15,000 ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு நிறுத்தம்.. தமிழக அரசின் மெத்தனம்.. அப்போ சம்பள உயர்வு கிடையாது?

  • தமிழக அரசுப் பள்ளிகளில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றி வரும் சுமார் 15,000 இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களின் வாழ்வாதாரம் தற்போது கடுமையான நிர்வாக முடக்கத்தை சந்தித்துள்ளது.

    Advertisement

    ஆசிரியர் பட்டயப்படிப்பு (B.Ed) உள்ளிட்ட கல்விச் சான்றிதழ்களின் உண்மைத்தன்மை சரிபார்ப்பு (Genuineness Verification) தாமதத்தால் "சிறப்பு நிலை ஊதிய உயர்வு" (Special Grade Pay) வழங்கும் பணி முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளது.

    Advertisement

    இந்தப் பிரச்னையின் வேர்கள் 2003-2004ஆம் ஆண்டுகளில் அ.தி.மு.க. ஆட்சியில் தொடங்குகிறது. அப்போது ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் மிகக் குறைந்த தொகுப்பூதிய அடிப்படையில் தற்காலிகமாக நியமிக்கப்பட்டனர். அவர்களுக்கு காலமுறை ஊதியம், ஆண்டு உயர்வு, பதவி உயர்வு உள்ளிட்ட எந்த அடிப்படைப் பலன்களும் மறுக்கப்பட்டன. 2006ஆம் ஆண்டு தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, ஆசிரியர்களின் தொடர் போராட்டத்தின் பலனாக தொகுப்பூதிய முறை ரத்து செய்யப்பட்டு, அனைவரும் காலமுறை ஊதியப் பிரிவில் (Regular Time Scale) கொண்டு வரப்பட்டனர்.

    இப்போது 20 ஆண்டுகள் பணி நிறைவு செய்த ஆசிரியர்களுக்கு அரசு விதிகளின்படி சிறப்பு நிலை ஊதிய உயர்வு வழங்க வேண்டும். இந்த உயர்வு அவர்களின் மாத சம்பளத்தை அதிகரிப்பதோடு, எதிர்கால ஓய்வூதியத்தையும் பெருமளவு உயர்த்தும். ஆனால், கல்வித் துறை விதித்துள்ள ஒரு கட்டுப்பாடு தற்போது பெரும் தடையாக மாறியுள்ளது. 10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு, இளங்கலை, முதுகலை மற்றும் B.Ed உள்ளிட்ட அனைத்து அசல் சான்றிதழ்களின் உண்மைத்தன்மை சான்று சமர்ப்பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

    Advertisement

    குறிப்பாக B.Ed சான்றிதழ்களை சரிபார்க்கும் பொறுப்பு ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) மற்றும் அரசுத் தேர்வுத்துறையிடம் உள்ளது. ஆனால் கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக இந்தச் சரிபார்ப்புப் பணி ஆமை வேகத்தில் நடைபெறுவதாக ஆசிரியர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதனால் மாவட்ட அளவில் உள்ள வட்டாரக் கல்வி அலுவலர்கள் (BEO) மற்றும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் (CEO) ஊதிய உயர்வுக் கோப்புகளை அங்கீகரிக்க முடியாமல் தவிக்கின்றனர். இம்மாத இறுதியில் பாதிக்கப்படும் ஆசிரியர்களின் எண்ணிக்கை 15,000ஐத் தொடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் ஒருவர் கூறியதாவது, "20 ஆண்டுகள் எந்தக் களங்கமும் இன்றி அரசுப் பள்ளிகளுக்காக உழைத்த பிறகும், எங்களின் அடிப்படை உரிமையான ஊதிய உயர்வைப் பெற அதிகாரிகளின் வாசலில் காத்துக் கிடக்க வேண்டிய அவலம் ஏற்பட்டுள்ளது. எங்கள் சான்றுகள் உண்மையானவை என்பதை நிரூபிக்க ஓராண்டுக்கும் மேல் காத்திருக்க வேண்டுமா?" என்று ஆதங்கப்பட்டார்.
    கல்விச் சமூக ஆர்வலர்கள் இது குறித்து கவலை தெரிவித்துள்ளனர். ஆசிரியர்களின் பொருளாதாரப் பாதுகாப்பு பாதிக்கப்படும்போது, அவர்களின் மன உளைச்சல் அதிகரித்து, வகுப்பறை கற்றல்-கற்பித்தல் செயல்பாடுகள் மற்றும் ஒட்டுமொத்த பள்ளிக் கல்வித் தரத்திலும் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எச்சரித்துள்ளனர்.

    Advertisement

    இந்த விவகாரத்தில் தமிழக முதலமைச்சர் மற்றும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் நேரடியாகத் தலையிட்டு, TRB மற்றும் தேர்வுத்துறையை ஒருங்கிணைத்து சிறப்பு முகாம்கள் மூலம் சான்றிதழ் சரிபார்ப்பை விரைந்து முடிக்க வேண்டும். தகுதியான ஆசிரியர்களுக்கு உடனடியாக சிறப்பு நிலை ஊதிய உயர்வு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

    இந்தப் பிரச்னை தீர்க்கப்படாவிட்டால், அரசுப் பள்ளி கல்வியின் தரம் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. ஆசிரியர்கள் நீண்டகாலமாக அர்ப்பணிப்புடன் பணியாற்றி வரும் நிலையில், அவர்களின் நியாயமான கோரிக்கைகளை அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்பதே தற்போதைய எதிர்பார்ப்பாக உள்ளது.

    English Summary

    Tamil Nadu Teachers Special Grade Pay Delay: 15000 Teachers Face Salary Hike Crisis