ரூ.1 லட்சம் மாமூல்.. செங்கல்சூளை உரிமையாளரை மிரட்டி தவெக நிர்வாகிக்கு நேர்ந்த கதி.. அதிரடி நீக்கம்

  • ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டத்தில் செங்கல்சூளை உரிமையாளர்களிடம் தவெக ஒன்றிய செயலாளர் விஜயகுமார் ரூ.1 லட்சம் மாமூல் கேட்டார். மாமூல் கொடுக்கவேண்டும். இல்லாவிட்டால் செங்கல்சூளைகளை இழுத்து மூடுவோம் என்று மிரட்டினார். இதுதொடர்பான வீடியோக்கள் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில் தான் விஜயகுமாரிடம் இருந்து பதவியை பறித்து கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்து முதல்வர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் அதிரடியாக நீக்கி உள்ளது.

    Advertisement

    சட்டசபை தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் வென்று ஆட்சியை பிடித்துவிட்டது. தவெக தலைவர் விஜய் முதல்வராகி விட்டார். விஜய் முதல்வரானது முதல் தவெகவினர் ஆங்காங்கே அட்டூழியம் செய்து வருகின்றனர். மருத்துவமனைகள், அரசு அலுவலகங்களில் தவெக நிர்வாகிகள் ஆய்வு மேற்கொண்டு அதிகாரிகளிடம் கேள்வி கேட்பது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

    Advertisement

    அதேபோல் சென்னையில் தவெக எம்எல்ஏக்களுடன் கட்சியின் நிர்வாகிகள் அரசு ஆலோசனை மீட்டிங்கில் பங்கேற்பது, அதிகாரிகளின் இருக்கைகளை ஆக்கிரமிப்பு செய்வது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வரிசையில் தான் ராணிப்பேட்டை மாவட்டத்தில் தவெக நிர்வாகி செய்த செயல் பெரும் சர்ச்சையை கிளப்பியது.

    அதாவது ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு சட்டசபை தொகுதிக்கு உட்டப்பட்ட கணியம்பாடி ஒன்றியத்தின் தவெக செயலாளராக விஜயகுமார் இருந்தார். இவர் தனது ஆதரவாளர்களுடன் சென்று கணியம்பாடி புதூரில் இயங்கி வரும் சண்முகம், தினகரன், சுனில்குமார், ரமேஷ், சுமன் ஆகியோரின் செங்கல்சூளைகளில் புகுந்து மாதம் ரூ.1 லட்சம் கொடுக்காவிட்டால் சூளைகளை இழுத்து மூடுவோம் என மாமூல் கேட்டு மிரட்டினார். அதோடு ஆபாசமாக பேசினார். இதனால் இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. போலீசார் சென்று சமாதானம் செய்தனர்.

    Advertisement

    இதுதொடர்பான வீடியோக்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் சர்ச்சையை கிளப்பியது. செங்கல்சூளை உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்கள் தாலுகா போலீசாரிடம் புகார் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், கணியம்பாடி பஸ் நிறுத்தம் அருகே வேலூர்-திருவண்ணாமலை பிரதான சாலையில் ரோடு மறியல் நடந்தது. தவெக நிர்வாகி மீது வழக்குப்பதிவு செய்யவும், கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

    இந்நிலையில் தான் கணியம்பாடி தவெக ஒன்றிய செயலாளர் விஜயகுமார் தவெகவின் பொறுப்பு அதிரடியாக பறிக்கப்பட்டுள்ளது. அதேபோல், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

    Advertisement

    ''ராணிப்பேட்டை மேற்கு மாவட்டம் ஆற்காடு சட்டசமன்ற தொகுதிக்கு உட்பட்ட கணியம்பாடி கிழக்கு ஒன்றிய செயலாளராக பதவி வகித்து வந்த டி விஜயகுமார் கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டதால் அவர் வகித்து வந்த ஒன்றிய செயலாளர் மற்றும் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் இன்று முதல் விடுவிக்கப்படுகிறார்'' என்று கூறப்பட்டுள்ளது.

    English Summary

    In Ranipet district, Vijayakumar, a Union Secretary of the TVK, demanded a bribe of Rs.1 lakh from brick kiln owners. He threatened that they must pay the bribe; otherwise, he would shut down their brick kilns. Videos regarding this incident surfaced and created a massive uproar. In light of these events, Chief Minister Vijay's Tamillaga Vettri Kazhagam has taken swift and decisive action, stripping Vijayakumar of his post and expelling him from all party responsibilities-including his basic membership.