அதிமுகவில் இருந்து விலகியது ஏன்? உடைத்து பேசிய செம்மலை.. எடப்பாடிக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!

  • சேலம்: அதிமுக மூத்த தலைவரான செம்மலை அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். அத்தோடு செய்தியாளர்களைச் சந்தித்த செம்மலை சில முக்கிய தகவல்களைப் பகிர்ந்து கொண்டார். அதிமுக இப்போது பலவீனமாக இருப்பதைப் பார்த்து வேதனையாக இருப்பதாகக் கூறிய அவர், தனது விலகலுக்குப் பிறகாவது அதிமுக தலைவர்கள் கட்சியைப் பலப்படுத்துவார்கள் என்று நம்புவதாகத் தெரிவித்தார்.

    Advertisement

    அதிமுகவில் கடந்த சில நாட்களாகவே தொடர்ச்சியாகப் பல்வேறு குழப்பங்கள் நிலவி வருகிறது. அதிமுகவில் எடப்பாடி தலைமையிலானோர் தவெக அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மறுபுறம் எஸ்பி வேலுமணி- சி வி சண்முகம் தலைமையிலான அதிமுகவினர் தவெக அரசுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இதனால் அதிமுகவில் மீண்டும் ஒரு குழப்பம் வெடித்துள்ளது.

    Advertisement

    இதற்கிடையே அதிமுகவின் மூத்த தலைவரான செம்மலை அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். எம்ஜிஆர்- ஜெயலலிதா காலத்தில் இருந்தே அதிமுகவில் இருந்து வந்த செம்மலை இப்போது அக்கட்சியில் இருந்து விலகியுள்ளார். 2001ல் அதிமுக அரசில் சுகாதாரத் துறை அமைச்சராகச் செம்மலை இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இதற்கிடையே அதிமுகவில் இருந்து விலகிய செம்மலை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் விலகல் குறித்து சில முக்கிய தகவல்களைப் பகிர்ந்து கொண்டார். எம்ஜிஆர் உருவாக்கி, ஜெயலலிதா காப்பாற்றிய இயக்கம் இப்போது பலவீனமடைந்துவிட்டது என்ற செம்மலை, கட்சியைப் பலப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் தலைவர்கள், நிர்வாகிகளுக்கு இல்லை என்றும் அதிமுக தலைவர்கள் நிர்வாகிகளிடம் இடையே உள்ள ஈகோ தான் கட்சி வளர்ச்சியைத் தடுக்கிறது என்றும் தெரிவித்தார்.

    Advertisement

    தொடர்ந்து பேசிய அவர், "அதிமுக ஒற்றுமையாக இருந்தாலே போதும்.. எனது விலகலுக்குப் பிறகாவது அவர்கள் நடவடிக்கை எடுப்பார்கள் என நம்புகிறேன்.. மூத்த நிர்வாகிகள் அமர்ந்து பேசி முடிவெடுக்க வேண்டும். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு எனக்குப் பல வாய்ப்புகள் மறுக்கப்பட்டுள்ளன. ஆனால், அதையெல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் கட்சித் தலைமைக்குக் கட்டுப்பட்டு நடந்தேன். ஆனால், இன்று கட்சியின் நிலைமை மோசமாக இருக்கிறது" என்றார்.

    அதேநேரம் தனக்கு வேறு கட்சியில் சேரும் எண்ணம் இல்லை என்பதைத் தெளிவுபடுத்திய செம்மலை, தனது எதிர்காலத்தைக் காலம் தீர்மானிக்கும் என்றும் தெரிவித்தார்.

    English Summary

    Veteran AIADMK leader and former Tamil Nadu Health Minister Semmalai has resigned from the party, citing internal weakness and leadership ego(அதிமுகவில் இருந்து செம்மலை விலகல்): Senior AIADMK Leader Semmalai latest news in tamil.