வலுத்து வரும் அதிமுக - பாஜக சண்டை.. நிஜமா இல்லை ரீலா!??


சென்னை: அதிமுகவுக்கும் பாஜகவுக்கும் சண்டை வலுத்து வருகிறது.

ஜெயலலிதா இறந்ததிலிருந்தே, அதிமுக பாஜகவின் கைப்பாவையாகி விட்டது, மத்திய அரசின் அடிமையாகிவிட்டது, அதிமுகவை இயக்குவது மத்திய பாஜகதான் என அனைத்து கட்சி தலைவர்களுமே வெகுண்டு எழுந்து கருத்துக்களை பதிவிட்டனர். அதற்கேற்றவாறு, அதிமுகவும் பாஜகவின் இழுத்த இழுப்புக்கெல்லாம் சென்று கொண்டுதான் இருந்தது.

தாய்-மகன் உறவு

தமிழகத்தில் உள்ள சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் தமிழ் மொழி வாரம், அனைத்து பள்ளிகளிலும் யோகா பயிற்சி அளிக்கப்படும் என்ற அரசின் உத்தரவு உள்ளிட்டவற்றை கொண்டு வந்தது. அதோடு நீட் உட்பட நாட்டையே சீரழிக்கும் முக்கியமான பிரச்சனைகளுக்கு கூட வாய்திறக்காமல் அவர்களுக்கு ஒத்து ஊதியே வந்தது. அவ்வளவு எதற்கு, கடந்தமாதம் செய்தியாளர்களிடம் மாநில பாஜக தலைவர் தமிழிசை பேசும்போதுகூட, "பாஜக - அதிமுக உறவு தாய் - மகன் போன்றது" என்றார்.

வார்த்தை போர்

ஆனால் மீனாட்சி அம்மன் கோவில் தீப்பிடித்த விவகாரத்தில் பொன் ராதாகிருஷ்ணன், எச்.ராஜா, தமிழிசை போன்றோர் கடும் விமர்சனத்தை அரசுக்கு எதிராக வைத்தனர். எச்.ராஜா ஒருபடி மேலே சென்று இந்து அறநிலையத்துறைக்கு எதிராக கடும் விமர்சனத்தை வைத்தார். அதேபோல பொன்,ராதாகிருஷ்ணன், தமிழகத்தில் தீவிரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக மற்றொரு தீயை கொளுத்தி போட அது இன்னும் பற்றிக் கொண்டு எரிந்தது. இதனையடுத்து மத்திய அரசு தங்களுக்கு சேரவேண்டிய நிதியை தராமல் புறக்கணிப்பதாக அமைச்சர்கள் குற்றஞ்சாட்டினர். இப்படியே இரு தரப்பினரும் மாறி மாறி வார்த்தை போரில் ஈடுபட்டு வந்தனர்.

அதிகமான சாடல்

ஆனால் இப்போது நிலைமை இன்னும் மோசமாகிவிட்டது. எப்போது குட்கா விவகாரத்தை கையிலெடுத்து, அமைச்சர் விஜயபாஸ்கரின் ஊழல் விவகாரத்தில் சிபிஐ-யை சோதனைக்கு இறக்கிவிட்டார்களோ, அப்போதே பாஜகவுடன் பிரச்சனை வெடித்து கிளம்பியது. ஆனால் இதனை பெட்ரோல்-டீசல் விலை உயர்வு விவகாரத்தில் மத்திய அரசை அதிமுக அரசு அதிகமாக சாட ஆரம்பித்துள்ளது.

முதலமைச்சர் கண்டம்

இதுகுறித்து சேலம் விமானம் நிலையத்தில் கருத்து சொன்ன முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, எரிபொருள்கள் மீதான வரியை மத்திய அரசுதான் குறைக்கவேண்டும். இந்த விலை உயர்வுக்கும் மத்திய அரசு தான் காரணம். மாநில அரசால் வாட் வரியை குறைக்க இயலாது என்றார். அதேபோல, அமைச்சர் ஜெயக்குமாரும், மத்திய அரசு கலால் வரியை குறைத்தால்தானே பெட்ரோல், டீசல் விலை குறையும், அதோடு எங்களுக்கு போதுமான நிதியை வழங்கினால்தானே விலையை குறைக்க முடியும்" என்றார்.

மோதல் வலுக்கிறது

இப்படி பேட்டிகளை ஆளும் கட்சி ஒருபக்கம் கொடுத்து கொண்டிருந்தாலும், அதனை எழுத்தாகவே தங்களது அதிகாரப்பூர்வ பத்திரிகையான அம்மா நாளிதழில் கவிதை வடிவில் பகிரங்கமாகவே வெளியிட்டது. குறிப்பாக "மனிதன் நிம்மதியாய் வாழும் சூழல் இல்லை, சாமானியன் கவலை சர்க்காருக்கு புரியாதா என்று கேள்வி எழுப்பி கண்டன வரிகளை பதிவிட்டு தனது ஒட்டுமொத்த எதிர்ப்பையும் அதிமுக பாஜகவுக்கு காட்டியுள்ளது. உள்ளுக்குள் பல விவகாரங்கள் அதிமுக-பாஜகவுக்குள் புகைந்து கிடந்தாலும், இந்த பெட்ரோல்-டீசல் விலை உயர்வு விவகாரத்தில் தற்போது மோதல் வலுவாகவே வெடித்து கிளம்ப தொடங்கிவிட்டது!!

Have a great day!
Read more...

English Summary

The conflict between BJP and AIADMK increases