நெல்லையில் 2 பெண்களுக்கிடையே நடந்த சண்டை! 20 ஆண்டுகளில் இதுவரை 9 பேர் படுகொலை! பகீர் தகவல்!

  • நெல்லை: கடந்த 2006 ஆம் ஆண்டு 2 பெண்களுக்கிடையே நடந்த குழாயடி சண்டையால் கடந்த 20 ஆண்டுகளில் இதுவரை 9 உயிர்கள் பறிபோன சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    Advertisement

    கடந்த 2 ஆம் தேதி நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அருகே பைக்கில் சென்ற தந்தை, மகன்கள் மீது காரில் சென்ற மர்மகும்பல் வேண்டுமென்றே விபத்தை ஏற்படுத்திய அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

    Advertisement

    கல்லிடைக்குறிச்சி அருகே மூலச்சி கிராமத்தை சேர்ந்தவர் சித்திரபுத்திரன் (70), இவரது மகன் காளிமுத்து (40). இவர் கடந்த 2 ஆம் தேதி தனது மகன்கள் சின்னத்துரை (15), ஜெயராஜ் (5) ஆகியோருடன் பைக்கில் சென்றுக் கொண்டிருந்தார். அப்போது அந்த பைக் மீது கார் வேண்டுமென்றே மோதியதில் ஜெயராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    படுகாயங்களுடன் உயிருக்கு போராடிய காளிமுத்துவை அந்த கும்பல் அரிவாளால் வெட்டி, அவரது தலையை துண்டித்து படுகொலை செய்தது. மேலும் அங்கிருந்த சின்னத்துரையின் காலில் அரிவாளால் வெட்டிவிட்டு அந்த கும்பல் தப்பியோடியது.

    Advertisement

    மேலும் காளிமுத்துவின் துண்டிக்கப்பட்ட தலையை எடுத்துக் கொண்டு கல்லிடைக்குறிச்சி அருகே கரம்பை மெயின் ரோட்டில் வீசியது. இந்த சம்பவம் குறித்து வீரவநல்லூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இது தொடர்பாக மூலச்சி பகுதியைச் சேர்ந்த சிவகுருநாதன் மகன்கள் மகேஷ், மணிகண்டன், கிருஷ்ணன், பெருமாள்பாண்டியன் மகன்கள் அருள், மணி, பட்டுராஜா, ராசையா மகன்கள் சுபாஷ், மகேந்திரன், வெள்ளப்பாண்டி மகன் தங்கதுரை, கிருஷ்ணன் மகன் கந்தன், மூக்காண்டி மகன் ராஜதுரை ஆகிய 11 பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர். தலைமறைவாகிய இந்த 11 பேரை கைது செய்ய தனிப்படை போலீஸார் தீவிரம் காட்டி வந்தனர்.

    Advertisement

    இந்த நிலையில் மகேஷ், குமார், முத்துச்செல்வன் ஆகிய 3 பேர் இன்று கைது செய்யப்பட்டனர். விசாரணையில் குழாயடி சண்டை தீராத பகையாக மாறியதால் காளிமுத்து, ஜெயராஜ் உயிருடன் சேர்த்து 9 உயிர்கள் காவு வாங்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    மூலச்சி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சித்திரபுத்திரனும் பெருமாள்பாண்டியனும் உறவினர்கள். இவர்கள் அடுத்தடுத்த வீடுகளில் ஒற்றுமையாகவே வசித்து வந்தனராம்.

    கடந்த 2006 ஆம் ஆண்டு சித்திரபுத்திரனின் மகன் சுப்பிரமணியன் மனைவிக்கும் பெருமாள்பாண்டியனின் மனைவிக்கும் தெருக்குழாயில் தண்ணீர் பிடிப்பதில் பிரச்சினை ஏற்பட்டது.

    இதையடுத்து இரு குடும்பத்தினருக்கும் அவ்வப்போது மோதல் ஏற்பட்டு வந்ததாம். கடந்த 2007ஆம் ஆண்டு பெருமாள்பாண்டியன் தரப்பினர் சுப்பிரமணியனை கொலை செய்தனராம்.

    Advertisement

    இதையடுத்து 2008ஆம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் சுப்பிரமணியின் தம்பிகள் பாபநாசம், பெருமாள் ஆகிய இருவரும் படுகொலை செய்யப்பட்டனர். இந்த கொலைக்கு பழிக்குப்பழியாக கல்லிடைக்குறிச்சியில் பெருமாள்பாண்டியனின் ஆதரவாளரான சுப்பையா என்பவரை சித்திரபுத்திரனின் மற்றொரு மகனான காளிமுத்து, கூட்டாளிகள் வெட்டிக் கொலை செய்தனர்.

    இதையடுத்து 2009ஆம் ஆண்டு திருப்பூர் பல்லடம் பகுதியில் வைத்து பெருமாள்பாண்டியன் தரப்பைச் சேர்ந்த சின்னதம்பியை படுகொலை செய்தனராம். 2010இல் பெருமாள்பாண்டியன் தலை துண்டிக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.

    பின்னர் சித்திரபுத்திரன் தரப்பைச் சேர்ந்த குமார் என்பவர் அதே ஆண்டு திண்டுக்கல்லில் படுகொலை செய்யப்பட்டார். இதை தொடர்ந்து இரு தரப்பினரிடமும் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து கடந்த 16 ஆண்டுகளாக இவர்களிடையே எந்த பிரச்சினையும் இல்லாமல் இருந்து வந்தது.

    Advertisement

    இந்த நிலையில் கல்லிடைக்குறிச்சி அருகே காளிமுத்துவும் அவரது மகன் ஜெயராஜும் கொலை செய்யப்பட்டனர். கடந்த 2010 ஆம் ஆண்டு பெருமாள்பாண்டியன் மீது காரை மோதவிட்டு அவரது தலையை துண்டித்து கொலை செய்தனர். அது போல் அவரது கொலை செய்யப்பட்ட அதே பாணியில் அதே இடத்தில் காளிமுத்துவும் அவரது மகனும் கொலை செய்யப்பட்டனர்.

    பெருமாள்பாண்டியனின் பழைய காரை வைத்தே கொன்றனர். இப்படியாக இரு பெண்களுக்கு இடையே நடந்த குழாயடி சண்டையால் 20 ஆண்டுகளாக இதுவரை 9 பேர் கொலை செய்யப்பட்டனர்.