தென்காசி: தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் நடந்த ஒரு சம்பவம் தற்போது மருத்துவத்துறை வட்டாரத்திலும், சமூக வலைத்தளங்களிலும் கடும் கண்டனத்தை ஏற்படுத்தியுள்ளது. அரசு அதிகாரிகள் திடீர் ஆய்வு நடத்துவது போல, 'தவெக மருத்துரணி' என சொல்லிக் கொண்டு ஒரு பெண் உட்பட சிலர் வெள்ளை கோட் அணிந்து மருத்துவமனைக்குள் நுழைந்து விசாரணை நடத்திய சம்பவம் டாக்டர்கள் மற்றும் நோயாளிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. உணமையில் நர்ஸிங் கூட படிக்காத அந்த பெண் டீனிடம் கேள்வி கேட்டு ஆலோசனை வழங்கியிருக்கிறார். குறிப்பாக அந்த பெண் சமூக வலைதள அவதூறு பரப்பியதாக கைது செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தென்காசியில் நடந்த இந்த சம்பவத்தில், தன்னை தவெக மருத்துவ அணி நிர்வாகி என்று அறிமுகப்படுத்திக் கொண்ட பெண் ஒருவர் வெள்ளைக் கோட் அணிந்து கொண்டு, சில இளைஞர்களுடன் அரசு மருத்துவமனைக்குள் சென்றதாக கூறப்படுகிறது.
அப்போது அவர்கள் மருத்துவமனையின் அடிப்படை வசதிகள், நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சை, உள்நோயாளிகளின் எண்ணிக்கை உள்ளிட்ட விஷயங்கள் குறித்து அங்கிருந்த மருத்துவர்களிடமும் செவிலியர்களிடமும் கேள்விகள் எழுப்பியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அந்த பெண் வெள்ளை கோட் அணிந்து சென்றதால், ஆரம்பத்தில் மருத்துவமனை ஊழியர்களே குழப்பமடைந்ததாக கூறப்படுகிறது. சென்னையிலிருந்து சுகாதாரத்துறை உயரதிகாரிகள் யாரோ ஆய்வுக்கு வந்திருக்கிறார்கள் என்று நினைத்து பலரும் பதற்றத்துடன் இருந்ததாகவும் சொல்லப்படுகிறது. பின்னர் தான் அது அதிகாரப்பூர்வ ஆய்வு அல்ல என்பது தெரியவந்ததாக மருத்துவத்துறை வட்டாரங்களில் பேசப்படுகிறது. இதில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது, இந்த சம்பவம் முழுவதும் கேமராவில் பதிவு செய்யப்பட்டது தான். அந்த பெண் மருத்துவமனையை சுற்றிப் பார்த்து, நோயாளிகளிடம் "சரியாக சிகிச்சை கிடைக்கிறதா?" என்று கேட்கும் காட்சிகளும் சமூக வலைத்தளங்களில் பரவின. மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்திருந்த சில நோயாளிகள் கூட, அவரை உயரதிகாரி அல்லது மூத்த மருத்துவர் என்று நினைத்து தங்களது குறைகளை தெரிவித்ததாக கூறப்படுகிறது. பின்னர் விசாரணையில், அந்த பெண் துபாயில் பணியாற்றிய வந்த செவிலியர் என்பது தெரியவந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் அவர் உண்மையில் நர்ஸிங் படிக்கவில்லை என்பது, நர்ஸிங் மேனேஜ்மெண்ட் என்ற டிப்ளமோ படிப்பை படித்தவர் என்பதோடு, அவரைப் பற்றிய பழைய சர்ச்சைகளும் வெளிவந்துள்ளன. கரூர் பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட கூட்டநெரிசல் சம்பவம் தொடர்பாக, எந்த ஆதாரமும் இல்லாமல் சில அரசியல் குற்றச்சாட்டுகளை தனது யூட்யூப் சேனலில் வெளியிட்டதாக முன்பே புகார்கள் எழுந்திருந்தன. அந்த விவகாரத்தில் சைபர் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்ததாகவும், பின்னர் அவர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்ததாகவும் கூறப்படுகிறது. அதன்பிறகு தன்னை தவெக ஆதரவாளராக சமூக வலைத்தளங்களில் காட்டிக் கொண்டுள்ளார். இந்நிலையில், சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் நடந்த இந்த சம்பவம் குறித்து மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிரமாக விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது. "யார் என்று கூட உறுதி செய்யாமல் மருத்துவமனை விவரங்களை எப்படி வழங்கினீர்கள்? அரசு அதிகாரியா, மக்கள் பிரதிநிதியா, மருத்துவரா என்ற அடிப்படை விவரம்கூட தெரியாமல் மருத்துவர்களிடம் கேள்வி கேட்க அனுமதித்தது எப்படி?" என்று மருத்துவமனை பணியாளர்களை அதிகாரிகள் கடுமையாக எச்சரித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சம்பவம் சமூக வலைத்தளங்களிலும் பெரிய விவாதமாக மாறியுள்ளது. "ஒவ்வொருவரும் சமூக ஆர்வலர் அல்லது கட்சி நிர்வாகி என்ற பெயரில் அரசு அலுவலகங்களில் ஆய்வு நடத்த ஆரம்பித்தால், அரசு நிர்வாகம் எப்படி இயங்கும்?" என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். அரசு மருத்துவமனைகள் பொதுமக்களுக்கு சேவை செய்யும் முக்கிய இடங்கள். அங்கு அதிகாரப்பூர்வ அனுமதி இல்லாமல் யார் வேண்டுமானாலும் சென்று விசாரணை நடத்தும் நிலை உருவானால், அது மருத்துவ ஊழியர்களின் பணியையும் பாதிக்கும் என்ற கருத்தும் முன்வைக்கப்படுகிறது. அதேநேரத்தில், மக்கள் பிரதிநிதிகள் அல்லது அதிகாரப்பூர்வ குழுக்களை தவிர, அரசியல் கட்சி நிர்வாகிகள் பெயரில் யாரும் அரசு அலுவலகங்களில் திடீர் சோதனை நடத்தக் கூடாது என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது. இதனால், சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் நடந்த இந்த சம்பவம் தற்போது தமிழகம் முழுவதும் பேசப்படும் விவகாரமாக மாறியுள்ளது.அரசு மருத்துவமனை
வெள்ளை கோட் நர்ஸ்
யார் அவர்?
அவதூறு வழக்கில் கைது
அரசு மருத்துவமனை
தவெக நிர்வாகி
கடும் கண்டனம்