தஞ்சை: தஞ்சையில் 5 கோடி ரூபாய் லஞ்சம் பெற்ற புகாரில் காவல் ஆய்வாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். தனியார் மருத்துவமனை விவகாரத்தில் 5 கோடி ரூபாய் லஞ்சம் பெற்ற புகாரில் ஏற்கெனவே கைது செய்யப்பட்ட காவல் ஆய்வாளர் சுகுமாறனை பணியிடை நீக்கம் செய்து தஞ்சை சரக டிஐஜி நடவடிக்கை எடுத்துள்ளார்.
தஞ்சாவூர் ரகுமான் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சரவணன் (37). இவர் பங்குதாரர்களுடன் இணைந்து தஞ்சாவூர் வல்லம் சாலையில் தனியார் மருத்துவமனை ஒன்றை நடத்தி வருகிறார். மேலும், அந்த மருத்துவமனையின் நிர்வாக இயக்குநராகவும் செயல்பட்டு வருகிறார்.
இந்நிலையில், பங்குதாரர்களுக்கு இடையே திடீரென பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதில் ஒரு தரப்பினர் மருத்துவமனையை மூடவேண்டும் என்ற நோக்கத்தில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டதாக கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சரவணன் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி காவல் நிலையத்திலும், திருச்சி மத்திய மண்டல ஐஜி பாலகிருஷ்ணனிடமும் புகார் அளித்துள்ளார். தொடர்ந்து, எதிர்தரப்பினரும் திருச்சி மத்திய மண்டல ஐஜியிடம் புகாரளித்துள்ளனர். இந்நிலையில், எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்பு சட்டப்பிரிவுகளில் சரவணன், நிர்வாக சேர்மன் பாஸ்கரன், மருத்துவமனை மேலாளர் பாஸ்கர் ஆகியோர் மீது மருத்துவக் கல்லூரி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மருத்துவக் கல்லூரி காவல்துறையினர் இவர்கள் மூன்று பேரையும் கைது செய்துள்ளனர். பின்னர் அவர்கள் ஜாமீனில் வெளியே வந்துள்ளனர். இதனிடையே சரவணன் தமிழ்நாடு டிஜிபியிடம், "உள்நோக்கத்துடன் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து எங்களை மருத்துவமனையில் இருந்து வெளியேற்றும் முயற்சியில் காவல்துறை உயர் அதிகாரிகள் செயல்பட்டு வருகிறார்கள். எனவே இந்த வழக்கை சிபிசிஐடி காவல்துறையின் விசாரணைக்கு மாற்ற வேண்டும் எனவும், எங்கள் மருத்துவமனை விவகாரங்களில் சட்டத்திற்கு புறம்பாக இடையூறு செய்யும் அதிகாரி மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநருக்கு உத்தரவிட வேண்டும்" எனவும் புகாரளித்துள்ளார். இந்த வழக்கு சிபிசிஐடி காவல்துறையின் விசாரணைக்கு மாற்றி உத்தரவிடப்பட்டது. தொடர்ந்து, தனியார் மருத்துவமனை நிர்வாக இயக்குநர் சரவணனிடம் சிபிசிஐடி காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், பங்குதாரர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் காவல்துறையினர் ஒருதலைப் பட்சமாக நடந்து கொள்வதாகவும், வழக்கில் இருந்து விடுவிக்க காவல் ஆய்வாளர் சுகுமாறன் ஒருவர் ரூ. 5 கோடி வரை லஞ்சம் கேட்டதாகவும், இதில் ரூபாய் 3.5 கோடியை ரொக்கமாகவும், ரூபாய் ஒரு கோடியே 75 லட்சத்தை காசோலையாகவும் காவல்துறையினரிடம் வழங்கியதாகவும் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து பங்குதாரர்கள் மற்றும் சிலரிடம் சிபிசிஐடி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில், மாவட்ட குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் சுகுமாறன் வீட்டில் சிபிசிஐடி காவல்துறையின் 10 பேர் கொண்ட குழுவினர் சோதனை நடத்தினர். இந்த சோதனை சுமார் 6 மணி நேரம் வரை நீடித்தது. மேலும், காவல் ஆய்வாளர் சுகுமாறனிடமும் சிபிசிஐடி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில், நேற்று இரவு காவல் ஆய்வாளர் சுகுமாறனை, சிபிசிஐடி காவல்துறையினர் கைது செய்தனர். இதையடுத்து நெஞ்சு வலிப்பதாக கூறிய சுகுமாறன், தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த வழக்கு தொடர்பாக பல்வேறு ஆவணங்கள், வீடியோ பதிவுகள் ஆகியவற்றை கைப்பற்றிய சிபிசிஐடி காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், காவல் ஆய்வாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். தனியார் மருத்துவமனை விவகாரத்தில் 5 கோடி ரூபாய் லஞ்சம் பெற்ற புகாரில் கைது செய்யப்பட்ட காவல் ஆய்வாளர் சுகுமாறனை பணியிடை நீக்கம் செய்து தஞ்சை சரக டிஐஜி நடவடிக்கை எடுத்துள்ளார்.