10th Result: எதிர்பார்ப்பில் மாணவர்கள்.. பரபரப்பில் பெற்றோர்கள்! நாளை 10ஆம் வகுப்பு ரிசல்ட்! எப்படி பார்ப்பது?

  • சென்னை: தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த தேர்வு முடிவுகள் நாளை வெளியாக உள்ளன. அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் படித்த லட்சக்கணக்கான மாணவர்கள் தங்களது மதிப்பெண்களை அறிய தயாராகி வருகின்றனர். இந்நிலையில், மாணவர்கள் சுலபமாக தேர்வு முடிவுகளை தெரிந்த கொள்ள தமிழக பள்ளிக் கல்வித்துறை சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது. அதன்படி 5 வழிகளில் மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்..

    Advertisement

    2026ஆம் ஆண்டுக்கான 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 11ஆம் தேதி தொடங்கியது. முதல் நாளில் தமிழ் மொழித் தேர்வு நடைபெற்றது. தொடர்ந்து ஆங்கிலம், கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் உள்ளிட்ட பாடங்களுக்கான தேர்வுகள் நடத்தப்பட்டன.

    Advertisement

    இறுதித் தேர்வான சமூக அறிவியல் ஏப்ரல் 2ஆம் தேதி நடைபெற்றதுடன் தேர்வுகள் நிறைவடைந்தன. இந்த நிலையில், தேர்வு முடிவுகள் நாளை மே 20ஆம் தேதி வெளியிடப்பட உள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.

    தேர்வு முடிவுகள்

    மாணவர்கள் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதியை பயன்படுத்தி இணையதளம் மற்றும் செயலிகள் மூலம் முடிவுகளை தெரிந்து கொள்ளலாம். மாணவர்கள் தேர்வு முடிவுகளை பார்க்கக்கூடிய வகையில் 5 வழிமுறைகளை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, மாணவர்கள் தங்களது தேர்வு முடிவுகளை tnresults.nic.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். மேலும், dge.tn.gov.in என்ற இணையதளத்திலும் மதிப்பெண்கள் வெளியிடப்படும்.

    Advertisement

    டிஜிலாக்கர் செயலி

    மாணவர்கள் தங்களது மொபைலில் டிஜிலாக்கர் செயலியை பயன்படுத்தியும் தேர்வு முடிவுகளை பார்க்கலாம். டிஜிலாக்கர் செயலியை பயன்படுத்த முடியாதவர்கள் Digilocker Results Portal என்ற இணையதளத்தின் மூலமும் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம். மேலும், பள்ளி மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகளிலேயே தேர்வு முடிவுகளை அறியலாம். மேலும், மாணவர்கள் பள்ளியில் வழங்கிய கைப்பேசி எண்ணிற்கும் தேர்வு முடிவுகள் குறுஞ்செய்தி வடிவில் அனுப்பப்படும். தனித்தேர்வர்களுக்கும் அவர்கள் விண்ணப்பித்தபோது கொடுத்த மொபைல் எண்ணிற்கு தகவல் அனுப்பப்படும்.

    பள்ளிக் கல்வித்துறை

    தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ள மாணவர்கள் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதியை சரியாக பதிவு செய்ய வேண்டும். இணையதளங்களில் அதிகமானோர் ஒரே நேரத்தில் பார்க்க முயற்சிப்பதால் சில நேரங்களில் தாமதம் ஏற்படலாம் என்பதால் மாணவர்கள் பதற்றப்பட வேண்டாம் என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    Advertisement

    14417 உதவி எண்

    மேலும், தேர்வு முடிவுகள் தொடர்பாக மாணவர்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால் 14417 என்ற உதவி மைய எண்ணை தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம் என்றும் பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளில் தேர்ச்சி விகிதம் எப்படி இருக்கும், எந்த மாவட்டம் முதலிடம் பிடிக்கும், மாணவிகள் மீண்டும் அதிக தேர்ச்சி பெறுவார்களா என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

    English Summary

    Tamil Nadu Class 10 board exam results will be released tomorrow. Students can check marks online, SMS and DigiLocker.