மேஜையில் தவெக அமைச்சர்கள்.. குப்பைத் தொட்டி அருகே தொண்டர்களுக்கு உணவா?.. திருப்பத்தூரில் பரபரப்பு

  • திருப்பத்தூர்: திருப்பத்தூர் அருகே நடைபெற்ற தவெக நிகழ்ச்சியில், அமைச்சர் உள்ளிட்ட நிர்வாகிகள் மேஜையில் அமர்ந்து விதவிதமான அசைவ உணவுகளை சாப்பிட, தவெக நிகழ்ச்சிக்கு வந்த தொண்டர்களும் பொதுமக்களும் தரையிலும், குப்பைத் தொட்டி அருகேயும் அமர்ந்து உணவு சாப்பிட்டது தொர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    Advertisement

    தவெக ஆட்சிக்கு வந்து 4 மாதங்களுக்கு மேல் ஆகிறது. லஞ்சம், ஊழலற்ற நேர்மையான ஆட்சியை வழங்குவோம் என்று தவெக கூறியது. நீண்ட காலமாக தமிழக அரசியலில் ஆதிக்கம் செலுத்தி வந்த திமுக, அதிமுகவுக்கு மாற்றாக தவெகவை முன்னிறுத்தி அக்கட்சி தேர்தலை எதிர்கொண்டது. ஆட்சி மாற்றம் மட்டுமின்றி, நிர்வாகத்திலும் புதிய அணுகுமுறையை கொண்டு வருவோம் என்ற எதிர்பார்ப்பு அக்கட்சியின் ஆதரவாளர்கள் மத்தியில் நிலவியது.

    Advertisement

    தவெக 100வது நாள் சாதனை

    சட்டமன்ற தேர்தல் முடிவுகள் தமிழக அரசியலில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்திய நிலையில், தவெக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. 50 ஆண்டுகளாக ஆட்சி செய்த திராட கட்சிகளின் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்தாலும், நிர்வாகத்தில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்படவில்லை. தேர்தலுக்கு முன்பு அக்கட்சி முன்வைத்த வாக்குறுதிகள் மற்றும் ஆட்சியின் செயல்பாடுகள் குறித்து அரசியல் களத்தில் தொடர்ந்து விவாதங்கள் எழுந்து வருகின்றன.

    புதிய ஆட்சியின் செயல்பாடுகள், அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகளின் செயல்பாடுகள் ஆகியவை பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் மத்தியில் தொடர்ந்து பேசுபொருளாகி வருகிறது. இந்த நிலையில், திருப்பத்தூர் அருகே நடைபெற்ற தவெக நிகழ்ச்சியில் அமைச்சர் உள்ளிட்ட நிர்வாகிகள் மேஜையில் அமர்ந்து உணவு சாப்பிட்டதாகவும், மறுபுறம் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் குப்பைத் தொட்டி அருகே அமர்ந்து உணவு சாப்பிட்டதாகவும் வெளியாகியுள்ள வீடியோ காட்சிகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    Advertisement

    உணவு வழங்குவதில் ஏற்றத்தாழ்வா?

    தமிழக வெற்றிக் கழகம் சார்பில் திருப்பத்தூரை அடுத்த ஆதியூர் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் அரசின் 100 ஆவது நாள் சாதனை விளக்கக் கூட்டம் மற்றும் மாற்றுக் கட்சியினர் இணைப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில், அமைச்சர் உள்ளிட்ட தவெக நிர்வாகிகள் மேஜையில் அமர்ந்து விதவிதமான அசைவ உணவுகளை சாப்பிட்டனர்.

    ஆனால், நிகழ்ச்சியில் பங்கேற்ற தொண்டர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் சாப்பிடுவதற்கு போதிய இடவசதி இல்லாமல் குப்பைத் தொட்டி அருகில் உணவு அருந்தியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நிர்வாகிகள் ஒருபுறம் மேஜையில் அமர்ந்து உணவு சாப்பிடும் காட்சிகளும், மறுபுறம் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக தரையில் அமர்ந்து சாப்பிடும் காட்சிகளும் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன. இந்தக் காட்சிகள் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.

    English Summary

    A video from a TVK event in Tirupattur showing leaders dining at tables while supporters reportedly ate on the ground near garbage bins has sparked controversy on social media.