செங்கல்பட்டு: முதல்வர் விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை முடித்து வைப்பதாக செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றம் அறிவித்துள்ளது. விவாகரத்து வழக்குக்காக காணொலி வழியே ஆஜரான சங்கீதா, சுமார் 20 நிமிடங்கள் நீதிபதியிடம் தனது வாதங்களை முன்வைத்துள்ளார். அந்த வாதங்களின் முடிவில் விவாகரத்து மனுவை வாபஸ் பெறுவதாக கூறி இருக்கிறார். இதனை கேட்டு கொண்ட நீதிபதி சுஜாதா, வழக்கை முடித்து வைத்துள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் விஜய்யிடம் இருந்து விவாகரத்து கோரி அவரது மனைவி சங்கீதா செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். சங்கீதா தாக்கல் செய்திருந்த விவாகரத்து மனுவில், முதல்வர் விஜய் மீது மிகக் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார். கடந்த 2021ஆம் ஆண்டில், விஜய் ஒரு பிரபல நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவில் இருந்ததை தான் கண்டுபிடித்ததாக சங்கீதா கூறி இருந்தார்.
அதுமட்டுமல்லாமல் அந்த உறவை கைவிடுவதாக விஜய் தனக்கு உறுதியளித்த போதிலும், எவ்வித குற்ற உணர்ச்சியும் இன்றி அவர் தொடர்ந்து அந்த நடிகையுடன் பழகி வந்ததாகக் குற்றம் சாட்டினார். அதுமட்டுமல்லாமல் இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியான போது, அவை தனக்கும் தனது பிள்ளைகளான ஜேசன் சஞ்சய் மற்றும் திவ்யா சாஷாவுக்கும் மனஉளைச்சலை ஏற்படுத்தியதாக வேதனை கூறினார். இந்த விவாகரத்து வழக்கு ஜூன் 15ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது இரு தரப்புமே நேரில் ஆஜராகவில்லை. வழக்கறிஞர் மூலமாகவே வாதிட்டனர். அப்போது நீதிபதி சுஜாதா, சங்கீதா தரப்பு வழக்கறிஞரிடம், நீங்கள் ஏன் வக்காலத்து தாக்கல் செய்யவில்லை என்று கேள்வி எழுப்பி இருந்தார். இதனைத் தொடர்ந்து இருவரையும் சமரச மையத்துக்குத்தான் அனுப்ப வேண்டும் என்றும் உத்தரவிட்டார். அதேபோல் விவாகரத்தை வழக்கை ஆகஸ்ட் 7ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார். இந்த நிலையில் விவாகரத்து வழக்கு இன்று மீண்டும் நீதிபதி சுஜாதா முன் விசாரணைக்கு வந்தது. இம்முறையும் விஜய் நேரில் ஆஜராகவில்லை. அப்போது முதல்வர் விஜய் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சட்டசபை நடப்பதால் விவாகரத்து வழக்கை வேறு தேதிக்கு ஒத்திவைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். ஆனால் சங்கீதா தரப்பில், இன்றே விசாரிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் பிற்பகலுக்கு விசாரணையை ஒத்திவைத்தது. இதன்பின் பகல் 12.30 மணியளவில் மீண்டும் விசாரணை தொடங்கியது. மூடப்பட்ட அறையில் விஜய் மற்றும் சங்கீதா தரப்பு வழக்கறிஞர்களுக்கு மட்டுமே நீதிமன்றத்தில் அனுமதி அளிக்கப்பட்டது. பின்னர் காணொலி வாயிலாக ஆஜரான சங்கீதா, சுமார் 20 நிமிடங்கள் நீதிபதியிடம் தனது வாதங்களை முன்வைத்துள்ளார். அந்த வாதங்களின் இறுதியில் சங்கீதா, தனது விவாகரத்து மனுவை வாபஸ் பெறுவதாக கூறி இருக்கிறார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி சுஜாதா, விஜய் - சங்கீதா விவாகரத்து மனுவை முடித்து வைப்பதாக அறிவித்துள்ளது.