2 சம்பவம்.. இனி தமிழகத்திற்கு முதலீடு வரது கனவுதான்.. அண்டை மாநிலங்களை பார்த்து வியக்க வேண்டியதுதான்

  • சென்னை: தமிழகத் தொழில்துறையின் எதிர்காலம் குறித்த கவலை இப்போது உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. "முதலீட்டாளர்களின் சொர்க்கம்" என்று புகழப்பட்ட தமிழகத்தின் நிலைமை, கடந்த சில வாரங்களில் நடந்த இரண்டு முக்கிய சம்பவங்களால் தலைகீழாக மாறியுள்ளது. பக்கத்து மாநிலமான ஆந்திரா, ராக்கெட் வேகத்தில் முதலீடுகளை அள்ளிச்செல்ல, தமிழகமோ கையை பிசைந்து கொண்டு வேடிக்கை பார்க்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. இந்த இரண்டு முக்கிய இழப்புகள், தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சியைப் பெரிய கேள்விக்குறியாக்கியுள்ளன.

    Advertisement

    சம்பவம் 1: ஓசூரை விட்டு ஆந்திராவுக்குப் பறந்த ₹15,000 கோடி பாதுகாப்புத் துறை திட்டம்!

    இந்தியாவின் மிக முக்கிய ராணுவத் திட்டமான 'ஐந்தாம் தலைமுறை ஸ்டெல்த் போர் விமான' (AMCA) சோதனை மற்றும் ஒருங்கிணைப்பு மையத்தை ஓசூரில் அமைக்கத் தமிழக அரசு கடந்த 3 ஆண்டுகளாகப் பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. இதற்காக ஓசூர் விமான நிலையத் திட்டத்துடன் சேர்த்து, 100 ஏக்கர் நிலத்தை முற்றிலும் இலவசமாகத் தரவும், 3.5 கி.மீ நீளமுள்ள ஓடுதளத்தை அமைக்கவும் தமிழகம் தயாராக இருந்தது.

    Advertisement

    ஆனால், அனைத்து வசதிகளும் ஓசூரில் இருந்தும், இந்த ₹15,000 கோடி மதிப்பிலான மெகா திட்டம் ஆந்திர மாநிலம் புட்டபர்த்திக்குச் சென்றுவிட்டது. அங்கு மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆகியோர் இதற்கான அடிக்கல்லை நாட்டியுள்ளனர். தொழில்நுட்ப ரீதியாகத் தமிழகம் வலுவாக இருந்தும், இந்த வாய்ப்பை ஆந்திரா தட்டிப்பறித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    சம்பவம் 2: ஆந்திராவுக்கு நகர்ந்த ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் ₹2,500 கோடி ஆலை!

    1955-ஆம் ஆண்டு முதல் தமிழகத்தை மட்டுமே தனது முதன்மை உற்பத்தித் தளமாகக் கொண்டு இயங்கி வரும் உலகப் புகழ்பெற்ற நிறுவனம் ராயல் என்ஃபீல்டு (Royal Enfield). இந்த நிறுவனம், முதன்முறையாகத் தமிழகத்திற்கு வெளியே தனது புதிய பிரம்மாண்ட ஆலையை அமைக்கப் போவதாக அறிவித்துள்ளது.

    Advertisement

    ஆந்திர மாநிலம் திருப்பதிக்கு அருகில் உள்ள சத்தியவேடு பகுதியில், சுமார் ₹2,500 கோடி முதலீட்டில் இந்த புதிய தொழிற்சாலை அமையவுள்ளது. தமிழக எல்லையை ஒட்டியே இந்த முதலீடு ஆந்திராவிற்குள் சென்றிருப்பது, தமிழகத்தின் தொழில்துறை முகமதிப்பிற்கு விழுந்த அடுத்த பலத்த அடியாகும்.

    விஜய் ஆட்சிப் பொறுப்பேற்ற பின் முதலீட்டாளர்கள் தயக்கம்?

    தமிழகத்தில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள் மற்றும் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள தற்போதைய சூழல், பன்னாட்டு நிறுவனங்கள் மத்தியில் ஒருவித சுணக்கத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளதாகப் பொருளாதார வல்லுநர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

    புதிய அரசின் கொள்கைகள் எப்படி இருக்கும், அரசியல் அழுத்தங்கள் வருமா என்ற பயத்தால், புதிய நிறுவனங்கள் தமிழக அரசுடன் முதற்கட்ட பேச்சுவார்த்தை நடத்தக்கூடத் தயங்குகிறார்கள். தொழிலதிபர்களின் நம்பிக்கையைத் தமிழகம் இழந்து வருவதையே இந்த சம்பவங்கள் காட்டுகின்றன என்று பரவலாகக் கூறப்படுகிறது.

    Advertisement

    விடுபட்ட டி.ஆர்.பி. ராஜா, பி.டி.ஆர்-இன் உலகளாவிய தொடர்புகள்!

    கடந்த காலங்களில் தமிழகத்திற்குப் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் முதலீடுகளை ஈர்ப்பதில் முன்னாள் அமைச்சர்களான டி.ஆர்.பி. ராஜா மற்றும் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் ஆகியோரின் உலகளாவிய தொடர்புகளும், நவீன அணுகுமுறைகளும் மிக முக்கியப் பங்காற்றின. சர்வதேச நிறுவனங்களுடன் நேரடியாகப் பேசி முதலீடுகளைத் தக்கவைப்பதில் அவர்கள் வல்லவர்களாக இருந்தனர்.

    ஆனால், தற்போதைய நிர்வாகச் சூழலில் இத்தகைய தகுதிவாய்ந்த நபர்களின் வழிகாட்டுதல்களும், முதலீட்டாளர்களுடனான நேரடித் தொடர்புகளும் விடுபட்டுப் போயுள்ளன. உலக சந்தையில் முதலீட்டாளர்களைக் கவரும் ஆற்றல் படைத்த இவர்களின் பங்களிப்பு இல்லாதது, தமிழகத்திற்கு ஏற்பட்டுள்ள மிகப்பெரிய இழப்பாகப் பார்க்கப்படுகிறது.

    Advertisement

    அண்டை மாநிலங்களைப் பார்த்து வியக்கும் நிலை!

    ஆந்திரா போன்ற அண்டை மாநிலங்கள் "Speed of Doing Business" (வேகமான தொழில் அனுமதி) என்ற கொள்கை மூலம் வெறும் 36 நாட்களில் பெரிய திட்டங்களுக்கு அனுமதி வழங்கி அசத்துகின்றன. ஆனால், தமிழகத்திலோ நிலவும் அரசியல் குழப்பங்களால், கைக்கு வர வேண்டிய திட்டங்கள் ஒவ்வொன்றாக நழுவி வருகின்றன.

    இதே நிலை நீடித்தால், இனி வரும் காலங்களில் புதிய முதலீடுகள் வருவது வெறும் கனவாகவே முடியும். தமிழக அரசு உடனடியாக விழித்துக் கொண்டு முதலீட்டாளர்களின் நம்பிக்கையை மீட்டெடுக்காவிட்டால், வேலைவாய்ப்புகளுக்காக நம் இளைஞர்கள் அண்டை மாநிலங்களை நோக்கி ஓட வேண்டிய அவலநிலை ஏற்படும் என்பதில் சந்தேகமில்லை.

    English Summary

    Tamil Nadu Investment Drain: How the Loss of Key Projects to Andhra Pradesh during the New TVK Regime