குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது

  • தூத்துக்குடி: தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதாக விமர்சனங்கள் அதிகரித்து வருகிறது. இதற்கிடையே இளம் பெண்ணை கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்த புகாரில் தவெக நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார். வேலை வாங்கி தருவதாகச் சொல்லி இளம்பெண்ணைக் கூட்டுப் பலாத்காரம் செய்ததாகப் புகார் முன்வைக்கப்பட்டுள்ளது..

    பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க மத்திய, மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருந்த போதிலும் அதையும் தாண்டி பாலியல் குற்றங்கள் தொடர்ந்து நடந்தே வருகிறது. இதுபோன்ற குற்றங்கள் புதிதாக அமைந்துள்ள விஜய் அரசுக்கு குடைச்சலை கொடுப்பதாகவே இருக்கிறது. இதற்கிடையே பாலியல் புகாரில் தவெக நிர்வாகி ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

    கூட்டுப் பலாத்காரம்

    பாதிக்கப்பட்ட இளம் பெண் தூத்துக்குடி மாவட்டம் ஏரல் தாலுகா பகுதியைச் சேர்ந்தவர் ஆவார். "நல்ல வேலை வாங்கித் தருவதாக" ஆசை வார்த்தைகளைக் கூறி, தவெக நிர்வாகிகள் இந்த பெண்ணை பலாத்காரம் செய்துள்ளனர். வேலை வாங்கி தருவதாகச் சொல்லி காரில் அழைத்துச் சென்று தவெக நிர்வாகியும் அவரது நண்பரும், ராமநாதபுரம் அருகே உள்ள ஏர்வாடி பகுதியில் இருக்கும் ஒரு தனியார் விடுதிக்கு அந்தப் பெண்ணை கூட்டிச் சென்று அறை எடுத்துத் தங்கியுள்ளனர்.

    அங்கு அந்தப் பெண்ணிற்குத் தெரியாமல் அவர் குடித்த குளிர்பானத்தில் மயக்க மருந்தைக் கலந்து கொடுத்துள்ளனர். பெண் மயங்கிய நிலையில், இருவரும் கூட்டுப் பலாத்காரம் செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட பெண் மயக்கம் தெளிந்ததும் ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து கண்ணீருடன் புகார் அளித்தார். மகளிர் போலீசார் நடத்திய அதிரடி முதற்கட்ட விசாரணையில் குற்றவாளிகள் இருவர் சிக்கினர்.

    தவெக நிர்வாகிகள்

    இது தொடர்பாகத் தமிழக வெற்றிக் கழகத்தின் தூத்துக்குடி மேற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் பாலமுருகன் கைது செய்யப்பட்டுள்ளனர். அவரது நெருங்கிய நண்பரான ராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்த ஜெயபால் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார். இவரும் தவெக நிர்வாகி என சொல்லப்படுகிறது.

    மகளிர் காவல் நிலையப் போலீசார் இவர்கள் இருவர் மீதும் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, இருவரையும் அதிரடியாகக் கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட தவெக நிர்வாகிகள் இருவரும் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    குற்றங்கள்

    கடந்த சில தினங்களுக்கு முன்புதான் இதே தூத்துக்குடி ஆறுமுகநேரி காவல் நிலைய பெண் காவலர் ஒருவருக்கு இன்ஸ்பெக்டரே பாலியல் தொல்லை கொடுத்ததாகப் புகார் எழுந்தது. இந்த விவகாரத்தில் அந்த இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். சிங்கப்பெண்ணுக்கே பாதுகாப்பில்லை எனப் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் உட்படப் பலரும் தவெக அரசை சாடியிருந்தார்.

    அந்தப் புயல் ஓயும் முன்பே, தவெகவின் மாவட்ட அளவிலான முக்கிய இளைஞரணி நிர்வாகியே இத்தகைய மிகக் கொடூரமான கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதாகி சிறைக்குச் சென்றிருப்பது, அரசியல் வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

    English Summary

    Thoothukudi police arrested TVK youth wing leader Balamurugan and his associate Jayapal over assault case(தூத்துக்குடி பலாத்கார வழக்கில் தவெக நிர்வாகிகள் கைது): Thoothukudi woman assault Case latest news in tamil.