ஊடக வெளிச்சம் தேடும் ரஜினிகாந்த்.. போஸ்டர் ஒட்டியவர்களை கண்டிக்காமல்.. திடீர் பிரஸ் மீட் பின்னணி!

  • சென்னை: தன்னை ஒரு ஆன்மிகவாதி என்று காண்பித்துக்கொள்ளும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தற்போதைய அரசியல் மற்றும் சமூகச் சூழலில் வெளிச்சத்திற்கு (Lime light) வரத் துடிப்பது ஏன் என்ற கேள்வி எழுகிறது.

    Advertisement

    கடந்த சில தினங்களுக்கு முன்பு பெங்களூரில் உள்ள ரவிசங்கர் ஆசிரமத்திற்கு ரஜினிகாந்த் சென்றிருந்தார். அங்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் மத்தியில் குருதேவர் தர்ஷனுக்கு அழைத்தபோது, "நான் வந்தால் மக்கள் என் பின்னால் ஓடிவருவார்கள், ஆட்டோகிராஃப் கேட்பார்கள், உங்களுக்கு இடையூறாக இருக்கும்" என்று ரஜினி கூறியுள்ளார். ஆனால், வியப்பூட்டும் விதமாக அங்கிருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்களில் ஒருவர்கூட ரஜினிகாந்தைக் கண்டுகொள்ளவில்லை.

    Advertisement

    புகழ் வெளிச்சத்தில் இருந்த ரஜினிக்கு அது கண்டிப்பாக யோசனைக்குரிய விஷயமாகத்தான் இருந்திருக்கும். அந்த, ஏமாற்றம் அவரது அடுத்தடுத்த நடவடிக்கைகளில் வெளிப்பட்டது.

    இருபது ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழக அரசியலில் ஒரு 'சஸ்பென்ஸ்' விளையாட்டை ஆடி வந்தவர் ரஜினிகாந்த். அவர் விமான நிலையத்திற்கு வந்தாலே, நிம்மதியாகக் கழிவறைக்குக் கூடச் செல்ல விடாமல் ஊடகங்கள் மைக்கோடு வாசலில் தவம் கிடக்கும் காலம் ஒன்று இருந்தது. புலனாய்வு இதழ்கள் அவர் தூங்கும் புகைப்படத்தைக் கிடைத்தால் கூட, "தூக்கத்தில் அரசியல் கனவு காண்கிறார்" என்று பக்கம் பக்கமாக எழுதின. அந்த அளவுக்குப் புகழின் உச்சியில், எப்போதும் மீடியா வெளிச்சத்திலேயே இருந்தவர் அவர்.

    Advertisement

    ஆனால், அவரே அவசரமாகத் தனது போயஸ் கார்டன் இல்லத்தில் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பைக் கூட்டினார். அங்கு அவர் பேசுகையில் முதலில் கூறிய மேட்டர்தான் முக்கியமானது, "முந்தாநாள் பெங்களூர் போகும்போது ஏர்போர்ட்டில் மீடியாவிடம் பேசலாம் என்று நினைத்தேன், ஆனால் ஒருத்தரும் இல்லை. சரி திரும்பி வரும்போதாவது கேள்வி கேட்பார்கள் என்று பார்த்தேன், அப்போதும் யாரும் இல்லை" என்று தனது ஆதங்கத்தைக் கொட்டினார்.

    ஒரு உண்மையான ஆன்மிகவாதி தனிமையையும், புகழற்ற நிலையையும் தான் விரும்புவார். ஆனால், திரையுலகிலும் அரசியலிலும் எப்போதும் தன்னைச் சுற்றிப் பெரும் கூட்டம் இருக்க வேண்டும் என்று விரும்பிய ரஜினிக்கு, இன்று தன்னைத் தேடி ஒரு மைக்கோ அல்லது கேமராவோ வராதது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    Advertisement

    நடிகர் விஜய் தமிழகத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்று ஒட்டுமொத்த மீடியா வெளிச்சமும் அவர் பக்கம் திரும்பியுள்ள நிலையில், ரஜினிகாந்த் இழந்த தனது புகழையும் கவனத்தையும் (Attention) மீட்டெடுக்கவே இந்த பிரஸ் மீட்டை கூட்டியுள்ளார் என்கிறார்கள் அவரை தொடர்ந்து கவனித்து வருவோர்.

    2021ல் அரசியலுக்கு வந்திருந்தால் வென்றிருப்பேன் என்று சொன்னது, அவரது இந்த மனக்குமுறலை வெளிச்சம் போட்டுக் காட்டிவிட்டது. விஜய் தீவிர தேர்தல் அரசியலில் ஈடுபட்டபோது, காக்காக்கள் என்று சொல்லி சென்னை, மதுரை என ஒரு இடம் விடாமல் போஸ்டர் ஒட்டினர் ரஜினி ரசிகர்கள். சமூக வலைத்தளங்களில் வன்மத்தை கொட்டித் தீர்த்தனர். ஆனால், அதையும் மீறி விஜய் வென்று முதல்வரே ஆகிவிட்டார்.

    Advertisement

    அப்போதெல்லாம் ஒரு வார்த்தை கூட தனது ரசிகர்களை கண்டிக்காத ரஜினிகாந்த், இப்போது விஜய் சர்க்கார் அமைந்தபிறகு, திடீரென பொறாமை இல்லை என்று சொல்வது, வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் இடம்பெற்ற, எனது மகன் கையிலும்தான் மச்சம் இருக்கு, அதற்காக எனது மகனை சந்தேகப்படாதீர்கள் என்று வான்டடாக சென்று ஒப்புதல் அளித்த குறிசொல்லும் சூரியின் தந்தை கதாப்பாத்திரத்தை விஞ்சியது என்பது குறிப்பிடத்தக்கது.

    English Summary

    ரஜினிகாந்த் சமீபகாலமாக ஊடகங்களின் கவனத்தை ஈர்க்க முயற்சிப்பது குறித்து அரசியல் விமர்சகர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளனர். பெங்களூரு ஆசிரமத்தில் தன்னை யாரும் அடையாளம் காணாதது மற்றும் விமான நிலையத்தில் செய்தியாளர்கள் இல்லாதது குறித்து அவர் ஆதங்கப்பட்டார். நடிகர் விஜய் தமிழக முதல்வரான பிறகு ரஜினிகாந்த் தனது இழந்த கவனத்தை மீட்கவே இதுபோன்ற அறிக்கைகளை விடுவதாகக் கூறப்படுகிறது.