்தையோ, வீட்டின் உள்ளே இருந்த கட்டிலுக்கு அடியில் புகுந்து பதுங்கிக் கொண்டது.

    60 வயது பூஜம்மாள்

    இப்படியொரு உயிருக்கு ஆபத்தான நிலையிலும் தர்மாவின் அம்மா 60 வயது பூஜம்மாள், பயப்படாமல் கையில் கம்பை எடுத்துக்கொண்டு சிறுத்தையை நோக்கி சத்தமிட்டு விரட்டினார். தடியுடன் பூஜம்மாள் ஓடிவருவதை பார்த்து நிலைதடுமாறிய சிறுத்தை, அங்கிருந்து வெளியேறி அருகிலுள்ள புதருக்குள் புகுந்து மறைந்தது. இந்த செயல்தான் அந்த பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

    கடந்த சில நாட்களாகவே கட்டபெட்டு வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் சிறுத்தைகளின் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும், இது தொடர்பாக வனத்துறையினர் எந்தவித முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

    Advertisement

    மனித-வனவிலங்கு மோதல் ஏற்பட்டு உயிரிழப்பு உண்டான பிறகு நடவடிக்கை எடுப்பதில் எந்தப் பயனும் இல்லை என்பதால், உடனடியாக அந்த சிறுத்தையை கூண்டு வைத்துப் பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விடுவதற்கு வனத்துறை போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

    கடந்த 15-ம் தேதி நடைபெற்ற கிராம சபை கூட்டத்திலும், இந்திரா நகர் பகுதி மக்கள் இதே குற்றச்சாட்டை முன்வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    English Summary

    Nilgiris Poojamamma, 60, Chases Leopard With a Stick After It Enters Coonoor Home