சென்னை: எடப்பாடி பழனிசாமி எம்.பி. சீட் தர மறுத்தார் என்று சி.வி. சண்முகம் கூறிய குற்றச்சாட்டு நூற்றுக்கு நூறு உண்மை தான் என பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார். ஒப்பந்தம் செய்த பிறகு, யார் யாரோ சொல்வதற்கெல்லாம் நான் பதில் சொல்ல முடியாது என்று எடப்பாடி பழனிசாமி அளித்த பதில் யாருக்குமே உகந்ததாக இல்லை. இதையேதான் சி.வி.சண்முகமும் சுட்டிக்காட்டியுள்ளார் என்றும் பிரேமலதா கூறினார்.
அதிமுகவில் பிளவு ஏற்பட்ட நிலையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம், "தேமுதிகவிற்கு எம்பி சீட் தருவதாகக் கொடுத்த வாக்குறுதியை எடப்பாடி பழனிசாமி நிறைவேற்றவில்லை என்று குற்றம் சாட்டினார். மேலும் எடப்பாடி பழனிசாமி இந்த வாக்குறுதியைக் காப்பாற்றாத காரணத்தாலே தேமுதிக கூட்டணியை விட்டு வெளியேறியது என்றும் சிவி சண்முகம் கூறினார். இந்த நிலையில் சிவி சண்முகம் கூறியது நூற்றுக்கு நூறு உண்மை என பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.
நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் விருத்தாசலம் தொகுதியில் வெற்றி பெற்ற தே.மு.தி.க பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவித்தார். விருதகிரீஸ்வரர் கோயிலுக்கு சென்று வழிபட்ட பிரேமலதா தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- எனக்கு வெற்றியை தேடித்தந்த மக்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள். அடுத்த மூன்று நாட்களுக்குத் தொகுதியின் அனைத்து ஒன்றியங்கள் உள்ளிட்ட பகுதிகளில் நேரடியாகச் சந்திக்க உள்ளேன். சட்டமன்றத்தில் தான் பேசியது வெறும் அறிமுக பேச்சு தான், தனது கன்னிப் பேச்சு இன்னும் முழுமையாகத் தொடங்கவில்லை. துறை சார்ந்த மானியக் கோரிக்கைகள் மற்றும் இலாக்கா விவாதங்களின்போது, விருத்தாசலம் தொகுதிக்கான கோரிக்கைகளை உறுதியாக சட்டசபையில் முன்வைப்பேன். குறிப்பாக, தனது தேர்தல் வாக்குறுதிப்படி, விருத்தாசலத்தைத் தனி மாவட்டமாக அறிவிப்பதே எனது முதல் கோரிக்கையாக இருக்கும். இதை முதலமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு சென்று நிறைவேற்ற முழு முயற்சி எடுப்பேன். ரத்தன் பண்டிட் விவகாரம் தொடர்பாகத் தான் சட்டமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு, அரசு அடுத்த சில நிமிடங்களிலேயே நடவடிக்கை எடுத்ததை வரவேற்கின்றேன். தமிழக மக்களின் நலனுக்காக அரசு கொண்டுவரும் நல்ல திட்டங்களுக்கு தேமுதிக எப்போதும் ஆதரவளிக்கும்.. 717 மதுபானக் கடைகளை மூடியதற்கும், பள்ளி மற்றும் கோயில்களுக்கு அருகிலிருந்த டாஸ்மாக் கடைகளை அகற்றியதற்கும் முதலமைச்சருக்கு வாழ்த்துக்கள். பெண்களின் பாதுகாப்பிற்காக 'சிங்கப்படை' அமைத்த தமிழக அரசின் நடவடிக்கைக்கு பாராட்டுக்கள். தவறுகள் நடக்கும்போது எதிர்க்கட்சியாக அதனைச் சுட்டிக்காட்டுவது, கேப்டன் விஜயகாந்த் கற்றுக்கொடுத்த பாடம். அ.தி.மு.க-விலிருந்து பிரிந்து வந்தவர்கள் தற்போதைய ஆட்சிக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளித்தால் அதனை வரவேற்கலாம். அவ்வாறு இல்லாமல், திரைமறைவுப் பேச்சுவார்த்தைகள் மூலம் 'குதிரை பேரம்' நடந்தால், அது தமிழகம் இதுவரை கண்டிராத தவறான முன்னுதாரணமாகிவிடும். இதுகுறித்து முதலமைச்சர் வெளிப்படையான அறிவிப்பை வெளியிட வேண்டும். இளைஞர்களுக்கு ஒரு தவறான முன்னுதாரணத்தை இந்த அரசு ஏற்படுத்திவிடக் கூடாது. நாடாளுமன்றத் தேர்தலின்போது தே.மு.தி.க-வுக்கு 5 மக்களவைத் தொகுதிகளும், ஒரு மாநிலங்களவை இடமும் தருவதாக அ.தி.மு.க தரப்பில் கையெழுத்திட்டுக் கொடுக்கப்பட்டது உண்மைதான். இதை திருவண்ணாமலையில் ஏற்கனவே செய்தியாளர்களிடம் ஆதாரப்பூர்வமாக ஒப்பந்தப் பத்திரத்தைக் காண்பித்து விளக்கியிருக்கிறேன். "எடப்பாடி பழனிசாமி எம்.பி. சீட் தர மறுத்தார்" என்று சி.வி.சண்முகம் கூறிய குற்றச்சாட்டு நூற்றுக்கு நூறு உண்மை. ஒப்பந்தம் செய்த பிறகு, "யார் யாரோ சொல்வதற்கெல்லாம் நான் பதில் சொல்ல முடியாது" என்று எடப்பாடி பழனிசாமி அளித்த பதில் யாருக்குமே உகந்ததாக இல்லை. இதையேதான் சி.வி.சண்முகமும் சுட்டிக்காட்டியிருக்கிறார்.. இவ்வாறு பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
தமிழக அரசுக்கு பாராட்டு
சிவி சண்முகம் சொல்வது 100-க்கு 100 உண்மை