சாதி சான்றிதழ் தொடர்பாக தமிழக அரசு முக்கிய உத்தரவு.. பொதுமக்கள் அறிய வேண்டிய பெரிய மாற்றம்

  • கன்னியாகுமரி: கடந்த 2018-ம் ஆண்டு முதல் தற்போது வரை பலர் முறைகேடாக கல்வி, வேலைவாய்ப்பில் அரசின் சலுகையை பெறுவதற்காக முறைகேடாக பெறப்பட்ட பழங்குடியினர் சாதி சான்றிதழை ரத்து செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் தென்காசி மாவட்டம் செங்கோட்டை, அம்பாசமுத்திரம் பகுதிகளில் மட்டுமே காணிக்காரன், காணிக்கர் சமூகத்தினர் வசித்து வரும் நிலையில் இதர மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு எந்த அடிப்படையில் இந்த சான்றிதழ் வழங்கப்பட்டது என்றும் கலெக்டர்களுக்கு அரசு கேள்வி எழுப்பி உள்ளது. இதனால் பலருக்கும் சான்றிதழ் ரத்தாக போகிறது.

    Advertisement

    பழங்குடியினர் சமூகத்திற்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் அரசு பல்வேறு சலுகைகளை வழங்கி உள்ளது. உதாரணமாக கல்வி நிறுவன சேர்க்கைகளில் தனி இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. அதேபோல் பள்ளி கல்வி மற்றும் உயர் கல்வி படிக்க மாணவ மாணவிகளுக்கு கல்வி மற்றும் ஊக்கத்தொகையை அரசு வழங்குகிறது.

    Advertisement

    அதேபோல் ஏகலைவா மாதிரி பள்ளிகள் மற்றும் அரசு பழங்குடியினர் நல உண்டி உறைவிடப் பள்ளிகள் மூலம் இலவச தங்கும் வசதியுடன் கல்வியும் அரசால் வழங்கப்படுகிறது. மேலும் அரசுப் பணிகள் மற்றும் துறைசார் தேர்வுகளில் பழங்குடியினருக்கான இட ஒதுக்கீடும் வழங்கப்படுகிறது. அரசுப் பணித் தேர்வுகளில் விண்ணப்பிக்க வயது வரம்பிலும் சலுகைகள் தரப்படுகிறது. அதேபோல் அரசுப் பணிகளுக்கான போட்டித் தேர்வுகளில் பங்கேற்க இலவச பயிற்சி மற்றும் உதவித்தொகை கணிசமாக வழங்கப்படுகிறது.

    இதுதவிர ஏராளமான சலுகைகளும் அரசால் வழங்கப்படுகிறது. எனவே இந்த சலுகைகளை பெறுவதற்காக கடந்த 2018-ம் ஆண்டு முதல் தற்போது வரை பலர் முறைகேடாக பழங்குடியினர் சாதி சான்றிதழ் பெற்றிருப்பாக புகார்கள் எழுந்தது. இந்த விவகாரம் தமிழக அரசின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டிருக்கிறது. இதையடுத்து, இதுகுறித்து விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க மாவட்ட கலெக்டர்களுக்கு சமூகநீதித்துறை செயலாளர் டாக்டர் சுப்பையன் அறிவுறுத்தி உள்ளார்.

    Advertisement

    இதுதொடர்பாக அவர், கலெக்டர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில், 'தமிழ்நாடு பழங்குடியினர் பட்டியலில் உள்ள காணிக்காரன், காணிக்கர் இனத்தை சேர்ந்தவர்கள் கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் தென்காசி மாவட்டம் செங்கோட்டை, அம்பாசமுத்திரம் ஆகிய பகுதிகளில் மட்டுமே வசித்து வரும் நிலையில் இந்த பகுதிகளில் வசிப்பவர்களுக்கு மட்டுமே பழங்குடியினர் சாதி சான்றிதழ் வழங்கப்பட வேண்டும். ஆனால், 1.1.2018 முதல் 26.5.2026 வரை சென்னை, செங்கல்பட்டு, கடலூர், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், மதுரை, இராமநாதபுரம், திருவாரூர், வேலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் மொத்தம் 954 பேருக்கு காணிக்காரன், காணிக்கர் சமூகம் என்ற அடிப்படையில் பழங்குடியினர் சான்றிதழ் வழங்கப்பட்டு உள்ளது தெரியவந்துள்ளது.

    Advertisement

    கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் தென்காசி மாவட்டம் செங்கோட்டை, அம்பாசமுத்திரம் பகுதிகளில் மட்டுமே காணிக்காரன், காணிக்கர் சமூகத்தினர் வசித்து வரும் நிலையில் இதர மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு எந்த அடிப்படையில் இந்த சான்றிதழ் வழங்கப்பட்டது என்பதை கலெக்டர்கள் விசாரிக்க வேண்டும். முறைகேடாக சான்றிதழ் வழங்கியிருந்தால் உடனடியாக ரத்து செய்ய நடவடிக்கை மேற்கொண்டு எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த விவரத்தை அரசுக்கு தெரிவிக்க வேண்டும்" இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

    English Summary

    The government provides various concessions to the tribal community in education and employment: A significant order from the Tamil Nadu government regarding caste certificates—a major change the public needs to know about.