சென்னை: கடந்த காலங்களில் SC/ST நிதி வேறு துறைகளுக்கு பயன்படுத்தப் பட்டது என்ற குற்றச்சாட்டு உண்மையல்ல, அது வெறும் அவதூறு என்று அமைச்சர் வன்னி அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். எஸ்சி, எஸ்டி துறைகளுக்கான நிதி வேறு யாருக்கும் பயன்படுத்தப்படவில்லை என்று கூறிய வன்னி அரசு, இந்த பட்ஜெட்டில் எங்கள் துறைக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய பரிந்துரைத்துள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.
திமுக ஆட்சியின் போது எஸ்சி, எஸ்டி நிதி வேறு துறைகளுக்கு பயன்படுத்தப்பட்டதாக தொடர்ச்சியாக குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டு வந்தது. தற்போது தவெக ஆட்சியில் சமூகநீதித்துறை விசிகவின் வன்னி அரசு வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே சமூக நீதி விடுதிகளில் வன்னி அரசு ஆய்வு மேற்கொண்டு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்திருந்தார்.
அதேபோல் கோவை தொண்டாமுத்தூர் அருகே அண்ணா நகர் பகுதியில் 21 ஆண்டுகளாக பொது போக்குவரத்து வசதி இல்லாமல் இருந்தது. தற்போது அமைச்சர் வன்னி அரசு தலையீடு காரணமாக முதல்முறையாக தங்கு தடையின்றி அப்பகுதியில் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் அமைச்சர் வன்னி அரசின் செயல்பாடுகள் மீது பலரின் கவனத்தை திருப்பியுள்ளனர். இந்த நிலையில் திண்டிவனத்தில் செய்தியாளர்களை சந்தித்து அமைச்சர் வன்னி அரசு பேசுகையில், எஸ்சி, எஸ்டி நிதி வேறு துறைகளுக்கு பயன்படுத்தப்பட்டதாக தொடர்ச்சியாக எழுந்த குற்றச்சாட்டுகள் பொய்யானது. இந்த துறை என் வசம் வந்த பின்னரே எனக்கு தெரிய வந்தது. எந்த நிதியும் வேறு துறைகளுக்கு போகவில்லை. அந்த நிதி பட்டியலின மக்களுக்கு தான் சென்று சேர்ந்துள்ளது. எஸ்சி, எஸ்டி துறைகளுக்கான நிதி வேறு யாருக்கும் பயன்படுத்தப்படவில்லை. இது அவதூறு பரப்புவதுதான். ஆதிதிராவிடர் நலத்துறைக்கு ஒதுக்கப்பட்ட நிதி வேறு துறைகளுக்கு பயன்படுத்துவதில்லை. இம்முறை கூடுதல் நிதியை நாங்கள் கேட்க முடிவு செய்துள்ளோம். கடந்த காலங்களை விட பழங்குடி மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை மூலமாக என்னென்ன தேவைகள் இருக்கிறதோ, அதனை செய்வோம். குறிப்பாக விடுதிகள் உருவாக்கப்படும். அம்பேத்கர் அயலக கல்வி திட்டம் மூலமாக 216 பேர் விண்ணப்பித்து, அவர்கள் மேற்படிப்பு சென்றிருக்கிறார்கள். இம்முறை விண்ணப்பித்த அனைவருக்கும் அந்த துறை சார்பாக ஸ்காலர்ஷிப் கொடுக்கப்படும். அதற்கு பரிந்துரை செய்துள்ளோம். இந்த பட்ஜெட்டில் கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என்று பேசியுள்ளதாக தெரிவித்துள்ளார்.