சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து.. 3 தொழிலாளர்கள் பலி.. ஒருவர் படுகாயம்!

  • விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே நமஸ்கரித்தான்பட்டியில் செயல்பட்டு வரும் கிருஷ்ணா பட்டாசு ஆலையில் இன்று ஏற்பட்ட திடீர் வெடி விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

    Advertisement

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி சுற்று வட்டாரப் பகுதிகளில் சிறிய மற்றும் பெரிய அளவில் 1000-க்கும் அதிகமான பட்டாசு ஆலைகள் உள்ளன. நாட்டின் மொத்த பட்டாசு உற்பத்தியில் 90 சதவீதத்துக்கும் மேல் சிவகாசி பட்டாசு ஆலைகளில் உற்பத்தி செய்யப்படுகிறது.

    Advertisement

    கடந்த ஆண்டு உரிமம் ரத்து செய்யப்பட்ட 80-க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகளுக்கு உற்பத்தி அனுமதி வழங்கப்படவில்லை. இந்த ஆண்டு 200-க்கும் அதிகமான பட்டாசு ஆலைகளில் உற்பத்திக்கு தடை விதிக்கப்பட்டது. பட்டாசு ஆலைகள் மூடப்பட்டதால் 10 ஆயிரத்துக்கும் அதிகமான தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளதாக கூறி, தொழிலாளர்கள் சார்பில் போராட்டங்கள் நடைபெற்றன.

    பட்டாசு ஆலைகளை திறக்க வலியுறுத்தியும், ஆய்வை கண்டித்தும் சிறு பட்டாசு ஆலை உரிமையாளர் சங்கம் சார்பில் ஆகஸ்ட் 12 ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. தொடர் விபத்து மற்றும் உயிரிழப்புகளை தடுக்கவே ஆய்வுகள் நடைபெறுகின்றன. உங்கள் பாதுகாப்பே முக்கியம், யாரும் கவலைப்பட வேண்டாம் என சிவகாசி தொகுதி எம்எல்ஏவும் தொழில்துறை அமைச்சருமான கீர்த்தனா தெரிவித்திருந்தார்.

    Advertisement

    இந்நிலையில் சிவகாசி அருகே நமஸ்கரித்தான்பட்டியில் உள்ள கிருஷ்ணா பட்டாசு ஆலையில் இன்று பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. பட்டாசு ஆலையில் தொழிலாளர்கள் இன்று வழக்கம்போல பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது திடீரென வெடி விபத்து ஏற்பட்டது.

    இந்த வெடி விபத்தில் 3 பேர் பலியாகினர். ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார். விபத்தில் படுகாயமடைந்த ஒருவர் மீட்கப்பட்டு, உடனடியாக மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார்.

    இந்தச் சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். மேலும் ஆலையின் உள்ளே யாரேனும் சிக்கியுள்ளார்களா என தேடி வருகின்றனர். வெடி விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

    English Summary

    Three people died and one person was critically injured in a sudden explosion today at Fireworks factory in Namaskarithanpatti, near Sivakasi in Virudhunagar district.