சென்னை: தமிழ்நாடு உருவாக்கப்பட்ட 1956 ஆம் ஆண்டு நவம்பர் 1 ஆம் தேதியை பெருமைப்படுத்திடும் வகையில் ஆண்டுதோறும் நவம்பர் 1 ஆம் நாள் 'தமிழ்நாடு நாள்' எனக் கொண்டாடப்படும் என தவெக அரசு தெரிவித்துள்ளது. நவம்பர் 1, ஜூலை 18 என தமிழ்நாடு நாள் தொடர்பாக அதிமுக, திமுக ஆகிய கட்சிகள் இருவேறு நிலைப்பாடு கொண்டிருக்கும் நிலையில் இந்த 2 நாட்களையுமே தமிழ்நாடு நாளாக கொண்டாடுவதாக அறிவித்துள்ளது தவெக அரசு.
இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு நாட்டின் பல பகுதிகளில் மொழி வாரியாக மாநிலங்களை பிரிக்கக் கோரி போராட்டங்கள் வெடித்தன. அதைத் தொடர்ந்து 1956 ஆம் ஆண்டு மொழி வாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. அதுவரை இந்தியாவில் 6 மாநிலங்களும், 3 யூனியன் பிரதேசங்களும் மட்டுமே இருந்த நிலையில், அவை பிரிக்கப்பட்டு 14 மாநிலங்களும், 6 யூனியன் பிரதேசங்களும் உருவாக்கப்பட்டன.
அதுவரை ஆந்திரா, கர்நாடகா, கேரளம் ஆகியவற்றின் நிலப்பரப்பை உள்ளடக்கியிருந்த சென்னை மாகாணத்தின் பெரும்பகுதிகள் அங்கு வாழும் மக்கள் பேசும் மொழிகளின் அடிப்படையில் பிரித்து, புதிய மாநிலங்களாக உருவாக்கப்பட்டன. தமிழ்நாடு என்ற பெயரில் இப்போது அழைக்கப்படும் நிலப்பரப்பு புதிய சென்னை மாகாணமாக (மெட்ராஸ் ஸ்டேட்) அறிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் கர்நாடகா, கேரளம், ஆந்திரா ஆகிய மாநிலங்களும், புதுச்சேரி யூனியன் பிரதேசமும் நவம்பர் ஒன்றாம் தேதியைத் தான் முறையே கர்நாடகா நாள், கேரளம் நாள், ஆந்திரா நாள், புதுச்சேரி நாள் என்று கொண்டாடி வருகின்றன. மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பிறகு, சென்னை மாகாணம் என்ற பெயரில் இருந்த மாநிலத்தை, 'தமிழ்நாடு' என்று பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்று நீண்டகாலமாகப் போராட்டங்கள் நடைபெற்று வந்தன. 1967 ஆம் ஆண்டு முதல்வராக இருந்த பேரறிஞர் அண்ணா, ஜூலை 18 ஆம் தேதி தமிழக சட்டப்பேரவையில் சென்னை மாகாணத்தை 'தமிழ்நாடு' என்று பெயர் மாற்றுவதற்கான தீர்மானத்தை நிறைவேற்றினார். மொழிவாரி மாநிலங்கள் உருவான நவம்பர் 1 ஆம் தேதியை, அண்டை மாநிலங்களான ஆந்திரம், கர்நாடகா, கேரளம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களைப் போல தமிழ்நாடும் கொண்டாட வேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாகவே தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்தது. அதையேற்று 2019 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் நவம்பர் 1 தமிழ்நாடு நாளாக அறிவிக்கப்பட்டது. நவம்பர் 1 ஆம் தேதி மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட நாள். எனவே அன்றைய தினம் மெட்ராஸ் மாகாணத்திலிருந்து ஆந்திரா, கேரளா மற்றும் கர்நாடகாவின் சில பகுதிகள் பிரிந்து சென்றதால், அந்த நாளை மாநில உருவாக்க நாளாகக் கொண்டாடுவது பொருத்தமற்றது என்ற குரல் எழுந்ததால், ஜூலை 18 ஆம் தேதி 'தமிழ்நாடு நாள்' என 2022-ல் அப்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். 1956-ம் ஆண்டே மொழிவாரியாக மாநிலங்கள் பிரிந்தாலும் இந்த நிலம் 'மெட்ராஸ் ஸ்டேட்' என்ற பெயரிலேயே தொடர்ந்தது. எத்தனையோ முயற்சிகள், தீர்மானங்கள், போராட்டங்கள் நிகழ்ந்தும் எதுவும் மாறவில்லை. 1967 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்தது திமுக. முதல்வரான அண்ணா. தமிழ்த்தாயின் ஏக்கம் தீர அண்ணா 'தமிழ்நாடு' என்ற பெயரினை அவையினில் முழங்க, ஒட்டுமொத்த மாநிலத்தின் உணர்வினையும் எதிரொலிக்கும் வகையில் உறுப்பினர்கள் எல்லாம் 'வாழ்க' என வாழ்த்திமகிழ்ந்த இந்த நாளே தமிழ்நாடு நாள் என ஜூலை 18 ஆம் தேதியைக் குறிப்பிட்டுச் சொன்னார். தமிழ்நாடு நாள் தொடர்பாக, திமுக, அதிமுக இரு கட்சி அரசுகளும் மாறுபட்ட நிலைப்பாட்டை கொண்டிருந்தன. தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு தவெக ஆட்சிக்கு வந்த பிறகு, தமிழ்நாடு நாள் விவகாரத்தில் என்ன நிலைப்பாட்டை எடுக்கும் என்பது பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. தவெக அரசு, ஜூலை 18-ஆம் நாள் தமிழ்நாடு நாள் கொண்டாட்டத்தை நடத்தியது. ஜூலை 18-ஆம் நாள் வாழ்த்துச் செய்தி வெளியிட்ட முதல்வர் ஜோசப் விஜய், "மெட்ராஸ் மாநிலம் உருவான நவம்பர் 1-ஆம் நாளையும் 'தமிழ்நாடு' பெயர் சூட்டும் தீர்மானம் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட ஜூலை 18-ஆம் நாளையும் அரசு கொண்டாடும்" என்று அறிவித்திருந்தார். தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யின் அறிவிப்பிற்கிணங்க, தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் நவம்பர் 1 ஆம் நாள் தமிழ்நாடு நாள் விழாவாக சென்னை அருங்காட்சியக அரங்கத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணி அளவில் கொண்டாடப்படுகிறது. பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் ராஜ்மோகன் இந்த விழா நிகழ்வில் பங்கேற்கிறார்.மொழிவாரி மாநிலங்கள் பிரிப்பு
தமிழ்நாடு பெயர் மாற்றம்
ஸ்டாலின் சொன்ன காரணம்
தவெக அரசின் நிலைப்பாடு
2 நாட்களும் தமிழ்நாடு நாள்