தமிழ்நாட்டுக்கு ஒரு ரூபாய் கூட பாக்கி இல்லை.. கடன் வாங்குவது குறித்தும் நிர்மலா சீதாராமன் அட்வைஸ்!


  • காஞ்சிபுரம்: தமிழ்நாட்டிற்கான நிதி நிலுவை எதுவும் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். அரசு கடன் வாங்குவதில் தவறில்லை என்றும், அந்த கடனை அடிப்படை கட்டமைப்பை உருவாக்க செலவிட வேண்டும் என்று கூறிய நிர்மலா சீதாராமன், நலத்திட்டங்களுக்கு மட்டுமே கடன் தொகையை செலவிடுவது சரியல்ல என்றும் தெரிவித்துள்ளார்.

    Advertisement

    தமிழ்நாட்டின் முதல்வராக விஜய் பொறுப்பேற்ற மேடையிலேயே கஜானா காலி என்று அறிவித்தார். இதன்பின் தமிழக நிதித்துறை சார்பாக வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என்றும் அறிவித்தார். இதன்படி வெளியிடப்பட்ட வெள்ளை அறிக்கையில், கடந்த 2021-ல் ரூ.5 லட்சம் கோடியாக இருந்த மொத்தக் கடன், ஐந்து ஆண்டுகளில் ஏறத்தாழ ரூ.10 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.

    Advertisement

    மாநில அரசு தனது முதல் 60 ஆண்டுகளில் திரட்டிய மொத்தக் கடனை விட, கடந்த 2021-2025 காலகட்டத்தில் வாங்கிய கடன் அதிகம் என நிதியமைச்சர் தெரிவித்தார். இதன் மூலமாக தமிழ்நாட்டில் வசிக்கும் ஒவ்வொரு தனிநபர் மீதும் தலா ரூ.1,28,934 கடன் உள்ளது என்று தெரிவிக்கப்பட்டது. இந்த தகவல்கள் ஏற்கனவே திமுகவின் இடைக்கால பட்ஜெட்டிலேயே அறிவிக்கப்பட்டிருந்தது.

    அதனை மீண்டும் தவெக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. அதேபோல் மத்திய அரசிடம் இருந்து வர வேண்டிய தொகை, மத்திய அரசால் குறைந்த வருவாய் குறித்து எந்த தகவலும் இடம்பெறவில்லை. இதன் காரணமாக கடந்த ஒரு வாரமாகவே தமிழக நிதி நிலை குறித்தும், கடன் குறித்தும் விவாதங்கள் எழுந்துள்ளன.

    Advertisement

    இந்த நிலையில் காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசுகையில், மத்திய அரசுடன் இணைந்து தமிழ்நாடு அரசு செயல்படும் என்று கூறி இருக்கின்றனர். அது மிகவும் வரவேற்கத்தக்கது. திமுக ஆட்சியின் போதும் கூட தமிழ்நாட்டிற்கு கொடுக்கப்பட வேண்டிய நிதி முறையாக கொடுக்கப்பட்டது.

    தமிழ்நாட்டிற்கு கொடுக்கப்பட வேண்டிய நிதியும் கட்டாயம் கொடுக்கப்படும். தற்போது எந்த நிதி நிலுவையும் இல்லை. அதேபோல் சட்டசபையில் தான் அரசியல் விமர்சனங்கள் வைக்கப்படும். எதிர்க்கட்சியும் பேசட்டும்.. ஆளுங்கட்சியும் பேசட்டும்.. அதில் எந்த தவறும் இல்லை. கடன் வாங்குவதில் எந்த தவறும் இல்லை. அதாவது கடன் வாங்கி கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும்.

    Advertisement

    கல்வி, மருத்துவம், தொழில் முதலீடுகளை செய்ய வேண்டும். இப்படியான முதலீடுகள் மூலம் நல்ல தாக்கல் பொருளாதார ரீதியாக ஏற்படும். கடன் வாங்கி என்ன செய்கிறோம் என்பதே முக்கியம். கடன் வாங்கி நலத்திட்ட உதவிகளுக்கு மட்டுமே செலவு செய்யக் கூடாது. அதனை பொருளாதார ரீதியாக நல்ல நிலையில் இருக்கும் போது, நலத்திட்ட உதவிகளை செய்யலாம் என்று தெரிவித்துள்ளார்.

    English Summary

    Nirmala Sitharaman: Use Loans for Infrastructure, Not Just Welfare, FM Nirmala Sitharaman’s Direct Advice to Tamil Nadu Govt