கட்சிக்கு உழைத்தவர்களுக்கு மதிப்பில்லை! திமுக மாவட்ட செயலாளர் திருப்பூர் செல்வராஜ் விலகல்

  • திருப்பூர்: திருப்பூர் திமுக மத்திய மாவட்ட செயலாளரும், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான கே.செல்வராஜ், திமுகவிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். அதோடு, தீவிர அரசியலிலிருந்தும் ஒதுங்கப் போவதாக கூறியிருப்பது திருப்பூர் அரசியல் வட்டாரத்தில் அதிர்வலை ஏற்படுத்தியுள்ளது. கட்சியில் நீண்ட காலமாக உழைத்தவர்களை விட, மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்களுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்படுவதாக அவர் வெளிப்படையாக குற்றஞ்சாட்டியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

    Advertisement

    திருப்பூரில் திமுக வளர்ச்சிக்காக பல ஆண்டுகளாக பணியாற்றியவர் செல்வராஜ். 1976ஆம் ஆண்டு தொழிற்சங்க பணியில் இருந்து தனது அரசியல் பயணத்தை தொடங்கிய அவர், பின்னர் நகர கழக செயலாளர், மேயர், மாவட்ட செயலாளர், சட்டப்பேரவை உறுப்பினர் என பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார்.

    Advertisement

    திருப்பூர் திமுகவின் முக்கிய முகங்களில் ஒருவராக இருந்த அவர், தற்போது கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்திருப்பது அங்குள்ள நிர்வாகிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய செல்வராஜ், கடந்த சில ஆண்டுகளாக கட்சிக்குள் ஏற்பட்ட மாற்றங்களே இந்த முடிவுக்கு காரணம் என்று கூறியுள்ளார். "2021க்கு பிறகு மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்களுக்கு அதிக அதிகாரம் வழங்கப்படுகிறது. பல ஆண்டுகளாக கட்சிக்காக உழைத்த எங்களை விட, வெளியிலிருந்து வந்தவர்களுக்கே முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது" என்று அவர் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

    குறிப்பாக, திருப்பூர் தெற்கு தொகுதியில் நடந்த சம்பவம் தான் தன்னை மிகவும் மனஉளைச்சலுக்கு உள்ளாக்கியதாகவும் அவர் கூறியுள்ளார். அந்த தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்திருந்த நிலையில், மாற்றுக் கட்சியில் இருந்து வந்த தினேஷ் குமாருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், அதற்குப் பின்னால் தொழிலதிபர் டாலர் பாலுவின் அழுத்தம் இருந்ததாகவும் அவர் கூறியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.

    Advertisement

    "நான் விருப்ப மனு கூட கொடுக்காத பல்லடம் தொகுதியில் போட்டியிட சொல்லப்பட்டது. இருந்தாலும் கட்சியின் கட்டளையை ஏற்று பணியாற்றினேன். ஆனால் கட்சிக்காக பல ஆண்டுகள் உழைத்த எனக்கு கிடைக்காத அதிகாரம், வெளியிலிருந்து வந்தவர்களுக்கு கிடைப்பதை பார்க்கும்போது மிகுந்த மன அழுத்தம் ஏற்பட்டது" என்று செல்வராஜ் தெரிவித்துள்ளார்.

    இதன் காரணமாகவே கட்சியின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும், அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும் விலக முடிவு செய்துள்ளதாக அவர் கூறியுள்ளார். அதேநேரத்தில், வேறு எந்த கட்சியிலும் இணையப் போவதில்லை என்றும், அரசியலிலிருந்து ஒதுங்கி இருக்கப் போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். செல்வராஜின் இந்த அறிவிப்பு திருப்பூர் திமுகவுக்குள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Advertisement

    குறிப்பாக, நீண்ட காலமாக கட்சியில் உழைத்த பழைய நிர்வாகிகளுக்கு உரிய மரியாதை கிடைக்கவில்லை என்ற விமர்சனம் மீண்டும் எழுந்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாக திமுகவில் பல்வேறு மாற்றுக் கட்சியினரும் இணைந்து வருகின்றனர். அவர்களில் சிலருக்கு முக்கிய பதவிகள் மற்றும் தேர்தலில் வாய்ப்புகள் வழங்கப்பட்டு வருவது பழைய நிர்வாகிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி வருவதாக கூறப்படுகிறது.

    அந்த அதிருப்தியின் வெளிப்பாடாகவே செல்வராஜின் விலகல் பார்க்கப்படுகிறது. இந்நிலையில், செல்வராஜை சமாதானப்படுத்த திமுக மேலிடம் முயற்சி எடுக்கும் அல்லது அவரது விலகலை சாதாரணமாகவே எடுத்துக் கொள்ளுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

    English Summary

    Former Tiruppur MLA Selvaraj resigns from DMK, citing preference for leaders from rival parties.