மருத்துவ மாணவர்களுக்கு நேர்ந்த கொடூரம்.. பொன்னேரி அருகே கார் கவிழ்ந்து பலி!

  • திருவள்ளூர்: பொன்னேரி அருகே தனியார் மருத்துவக் கல்லுாரி மாணவர்கள் சென்ற கார், சாலையோர தடுப்பில் மோதி கவிழ்ந்ததில், 2 மாணவர்கள் பரிதாபமாக பலியாகினர். மேலும், இரு மாணவர்கள் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    Advertisement

    மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த அம்ரித் (23), தருமபுரியை சேர்ந்த சரண் (23), கேரள மாநிலத்தை சேர்ந்த முகேஷ் (24) மற்றும் அபான் (24) ஆகியோர், திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அடுத்த மஞ்சங்கரணையில் உள்ள தனியார் மருத்துவ கல்லுாரியில், எம்.பி.பி.எஸ் மூன்றாமாண்டு படித்து வந்தனர்.

    Advertisement

    இவர்கள் பொன்னேரியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி, கல்லுாரிக்கு சென்று வந்தனர். நான்கு பேரும், சென்னைக்கு சென்றுவிட்டு காரில், சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை வழியாக நேற்று முன்தினம் இரவு, பொன்னேரிக்கு திரும்பிக்கொண்டிருந்தனர். சோழவரம் அடுத்த காரனோடை மேம்பாலத்தில் சென்றபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார், இடதுபுற சாலையோர தடுப்பில் மோதி, கவிழ்ந்தது.

    இதில், காரின் முன்பகுதி மற்றும் பக்கவாட்டு பகுதிகள் கடுமையாகச் சேதமடைந்தன. இந்த விபத்தில், அம்ரித் மற்றும் சரண் ஆகியோர், காரின் இடிபாடுகளில் சிக்கி, சம்பவ இடத்திலேயே பலியாகினர். வாகனத்தை ஓட்டி வந்த முகேஷ், அவரது இருக்கைக்கு பின்னால் அமர்ந்திருந்த அபான் ஆகியோர், காயங்களுடன் தப்பினர்.

    Advertisement

    தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார், காயமடைந்த இருவரையும் மீட்டு, அவர்கள் படிக்கும் மருத்துவக் கல்லுாரியிலே உடனடியாக சிகிச்சைக்கு சேர்த்தனர். விபத்தில் இறந்த அம்ரித் மற்றும் சரண் ஆகியோரது சடலங்களை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக, சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். விபத்து குறித்து, செங்குன்றம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

    English Summary

    Two students from a private medical college tragically lost their lives when the car they were traveling in crashed into a roadside barrier and overturned near Ponneri. Two other students sustained severe injuries and are undergoing treatment.