சென்னை: பொது வாழ்வில் இருந்து சில காலம் ஓய்வெடுக்கிறேன். தனிப்பட்ட வாழ்க்கையில் சிறிது காலம் கவனம் செலுத்த விரும்புகிறேன் என முன்னாள் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
கடந்த சட்டசபை தேர்தலில் மதுரை மத்திய தொகுதியில் திமுக சார்பில் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் போட்டியிட்டார். அவரை எதிர்த்து அதிமுக சார்பில் சுந்தர்.சி.யும் தவெக சார்பில் முஸ்தபாவும் போட்டியிட்டனர். இதில் முஸ்தபா வென்றார்.
இந்த நிலையில் பொது வாழ்க்கையில் இருந்து சில காலம் ஓய்வு பெறுவதாக பிடிஆர் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: 10 ஆண்டுகளுக்கு முன்பு நான் எனது நீண்ட கால வெளிநாட்டுப் பணியை விட்டுவிட்டு மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும், சமூகநலனுக்காக உழைக்கவும் தேர்தல் அரசியலில் நுழைந்தேன். எனது முதல் நேர்காணலில் பொதுச் சேவையுடன் சேர்த்து எனக்கு 3 தனிப்பட்ட நோக்கங்களும் இருப்பதாக குறிப்பிட்டிருந்தேன். அது நீதிக் கட்சி காலம் தொட்டு சமூகநீதி இயக்கம் ஆற்றிய பங்களிப்புகளின் வரலாற்றைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவது, எனது தந்தை, முன்னோர்கள் மதுரை மக்களுக்காகச் செய்த பணிகளைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வது, எனது குடும்பத்திற்கான நல்ல பெயரை உருவாக்குவது.. ஆகிய 3தான். மேலும் 10 ஆண்டுகளுக்கு பிறகு எனக்கு 60 வயதாகும் போது பொது வாழ்க்கையில் இருந்து விலகி 2016 ஆம் ஆண்டுக்கு முன்பு நான் வாழ்ந்தது போல சர்வதேச அளவிலான ஒரு தனிப்பட்ட குடிமகனாக வாழ விரும்புவதாக கூறியிருந்தேன். எப்போதும் போலவே வாழ்க்கை நாம் முழுமையாக கற்பனை செய்ய முடியாத வழிகளில் பயணிக்கிறது. ஒரு புறம் எனது கட்சி, மதுதை மத்திய தொகுதி மற்றும் தமிழகம் ஆகியவற்றில் பல வழிகளில் என்னால் மாற்றங்களை ஏற்படுத்த முடிந்தததற்கும், எனது 3 தனிப்பட்ட இலக்குகளையும் பெருமளவில் அடைய முடிந்ததற்கும் நான் திருப்தி அடைகிறேன். இருப்பினும் நான் தொடங்கிய பல நல்ல திட்டங்களையும் பல முயற்சிகளையும் என்னால் முழுமையாக முடித்து வைக்க முடியவில்லை என்ற ஆதங்கம் எனக்கு இருக்கிறது. அமைச்சராக எனது முதல் பதவியான நிதியமைச்சர் மற்றும் மனித மேலாண்மைத் துறை, எனது இரண்டாவது பதவியான தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறையில் சில சீர்திருத்தங்களும் புதிய முயற்சிகளும் முற்றுப்பெறாமல் உள்ளன. மதுரைக்காக விரிவான புதிய பாதாள சாக்கடை மற்றும் நீர் வடிகால் அமைப்புகள், மத்திய சிறைச் சாலையை நகரத்திற்கு வெளியே கொண்டு வருவது, மதுரை மெட்ரோ போன்ற திட்டங்களை என்னால் நடைமுறைக்கு கொண்டு வர முடியவில்லை. எனவே 2026 இல் பொது வாழ்க்கையில் இருந்து விலகும் எனது திட்டத்தை ஒத்தி வைத்தேன். வரும் 5 ஆண்டுகளில் மேற்கூறிய மக்கள் நல திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்பதால் இந்த முறை தேர்தலில் போட்டியிட கட்சித் தலைமையிடம் வாய்ப்பு கேட்டேன். அப்படி கிடைக்கும் பட்சத்தில் அமைச்சராகி, மதுரைக்கான திட்டங்களை முடித்துவிட்டு பிறகு ஓய்வு எடுத்துக் கொள்ளலாம் என நினைத்திருந்தேன். நான் கேட்டது போல் கட்சியும் எனக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுத்தது. அதற்கு கட்சித் தலைமைக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன். ஆனால் தேர்தல் முடிவைக் கருத்தில் கொள்ளும் போது அந்த நம்பிக்கையை இப்போது தள்ளி போட வேண்டியுள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக சட்டசபை உறுப்பினராக இருந்தது என்பது எனக்கும் எனது குழுவினருக்கும் இரவு- பகல் பாராத ஒரு தொடர் பொறுப்பாகவே இருந்தது. இப்போது ஒரு சில வாரங்கள் அந்த பொறுப்புகளில் இருந்து விலகி, எனக்கான நேரத்தை நானே முடிவு செய்யும் ஒரு சாதாரண குடிமகனாக வாழ ஆவலோடு இருக்கிறேன். இதற்கு முன்பு இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த அழைப்புகளையும் உரையாற்றுவதற்கான கோரிக்கைகளையும் நேரமின்மை காரணமாக என்னால் ஏற்க முடியவில்லை. இனி அவற்றை செய்ய போகிறேன். நான் அமைச்சராக இருந்த போது வெளிநாடுகளில் நடக்கும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவும், சொற்பொழிவு ஆற்றவும் வந்த அழைப்புகளை ஏற்க எனக்கு பலமுறை அனுமதி மறுக்கப்பட்டது. இப்போது கிடைத்துள்ள இந்த இடைவெளி அமெரிக்கா, ஐரோப்பா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் இருந்து நீண்ட நாட்களாக இருக்கும் அழைப்புகளுக்குப் பதில் அளிக்க எனக்கு ஒரு நல்ல வாய்ப்பாக அமையும். முன்பே குறிப்பிட்டது போல், ஹார்பர் காலிந்ஸ் நிறுவனத்திற்காக நான் எழுதவிருக்கும் புத்தகத்தின் வேலைகள் ஏற்கெனவே தாமதமாகிவிட்டன. இந்த ஓய்வு நேரத்தை அந்த புத்தகத்தை எழுதுவதற்காகப் பயன்படுத்திக் கொள்வேன். நான் 60 வயதை எட்டியதால் எனது அன்றாட பழக்க வழக்கங்களை முறைப்படுத்தி உடல்நலத்தை மேம்படுத்திக் கொள்ள விரும்புகிறேன். நான் இவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக் காரணமாக இருந்த அனைவருக்கும் , எனக்கு வாக்களித்த மதுரை மத்திய தொகுதி மக்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அடுத்த தேர்தல் வரை நான் ஒரு மக்கள் பிரதிநிதியாக இருக்க போவதில்லை என்ற உண்மையை நான் ஏற்கிறேன். ஆனாலும் பொதுச் சேவை, சமூகத்தில் நல்ல பல மாற்றங்களை கொண்டு வர வேண்டும் என்ற ஆர்வம் எனக்கு குறையவில்லை. புதிய ஆற்றலோடும், புத்துணர்ச்சியோடும் மீண்டும் வருவேன், நன்றி! என பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.